Published:Updated:

விபத்தா? சதி வேலையா?

பற்றி எரியும் காஞ்சிபுரம்

விபத்தா? சதி வேலையா?

பற்றி எரியும் காஞ்சிபுரம்

Published:Updated:
##~##
விபத்தா? சதி வேலையா?

காஞ்சிபுரத்தில் ஐந்து அரசு பேருந்துகள் எரிந்த சம்பவம் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்து இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 11-ம் தேதி நள்ளிரவு ஒரு மணி. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் தன் பரபரப்பில் இருந்து விலகி உறங்கிக்கொண்டு இருந்தது. சென்னையில் இருந்து வந்த கடைசிப் பேருந்து வழக்கமான பராமரிப்பு முடிந்து, காலையில் கிளம்புவதற்காகப் பேருந்து நிலையத்தில் வந்து நிறுத்தப்பட்டது. அப்போது அதன் டிரைவர் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த 1058 என்ற எண் கொண்ட பேருந்தில் ஏதோ வெளிச்சத்தைப் பார்த்தார். எட்டிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. பேருந்தின் 6-வது இருக்கை எரிந்துகொண்டு இருந்தது. பதறியடித்தபடி சத்தம்போட, மற்ற ஊழியர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். வண்டி டெப்போவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊழியர்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில், அடுத்த அதிர்ச்சி.

விபத்தா? சதி வேலையா?

பேருந்து நிலையத்தில் இருந்து ஓடிவந்த சிலர், மேலும் சில பேருந்துகளும் தீப்பற்றி எரிவதாக அலறினர். அங்கு 1615, 1533, 1535, 1029 என்ற எண்களைக்கொண்ட வண்டிகள் பெரிய புகை மூட்டத்துக்கு இடையே எரிந்துகொண்டு இருந்தன. ஊழியர்கள் சமயோசிதமாக அடுத்தடுத்து நின்றிருந்த மற்ற பேருந்துகளை அப்புறப்படுத்தியதால், சேதம் தவிர்க்கப்பட்டது. தீயை அணைக்க முடியாததால், தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டும் அந்த நான்கு பேருந்துகளைக் காப்பாற்ற முடியவில்லை. சேதத்தின் மதிப்பு 40 லட்ச ரூபாய் எனக் கணக்கிடப் பட்டு உள்ளது.

விபத்தா? சதி வேலையா?

பெயர் குறிப்பிட விரும்பாத போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர், ''காஞ்சிபுரம் பணிமனையின் கட்டுப்பாட்டில் 104 பேருந்துகள் இருக்கின்றன. அதில் 40 பேருந்துகள் வெளியூரில் டூட்டி முடிகிற இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இங்கு ஒரே நேரத்தில் 30 பேருந்துகளுக்கு மேல் நிறுத்தமுடியாது. அதனால், இரவில் பணிமனைக்குத் திரும்பும் வண்டிகள்... சுத்தம் செய்வது, டீசல் நிரப்புவது என

விபத்தா? சதி வேலையா?

வழக்கமான சம்பிரதாயங்களுக்குப் பின் ஓரிக்கை பணிமனையிலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப்படும். பேருந்து நிலையத்தில் இரவில் வாகனங்களை நிறுத்திவைப்பது பாதுகாப்பானது அல்ல. பேருந்துகள் நிறுத்தும் வசதியோடு பணிமனை அமைக்கப்பட்டு இருந்தால் யாரும் அத்துமீறி இருக்க முடியாது. எங்கள் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்தும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதன் விளைவுதான் இந்த எரிப்பு சம்பவம்'' என்றார் காட்டமாக.

இது ஒரு சதிச் செயல் என்றே போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒருமித்த குரலில் சொல்கின்றனர். காவல் துறையும் அந்தக் கோணத்திலேயே விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. முதல் பேருந்தில் தீ கிளம்பி அடுத்த 20 நிமிட இடைவெளியில் ஒரே நேரத்தில் நான்கு பேருந்துகளும் எரிந்தது சந்தேகத்தைக் கிளப்புகிறது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடய அறிவியல் வல்லுனர்கள், எரிந்த பேருந்துகளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தனர்.

தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவர், ''முதல் பேருந்தை போக்குவரத்து ஊழியர் பார்த்தபோது 6-வது வரிசையில் தீ பற்றத் தொடங்கியதாகச் சொல்லி இருக்கிறார். முன்பக்க படிகளின் கீழே பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். அதனால், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அடுத்தடுத்த பேருந்துகளிலும் தீ ஏற்பட்டு இருப்பதால், இதை விபத்து என்றும் நினைக்க முடியாது. முதல் பேருந்தை அணைத்து, டெப்போவுக்கு எடுத்துச்சென்ற 20 நிமிடங்களுக்குப் பின் மற்ற நான்கு வண்டிகள் எரிந்துள்ளன. எரிந்த பேருந்துகளில் ஏற்பட்ட பாதிப்புகளும் சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இது விஷமிகளின் சதிவேலையே'' என்றார்.

இதனிடையே எரிந்த வண்டிகளில் இருந்து ஒருவகை வேதிப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை சமீபத்தில் மாவட்டத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தோடும் முடிச்சுப்போட்டுப் பேசுகிறது ஒரு தரப்பு. ''சமீபத்தில் கல்பாக்கம் அருகே சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் கட்டித்தந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இது மோதலாகி காவல் துறை தடியடி நடத்தும் அளவுக்குச் சென்றது. இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தது காவல் துறை. அதைக் கண்டிக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட யாரோ சிலர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்'' என்கின்றனர்.  

இதனிடையே தொழிற்சங்க விவ​காரம் ஒன்றும் இந்த சம்பவத்தோடு கிசுகிசுக்கப்படுகிறது. போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே செல்வாக்கு பெற்ற இரு சங்கத்தினர் இடையே சமீப காலமாக பலத்த முட்டல் மோதல்கள் நடந்துகொண்டு இருப்பதாகவும், அந்த மோதலின் எதிரொலியாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் காதைக் கடிக்கின்றனர்.

மாவட்ட எஸ்.பி-யான சேவியர் தன்ராஜ், ''ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தா அல்லது நாச வேலையா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வெடிப்பொருட்களோ, வேதிப்பொருட்களோ பேருந்தில் கையாளப்படவில்லை என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மஞ்சள் நிற இருக்கைகள் உருகி, ஏதோ ஒரு வேதிப்பொருள் போன்ற தோற்றத்தை தந்திருக்கிறது. கல்பாக்கம் சம்பவத்தின் எதிரொலியாக நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

மர்ம முடிச்சுகளை சீக்கிரம் அவிழுங்கள்!

- எஸ்.கிருபாகரன்