Published:Updated:

''சிக்னலில் நிற்பது கேவலமா?''

அச்சத்தில் பொதுமக்கள்

''சிக்னலில் நிற்பது கேவலமா?''

அச்சத்தில் பொதுமக்கள்

Published:Updated:
##~##
''சிக்னலில் நிற்பது கேவலமா?''

'ஏத்திடுவியோ... என் சாதிக்காரன் உன்னை சும்மா வுட்டுருவானோ...’ என, 'முதல்வன்’ படத்தில் பஸ்ஸுக்கு குறுக்கே படுத்தபடி டிரைவர் ஒருவர் சவால் விடுவார். இன்று அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 13-ம் தேதி மதியம் கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் ஒரு பேருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் உள்ள டிராஃபிக் சிக் னலைக் கடந்து வேகமாக வந்துள்ளது. அப்போது வடபழனியில் இருந்து கோயம்பேட்டைக் கடந்து சென்ற பைக் மீது மோதுவதுபோல் சென்று, பிரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார் டிரைவர் சங்கர். பைக்கில் சென்ற மூர்த்தி மற்றும் மணிவண்ணன் ஆகியோருக்கும் பேருந்து ஓட்டுனர் சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. டிரைவர் சங்கரை இருவரும் தாக்க, பதிலுக்கு மற்ற மாநகரப் பேருந்து ஊழியர்கள் சேர்ந்து மூர்த்தி மற்றும் மணிவண்ணனைத் தாக்கி உள்ளனர்.

''சிக்னலில் நிற்பது கேவலமா?''

இந்தச் சம்பவத்தை அடுத்து, கோயம்பேடு நூறடி சாலையில் சென்ற 50-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்​பட்டன. பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பேருந்து நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. டிரைவர் சங்கரைத் தாக்கிய மூர்த்தி மற்றும் மணிவண்ணனை  கோயம்பேடு பேருந்து நிலையக் காவலர்கள் கைதுசெய்த பிறகும்கூட,  பேருந்தை இயக்கவில்லை. இதனால், கோயம்பேடு பகுதி மூன்று மணி நேரம் ஸ்தம்பித்தது. இதனால், வெகுண்டு எழுந்த வாகன ஓட்டிகள் சாலை நடுவில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துகளைத் தாங்களே இயக்கி சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். பயணிகள் பாடு  பரிதாபம். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த மக்கள், டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராகக் கொந்தளிக்க... போக்குவரத்து ஊழியர்களுடன் அவசர அவசரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் போக்குவரத்துத் துறை அதிகாரிகள். அதன்பிறகே அனைத்துப் பேருந் துகளும் இயக்கப்பட்டன.

அந்தப் பகுதி கடைவாசிகள் சிலருடன் பேசினோம். ''இந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும், பெரும்பாலான டிரைவர்கள் சிக்னலை மதிக்​காமல் செல்கின்றனர். சிக்னலில் நிற்பது அவர்களைப் பொருத்தவரை கேவலம் என்று நினைக்கின்றனர். போக்குவரத்துப் போலீஸாரும் அரசுப் பேருந்துகளைக் கண்டுகொள்வது இல்லை. மீறிக் கேட்டால் தகராறு வரும்... நமக்கு எதுக்கு வம்பு என்று இருந்து விடு கிறார்கள். யார் தாக்கினாலும் சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதுதான் நியாயம். டிரைவர் சங்கரும் அதைத்தான் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி மக்களுக்கும் இடையூறு செய்துவிட்டனர். எத்தனையோ பேர் என்னென்ன வேலைகளுக்காகவோ  போய்க்கொண்டு இருந்திருப்பார்கள். அவர்களது வேலைகள் எல்லாம் தடைபட்டு இருக்கும். வய தானவர்களும் மாணவர்களும் சிரமப்பட்டு நடந்து சென்றனர். அவசரமாக செல்ல வேண்டிய ஆம் புலன்ஸ் கூட இந்த திடீர் மறியலால் ஸ்தம்பித்தது. இனி எந்த டிரைவர் மறியல் செய்தாலும் அவரை கைது செய்ய வேண்டும்'' என்றனர் கொதிப்புடன்.

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி, ''தாக்கப்​பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும்கூட, பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று அனைத்து டிரைவர்களும் மறியல் நடத்தியது முறையற்ற செயல். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க... போக்குவரத்துத் துறையினரும் அரசும் தங்கள் ஊழி யர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும். இல்லைஎனில், வழக்குத் தொடுத்தேனும் இதற்கு ஒரு தீர்வு காண்பேன்'' என்று சீறினார்.

போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத் தலைவர் சந்திரனிடம் பேசினோம். ''மக்களின் சிரமம் எங்களுக்கும் தெரியும். அதேநேரத்தில், எங்கள் நிலை யையும் உணர வேண்டும். மக்கள் ஊழியரான டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு மக்கள்தானே பாதுகாப்பு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் தினமும் பல இடங்களில் டிரைவர்கள் தாக்கப்படுகின்றனர். கோயம்பேட்டில் மறியல் நடந்த அன்று இரவு, மேலும் இரண்டு இடங்களில் டிரைவர்களின் மண்டை உடைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடந்தால், தொழிலாளர்​களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்படும். அதனால்தான் மறியல் நடத்தினோம். அரசுப் பேருந்துகள் அனைத்தும் சிக்னலில் நிற்பது இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நேர நெருக்கடி பிரச்னையை சமாளிக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஊழியர்கள் அப்படிச் சென்று இருக்கலாம். அதுவும் டிரைவர்களின் தவறு அல்ல. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தங்கள் அறையை விட்டு வெளியே வருவது இல்லை. ரோட்டுக்கு வந்து டிரைவர், நடத்துனர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று அவர்கள் பார்க்காததுதான்  காரணம்'' என்றார்.  

பொதுமக்களை பரிதவிக்கவிடும் தவறை இனியாவது போக்குவரத்துத் துறை ஊழியர்கள் செய்யாமல் இருப்பார்களா?

- தி.கோபிவிஜய், படம்: ஜெ.வேங்கடராஜ்