Published:Updated:

முத்துராமலிங்கத்தோடு மோதும் ரத்தத்தின் ரத்தங்கள்

மதுரை மல்லுக்கட்டு

முத்துராமலிங்கத்தோடு மோதும் ரத்தத்தின் ரத்தங்கள்

மதுரை மல்லுக்கட்டு

Published:Updated:
##~##
முத்துராமலிங்கத்தோடு மோதும் ரத்தத்தின் ரத்தங்கள்

'கோபக்கார ஆளு’ என்று பெயரெடுத்த மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கத்துக்கு, இது 'அர்ச்சனைக் காலம்’. ஜெயலலிதா பிறந்த நாள் ஏற்பாடுகளுக்காகத் தொகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டம் போடப் போனவருக்கு சென்ற இடம் எல்லாம் 'சிறப்பு அர்ச்சனை’ நடந்தது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 11-ம் தேதி மாலையில் கருப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. ''நாம ஆளும் கட்சியா இருந்தும் கட்சிக்காரங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. அங்கன்வாடி பணியாளர், ரேஷன் கடை ஊழியர் வேலைக்கு 25 பேர் பெயரை பரிந்துரைசெய்து, மாவட்டச் செயலாளர்கிட்ட கொடுத்தேன். அதுல ஒருத்தருக்குக்கூட கொடுக்கலை. இப்படி இருந்தா எப்படிங்க கட்சி வளரும்?'' என்று பட்டியலை எடுத்துக் காட்டினார் கருப்பையா. .கடுப்பான முத்துராமலிங்கம், ''எந்த நேரத்தில் எதைப் பேசுறீங்க?'' என்று குரலை உயர்த்த, கருப்பையாவின் ஆதரவாளர்களும் மாவட்டச் செயலாளரின் அதிருப்தியாளர்களும் எழுந்து முத்துராமலிங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். நாற்காலிகள் பறந்தன.

முத்துராமலிங்கத்தோடு மோதும் ரத்தத்தின் ரத்தங்கள்

மறுநாள் (12-ம் தேதி) காலையில் நடந்த திருமங்கலம் தொகுதி ஆலோசனை கூட்டத்திலும் பிரச்னை. அதை ஆரம்பித்து வைத்தவர் மாவட்ட இணைச் செயலாளர் ஐயப்பன். ''பார் ஒதுக்கிறதுல இருந்து ரோடு வேலை வரைக்கும் எல்லாத்தையும் தி.மு.க-காரங்களுக்குத்தான் கொடுக்கறீங்க. நம்ம கட்சியிலேயும் ஆள் பார்த்துதான் வேலை கொடுக்கறீங்க'' என்று ஐயப்பன். அடுக்கிக்கொண்டே போக, ஒருவழியாக அவரிடம் இருந்து மைக்கைப் பறித்து உட்கார வைத்தனர். தொடர்ந்து பேசிய முன்னாள் நகராட்சித் தலைவர் நிரஞ்சனும் முத்துராமலிங்கம் மீது பாய்ந்தார். ''பஸ் ஸ்டாண்டுல இருக்கிற என்

முத்துராமலிங்கத்தோடு மோதும் ரத்தத்தின் ரத்தங்கள்

கடையை கட்சிக்காரங்களே இடிச்சாங்க. இதைப் பற்றி மாவட்டச் செயலாளரிடம் சொன்னபோது, 'அதை நீங்க சட்டப்படி தான் பார்த்துக்கிடணும்’னு சொல்லிட்டாரு. கட்சிக்காரங்களுக்கு எந்த உதவியுமே செய்ய மாட்டேன்னு சொன்னா எப்படி?'' என்றார்.

''என்னடா இது எந்த ஊருக்குப் போனாலும் பிரச்னை பண்றாங்களே'' என்று புலம்பிய முத்துராமலிங்கம், அன்றைய தினம் மாலையில் நடந்த உசிலம்பட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தார். யார் எல்லாம் பேசலாம் என்று அவர் சொன்னவர்களுக்கு மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்டது. அப்படியும் பிரச்னை வெடித்தது. ''என்னய்யா இது... நீங்க மட்டுமே பேசுனா எப்படி?'' என்று கூச்சல் எழுந்தது. வேறு வழியில்லாமல் மூன்று பேருக்கு மட்டும் பேச அனுமதி கொடுத்தனர்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல ஆரம்பித்தார் நகர மாணவரணித் தலைவர் ஓ.எஸ்.பாண்டியன். ''ஒரு வேலை விஷயமா முன் அனுமதி கேட்டுட்டு மாவட்டச் செயலாளரைப் பார்க்க எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குப் போனோம். கதவைத் தட்டியதும் உள்ளே வரச் சொன்னார். அப்ப பார்த்து திடீர்னு காத்தடிச்சி, கதவு டமார்னு சாத்திடுச்சி. என்ன ஏதுன்னு தெரியாம 'லூசு... லூசு... மென்டலாடா நீங்க? உசிலம்பட்டிக்காரங்க எல்லாம் இப்படித்தான் இருப்பீங்களாடா? முட்டாப் பசங்க’ என்று ரொம்ப ஓவராத் திட்டிட்டாரு'' என்று கண்கலங்க, கூட்டம் கொந்தளித்தது.

சேரை உடைத்து நாலா பக்கமும் வீச ஆரம்பித்தனர். இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி கனிபாலன், உசிலம்பட்டி நகர முன்னாள் பொருளாளர் இளங்கோ ஆகியோரின் மண்டை உடைந்தது. இந்த களேபரத்துக்குப் பின்னும் முத்துராமலிங்கத்துக்கு எதிராகப் பேச பாலகருப்பு உள்ளிட்ட சிலர் மைக் பிடித்தனர்.

முன்னாள் அமைச்சர் துரைராஜ் கூட்டத்தை அமைதிப்படுத்தியதும் மைக் பிடித்தார் முத்துராமலிங்கம். ''நம்ம கட்சிக்காரங்கதானேன்னு உரிமையில் பேசியிருப்பேன். தவறாப் பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க. அம்மா பிறந்த நாளை சிறப்பா கொண்டாட எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை'' என்று சுருக்கமாகப் பேசிவிட்டு விருட்டென கிளம்பினார் .

இந்த மோதல்களின் பின்னணி பற்றி விசாரித்தோம். ''முத்துராமலிங்கம் முன் யோசனை இல்லாமல் பேசக்கூடியவர்தான். அதேசமயம், முன்னாள் நிர்வாகிகள் பலர் இவருக்கு எதிர் கோஷ்டியாகச் செயல்படுகின்றனர். பிரமலைக்கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை மறவரான இவர் மதிப்பதில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதனால்தான் அந்த சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கூட்டங்களில் எல்லாம் பிரச்னை வெடித்திருக்கிறது'' என்றனர்.

இதுபற்றி மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கத்திடம் கேட்டோம். ''ஆயிரம் பேர் கூடியிருக்கிற இடத்துல ஒண்ணு ரெண்டு பேர் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. சோழவந்தான்ல கருப்பையா எம்.எல்.ஏ. கேள்விக்கு நான் அமைதியாத்தான் பதில் சொன்னேன். உசிலம்பட்டியில கல்யாண வீட்டுல சின்னப் பிரச்னைன்னாலும் நாலு அஞ்சி சேரை உடைப்பாய்ங்க. அந்தக் கலாச்சாரப்படி சேரை உடைச்சாங்க, அவ்வளவுதான். இந்தப் பிரச்னையை எல்லாம் அம்மாவின் கவனத்துக்குக்கொண்டு போவேன். எல்லா வேலைகளையும் கட்சிக்காரர்​களுக்குத்தான் கொடுக்கிறேன். தி.மு.க-காரர்களுக்குக் கொடுப்பதாகக் கூறுவது தவறு'' என்றார் அமைதியான குரலில்.

இந்த அமைதியைத்தான் நிர்வாகிகளும் எதிர்பார்க்கிறார்கள்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து