Published:Updated:

கடத்தப்பட்ட 'ஹீரோ'... கம்பி எண்ணும் 'வில்லன்'!

திருச்சி தில்லாலங்கடி

கடத்தப்பட்ட 'ஹீரோ'... கம்பி எண்ணும் 'வில்லன்'!

திருச்சி தில்லாலங்கடி

Published:Updated:
##~##
கடத்தப்பட்ட 'ஹீரோ'... கம்பி எண்ணும் 'வில்லன்'!

 காதல் எதையும் செய்ய வைக்கும் என்பதற்கு இந்த திருச்சி சம்பவம் ஓர் உதாரணம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவர், கல்லூரிப் பேராசிரியர், முனைவர் என சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்களைக் கொண்ட குடும்பம் அது. திடீரென ஒரு நாள் அந்த வீட்டுக்குள் போலீஸ் நுழைந்து, அந்த வீட்டிலுள்ள இளைஞர் ஒரு வரை வழிப்பறி வழக்கில் கைது செய்ததை அந்தப் பகுதி மக்களால் நம்ப முடியவில்லை. அந்த இளைஞர் வழிப்பறி செய்ததற்குக் காரணம், ஒரு பெண்.

தொடர்கிறது.. ப்ளாஷ் பேக்..

சரவணன், பி.சி.ஏ. படித்த இளைஞர். காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் குடிக்கப் பழகுகிறார். மூன்று மாதங்களுக்கு முன், திருச்சியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சட்டக் கல்லூரி மாணவரான பாலாஜி என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.  பாலாஜியிடம் தன்னை 'அஸிஸ்டென்ட் டைரக்டர் டேவிட்’ என அறிமுகம்செய்து கொள்கிறார் சரவணன். 'டைரக்டர் செல்வராகவன் சார்கிட்டதான் வொர்க் பண் றேன். உனக்கு நடிப்பதற்கு ஆசை இருந்தால் சொல். நான் சிபாரிசு செய்து உன்னை சினிமா நடிகராக ஆக்கி விடுகிறேன்’ என பாலாஜிக்கு ஆசை  காட்டுகிறார் சரவணன். பாலாஜிக்கும் சினிமா ஆசை எட்டிப் பார்க்க, இருவரும் திருச்சியில் அடிக்கடி சந்தித்து மதுபானக் கூடங்களில் கூடிக் கலை கிறார்கள்.

கடத்தப்பட்ட 'ஹீரோ'... கம்பி எண்ணும் 'வில்லன்'!

சட்டக் கல்லூரி மாணவரான பாலாஜியின் சொந்த ஊர் அரியலூர். அவரும் சினிமா ஆசையில் விதவிதமான தோற்றத்தில் போட்டோ எடுத்து சரவணனிடம் கொடுக்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி பாலாஜியை மதியம் 4 மணி வாக்கில் காவிரி ஆற்றின் ஓயாமாரி படித்துறைக்கு அழைத்துச் சென்ற சரவணன், அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து மயங்கச் செய்கிறார். பிறகு கை, கால்களை கட்டிப்போட்டு, அவர் அணிந்திருந்த செயின், பிரேஸ்லெட், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடுகிறார்.

மயக்கம் தெளிந்த பாலாஜி தனது பெற்றோருக்குத் தகவல் தெரிக்க, அவர்கள் வந்து அரியலூர்

கடத்தப்பட்ட 'ஹீரோ'... கம்பி எண்ணும் 'வில்லன்'!

மருத்துவமனையில் சிகிச்சையளித்து, பிறகு திருச்சி கோட்டை போலீஸில் புகார் செய்கின்றனர். கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் பாலாஜியும் சரவணனும் அடிக்கடி சந்திக்கும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் சி.சி.டி.வி. கேமரா பதிவிலிருந்து அவனை அடையாளம் காண்கின்றனர். பிப்ரவரி 11-ம் தேதி அந்த ஹோட்டலின் பாருக்கு மது அருந்த வந்த சரவணனை அடையாளம் கண்டு மடக்கி பிடிக்கிறது காவல்துறை.

''எனது அக்காவிடம் டியூஷன் படிப்பதற்காக வந்த ஏழை மாணவி ஒருத்தி மீது எனக்கு காதல் ஏற்பட்டது. நான் அவளது படிப்புக்காகவும் அவ ளுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதற்காகவும் பல்வேறு  வேலைகள்செய்து செலவு செய்தேன். அவளை பிரபல பொறியியல் கல்லூரியில் பி.இ. படிக்க வைத்தேன். இப்போது மூன்றாம் ஆண்டு படிக்கும் அவள் ஓராண்டாக என்னைப் புறக்கணிக்க ஆரம்பித்தாள். அவளை  மறக்க முடியாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். அவளது பிரிவுத் துயரத்தை எதிர்கொள்ள முடியாததால் என்னால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் அவளது படிப்புச் செலவுக்காக நான் கடன் வாங்கியவர்களிடம் கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் என்னை மிரட்ட ஆரம்பித்தனர். அந்த நெருக்கடியில்தான் பாலாஜியின் நகைகளை கொள்ளை அடித்தேன்'' என்று கண்ணீருடன் போலீ ஸிடம் தன்னிலை விளக்கம் அளித்து இருக்கிறார் சரவணன்.

சரவணனின் அப்பா விஜயரங்கன், ''எல்லாமே அவன் உசுரா காதலிச்ச ஒரு பெண்ணால வந்தது. அவன் சம்பாதிச்ச காசை எல்லாம் அந்தப் பெண்ணுக்கும் அவ குடும்பத்துக்கும்தான் செலவு செஞ்சான். காலேஜ்ல படிக்கிற வசதியான பசங் களோட சகவாசம் கிடைச்சதும் அந்தப் பொண்ணு இவனை விட்டுட்டா. அதனால குடிக்கப் பழகி, ஒழுங்கா வேலைக்குப் போகாம பைத்தியம் மாதிரி ஆகிட்டான் எம் பையன். இப்போ, குடும்பமே வெளியே தலைகாட்டாம அவமானத்துல முடங்கிக் கிடக்கிறோம்'' என்றார் அழுகையுடன்.

பாதிக்கப்பட்ட பாலாஜியின் தந்தை வழக்கறிஞர் சிவாஜி, ''நகைகளை பறிகொடுத்த என் மகன் பாலாஜி, கட்டுகளை அவிழ்த்துக்கிட்டு அரை மயக்கத்திலேயே அந்த வழியே வந்த பலரிடம் நடந்ததை சொல்லி உதவி கேட்டு இருக்கிறான். குடிச்சுட்டு உளர்றான்னு யாரும் உதவி செய்யலை. ஒருவழியா திருச்சியிலுள்ள எங்க உறவுக்காரங்க மூலம் அவனை ஊருக்குக்கொண்டு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவன் கண் முழிச்சி நடந்ததை விவரமாக சொல்லவே மூன்று நாள் ஆகிடுச்சு'' என்றார் மகனை அணைத்தபடி.

கோட்டை காவல் நிலைய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகுமார், ''சரவணன் மீது இதற்குமுன் வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை. அவன் மீது வழிப்பறி வழக்கு பதிவுசெய்து சிறைக்கு அனுப்பியுள்ளோம். அவனிடமிருந்து நகை, செல்போன்களை கைப்பற்றி விட்டோம்'' என்றார்.

குருட்டுக் காதலும் ஓவர் குடியும் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!

-அ.சாதிக் பாட்ஷா, சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எம்.ராமசாமி.