##~## |

'கிணத்தைக் காணோம்’ என்று, திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு போலீஸில் புகார் செய்வார். அதிர்ச்சி அடையும் போலீஸ் இன்ஸ்பெக்டர், ''இன்னைக்கு இவன் கிணத்தைக் காணோங்குறான். நாளைக்கு ஆத்தைக் காணோம்... குளத்தைக் காணோம்னு புகார் கொடுக்க வருவான். எனக்கு இந்த வேலையே வேண்டாம்'' என்று ஓட்டம் எடுப்பார். அது, சினிமா காமெடியாக இருந்தாலும் நிஜத்திலும் அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. வேங்கீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தைக் கண்டுபிடித்து தரக் கோரி பக்தர்கள் போராடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னை, வடபழனி என்றதும் முருகன் கோயில்தான் ஞாபகத்துக்கு வரும். முருகன் கோயிலுக்கு அருகில் வேங்கீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. வேங்கீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், கோயில் அருகிலேயே இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் குளம் காணாமலே போய்விட்டது. இப்போது அந்த இடத்தில் தெப்பக்குளம் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், உணவு விடுதி என்று ஏராளமான கடைகள் வந்துவிட்டன. தெப்பக்குளத்தை மீட்டுத்தரக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடக்கிறது.


இந்து முன்னணியின் சென்னை மாநகரப் பொதுச் செயலாளர் இளங்கோவனிடம் பேசினோம். ''கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் மூன்றரை ஏக்கரில் இருந்தது. அதில் சுற்றுப்பகுதி போக, ஒரு ஏக்கர் 97 சென்டில் தெப்பக்குளம் இருந்தது. பக்தர்கள் பயன்படுத்திய அந்த தெப்பக்குளத்தை இப்போது காணவில்லை. கோயில் பரம்பரை தர்மகர்த்தா, இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் கூட்டுச் சதியோடு தெப்பக்குளத்தை பிளாட் போட்டு விற்றுவிட்டனர். 30 அடி ஆழம் இருந்தக் குளத்தை மூடி கட்டடத்தை எழுப்பிவிட்டனர்.
தெப்பக்குளத்தை மீட்க, பல வருடங்களாகப் போராடி வருகிறோம். பி.ஜே.பி., பா.ம.க. என்று பல்வேறு அமைப்புகள் பல நூதனப் போராட்டங்களை நடத்திவருகின்றன. போலீஸ், அறநிலையத் துறை, முதல்வர் அலுவலகம் என்று எல்லோரிடமும் புகார்

கொடுத்துவிட்டோம். கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து இருக்கிறோம். வழக்கை மழுங்கச் செய்யும் வேலைகளை அறநிலையத் துறை செய்கிறது. 'கோயில் நிலத்தை விற்கும் உரிமை, அறநிலையத் துறைக்கோ, பரம்பரை தர்மகர்த்தாவுக்கோ கிடையாது’ என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது. அதைமீறி இந்த கட்டடங்களைக் கட்டிவிட்டனர். சட்டத்துக்குப் புறம்பாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றையும் வழங்கி இருக்கின்றனர். இதனை உடனே ரத்துசெய்ய வேண்டும். சிவபெருமானின் தெப்பக்குளத்தை மீட்டுத்தர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்.
வேங்கீஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தா பிரேம் ஆனந்த் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார். ''வடபழனியில் 100 அடி சாலை அமைக்கும்போது கடைகள் கட்ட, சிலர் இடம் எதிர்பார்த்தனர். இடம் கிடைக்காத அதிருப்தியில், 1987-லேயே இந்தப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். அவர்கள் கூறுவது போல தெப்பக்குளம் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 1987-ல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியாகிவிட்டது'' என்று மையமாகப் பேசினார். அறநிலையத் துறை அதிகாரிகள், ''பரம்பரை தர்மகர்த்தாவின் நிர்வாகத்தில்தான் கோயில் உள்ளது. குளத்தை காணவில்லை என்பது குறித்து முறையான புகார் வந்தால் வருவாய்த் துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’' என்றனர்.
வேங்கீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பு.
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
வடபழனியில் ஆக்கிரமிப்பு அறிவாலயமா?
வடபழனியில் இன்னொரு புகார். தி.மு.க-வினர் நடத்தும் அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் ஆற்காடு சாலையில் உள்ளது. இந்த மன்றம், அரசு இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய வார்டு கவுன்சிலர் தி.நகர் சத்யா, ''மினி அறிவாயலம் போல் அந்த இடத்தை தி.மு.க-வினர் பயன்படுத்துகின்றனர். கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் இந்த அளவுக்குப் பிரமாண்ட கட்டடம் கட்டினர். அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் இந்த மன்றத்தை உடனடியாக அகற்றவேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன்'' என்றார்.

அந்த மன்றத்தின் செயலாளரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வத்திடம் கேட்டபோது, ''இந்த இடம் எங்களுக்கு அரசாங்கம் கொடுத்தது. 1970-களில் சாலையோர நூலகம் இருந்தது. படிப்படியாக வளர்ச்சி அடைந்து இப்போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி வகுப்புகள், பெண்களுக்குத் தையல் வகுப்புகள் என்று அத்தனையும் இலவசமாக நடத்துகிறோம். அ.தி.மு.க-வினர் பொறாமையில் பேசுகிறார்கள். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
பொது இடமா அல்லது தனியாருக்குச் சொந்தமானதா என்பதைச் சட்டரீதியாகத் தீர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்!