Published:Updated:

இரண்டு லட்டு திங்க ஆசையா..!

கிருஷ்ணகிரி பி.ஜே.பி. கலகலமேற்கு மண்டலம்

பிரீமியம் ஸ்டோரி

கொஞ்சம்கூட பயமே இல்லாமல் தமிழக சட்டசபைத் தேர்தலை

##~##
சந்திக்கிறது பி.ஜே.பி. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பி.ஜே.பி. சார்பில் ஓசூர் மற்றும் தளி சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஓசூரில் நடந்தது. தலைமையேற்று நடத்தினார், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்!

 அப்போது அவர், ''தளி, ஓசூர் இரண்டும் நம் கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் இங்கே நாம் வெற்றிபெற நம் கட்சியினர் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். பிரசாரத்துக்காக நம் கட்சியின் பல முக்கியத் தேசியத் தலைவர்களை எல்லாம் அழைத்து வருவது என் பொறுப்பு...'' என்று லோக்கல் பி.ஜே.பி-யினருக்கு உற்சாக டானிக் கொடுத்துவிட்டுக் கிளம்ப... தொண்டர்கள் சுறுசுறுப்​பாகத் தேர்தல் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.

'சரி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் லென்ஸ் வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பி.ஜே.பி-க்கு, இந்தப் பகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பு எப்படி சாத்தியம்..?’ - என்ற கேள்வியுடன் இந்தத் தொகுதி​களின் நிலவரம் குறித்து விசாரணையில் இறங்கினோம்.

இரண்டு லட்டு திங்க ஆசையா..!

இங்குள்ள சீனியர் பி.ஜே.பி. பிரமுகர்கள் சிலரிடம் கேட்டபோது, ''பொதுவா ஓசூர், தளி ரெண்டு தொகுதி​களிலுமே தேசியக் கட்சிகள்தான் அதிகமுறை ஜெயிச்சிருக்கு. 1951-ல் உருவான ஓசூர் தொகுதி, 13 முறை சட்டமன்றத் தேர்தல்களை சந்திச்சிருக்கு. அதில் எட்டு முறை காங்கிரஸும், தலா இரண்டு முறை சுதந்திரா கட்சி மற்றும் சுயேச்சைகளும், ஒரு முறை ஜனதாதளமும் வெற்றி பெற்றது. 2001 சட்டமன்றத் தேர்தல்ல பி.ஜே.பி. குறைவான ஓட்டு வித்தியாசத்துல வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுருச்சு.

அதேமாதிரி 1977-ல் உருவான தளி தொகுதி, இதுவரை எட்டுத் தேர்தல்களை சந்திச்சிருக்கு. அதுல காங்கிரஸ் நாலு தடவையும், ஜனதா கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சி, பி.ஜே.பி. மற்றும் சுயேச்சை ஆகியவை தலா ஒவ்வொரு முறையும் வெற்றியடைஞ்சிருக்குது. இன்னொரு முக்கியமான விஷயம்,

இரண்டு லட்டு திங்க ஆசையா..!

இந்த ரெண்டு தொகுதியிலயுமே தி.மு.க. இது வரை நேரடியா போட்டியிட்டதே இல்ல. ஓசூரில் மட்டும் கடந்த 2006-ல் அ.தி.மு.க. நின்னு ரெண்டாவது இடம் பிடிச்சது. மொத்தமா கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, இங்கே எப்பவுமே தேசிய கட்சிகளுக்குத்தான் செல்வாக்கு! ஓசூரைப் பொறுத்தவரை, தொடர்ந்து பத்து வருஷம் எம்.எல்.ஏ-வா இருக்குற காங்கிரஸின் கோபிநாத், தொகுதிக்குப் பெருசா எதையுமே செய்யலையேங்கிற குறை மக்கள்கிட்ட இருக்கு. அதனால கஷ்டப்பட்டு நாங்க உழைச்சோம்னா, கண்டிப்பா ஓசூரில் பி.ஜே.பி. ஜெயிக்க பெரிய வாய்ப்பு இருக்கு. அதேபோல தளி தொகுதியிலும் எங்களோட உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கும்னு நிச்சயம் நம்பறோம்!'' என்று காரணங்களை அடுக்கினர்.

இது ஒருபுறம் இருக்க, ஓசூரைச் சேர்ந்த ஒரு சில அ.தி.மு.க-வினரோ, ''ஆளும் கட்சி​யின் திட்டங்களை அ.தி.மு.க-காரங்களே வாய்விட்டுப் பாராட்டும் கூத்தெல்லாம் இங்கே​தான் நீங்க பார்க்க முடியும்! அந்த அளவுக்குத் தொழில்ரீதியா தி.மு.க-வினரோடு நிறைய ரகசியத் தொடர்புகளை எங்க கட்சிக்காரங்க சிலர் வச்சிருக்காங்க. ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, எங்க நிர்வாகிங்க சரியா அரசியல் செஞ்சிருந்தா, இந்நேரம் ஓசூரில் அ.தி.மு.க. செல்வாக்கு பன்மடங்கு பெருகி இருக்கும். ஆனா, பெரும்பாலானவங்க வருமானத்தை மட்டும்தான் குறி வைக்கிறாங்களே ஒழிய, கட்சியை நினைச்சுப் பார்த்ததே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, பி.ஜே.பி-​யைவிட இங்கே எங்க கட்சியின் வளர்ச்சி ரொம்பவும் குறைவுதான்!'' என்கிறார்கள் வருத்தத்துடன்.

பி.ஜே.பி-யின் மாவட்டச் செயலாளரான நாகராஜனிடம் பேசியபோது, ''எங்க மாநிலத் தலைவர், 'கொள்​கைகளுக்கு ஒத்துப்போகும் கட்சிகள் அமைந்தால் கூட்டணி. இல்லையெனில் தனிச்சே 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம்’னு முடிவு எடுத்து இருக்கார். ஓசூர், தளி தொகுதிகளில் நாங்கதான் ஜெயிக்கப் போறோம். கர்நாடகாவின் ஆளும்​கட்சியான பி.ஜே.பி-யினரும்கூட எங்களுக்கு பொருளாதாரம் மற்றும் உழைப்பு என இரண்டு விதத்திலும் உதவத் தயாரா இருக்காங்க. பொறுத்திருந்து பாருங்க, எங்க தேர்தல் பணிகளை!'' என்றார் நம்பிக்கையுடன்.

மேலும், அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான நரேந்திரன், ''2003-லும் அதற்கு முன்பும் அத்வானியின் ரதயாத்திரை தேன்கனிகோட்டை, தளி பகுதிகளுக்கு வந்தப்போ, திரண்ட மக்கள் கூட்டத்தைப் பத்தி நாங்க இப்ப சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்குக் கூட்டமோ கூட்டம்! மத்த கட்சிகளே அந்தக் கூட்டத்தைக் கண்டு வாய்பொளந்து நின்னாங்க. காரணம், இந்தப் பகுதி மக்களின் தேசிய உணர்வு அப்படிப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இங்கே எங்க கட்சி படிப்படியா நல்ல வளர்ச்சி கண்டிருக்கு. வரும் தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியே ஆகணும்னு அகில இந்திய பி.ஜே.பி. நிர்வாகிகள் முடிவெடுத்து இருக்காங்க. அதற்கான வழிகாட்டுதல்களும் தயாராகி வருது. எங்க கட்சி வேட்பாளர்கள் இங்கே வெற்றிபெறுவது உறுதியான விஷயம்!'' என்றார் அசால்ட்டாக.

இதெல்லாம் அதீத நம்பிக்கையா... நிஜமா என்பதை தேர்தல் சொல்லிவிடும்!

- எஸ்.ராஜாசெல்லம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு