Published:Updated:

அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

Published:Updated:
##~##
அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உறவினர் கொலை வழக்கு முதல் மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க. தலைவர்கள் கைது வரை அ.தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஏழாம் பொருத்தம்தான். ஆனால், அரியலூர் மாவட்டம் மட்டும் விதிவிலக்கு. பா.ம.க-வினருடன் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன் ரகசியக் கூட்டணி வைத்துகொண்டு, கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் பல இடங்களில் அ.தி.மு.க-வினரையே தோல்வியடையவைத்தார் எனக் கொதிக்கிறார்கள் அரியலூர் அ.தி.மு.க-வினர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோஷ்டி அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் மாவட்டச் செயலாளரான எம்.எல்.ஏ. துரை.மணிவேலுவை மாற்றி​விட்டு, அவருக்குப் பதிலாக கவிதா ராஜேந்திரனை நியமித்தார் ஜெயலலிதா. இப்போது இவரும் அந்தப் பதவிக்குத் தகுதியில்லாதவர் எனக் காரணங்களை அடுக்குகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அ.தி.மு.க. - பா.ம.க. - அம்மாவுக்குத் தெரியாத அரியலூர் கூட்டணி

மேலணிக்குழி கிளைச் செயலாளர் முத்துக்குமாரசாமி, ''கூட்டுறவுத் தேர்தலுக்காக, ஒன்றியச் செயலாளர் கல்யாண​சுந்தரம் தலைமையிலான குழுவினர் என்னை ஒரு வாரத்துக்கு முன் அழைத்தனர். '29 வருஷமா கட்சியில் இருக்கிற உன்னை மீன்சுருட்டித் தொடக்க வேளாண்மை சங்கத் தேர்தலில் டைரக்டரா நிறுத்த முடிவு செஞ்சிருக்கோம். நீ நாமினேஷன் தாக்கல் பண்ணு’னு சொன்னாங்க. நானும் மனுத்தாக்கல் பண்ணிட்டு மாவட்டச் செயலாளரைச் சந்தித்து சால்வை அணி​வித்தேன். அப்போது அவர், 'நீங்க என்ன சாதி?’னு கேட்டார். என் சாதியைச் சொல்லிட்டு வந்தேன். மறுநாள் அந்தப் பதவிக்கு பா.ம.க-வைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரின் மனைவியைப் போட்டியாளராக அறிவித்தார். என்னை ஏன் மாத்தினார் என்று கடைசி வரை தெரியவே இல்லை'' என்றார் வேதனையுடன்.

அடுத்து, கீழசெங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் துரை.பன்னீர்செல்வம், ''எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து கட்சியில் இருக்கேன். ஏழு மாவட்ட செயலாளரைப் பார்த்திருக்கிறேன். ஆனா, இவரைப்போல தொண்டர்களை அலட்சியப்படுத்துறவரை நான் பார்த்ததே இல்லை. சட்டமன்றத்தில் அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்னையில் திருச்சி மத்தியச் சிறையில் 15 நாள் இருந்தவன் நான். அப்படிப்பட்ட எனக்கே, போன வருடம்தான் மாவட்டப் பொறுப்பு கொடுத்தாங்க. அதோட மீன்சுருட்டி சொசைட்டியில் டைரக்டர் பதவிக்குப் போட்டியிட்டேன். ஆனால் எனக்குப் பதிலா பா.ம.க-வைச் சேர்ந்த குண்டவெளி திருமுருகனை வெற்றி பெறவைத்தார். மீன்சுருட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 5,000 ஓட்டுகள். அதில் 700 ஓட்டுகள் மட்டுமேகொண்ட வன்னியர்களுக்கு நான்கு இயக்குநர் பதவிகள் கொடுத்துள்ளார். இதைக் கண்டித்த அ.தி.மு.க-வினரை போலீஸை விட்டு விரட்டினார்'' என்றார்.

அ.தி.மு.க-வின் விசுவாசி ஒருவர், ''எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 'ஜா’ அணி, 'ஜெ’ அணி என அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்தபோது, ஒன்றியச் செயலாளராக இருந்த தில்லைகாந்தி 'ஜா’ அணிக்குப் போகவே, அப்போது கவிதா ராஜேந்​திரனை ஒன்றியச் செயலாளராக அம்மா அறிவித்தார். அதன்பிறகு, கண்ணப்பன் தலைமையில் போட்டி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, இவரும் அப்போது ஒன்றியச் செயலாளர்களாக இருந்த சுத்தமல்லி ராஜேந்திரன், வெள்ளமுத்து, ஆலத்தூர் முத்தமிழ்ச் செல்வன் ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு அணி மாறினார். அப்போது இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காகத் தொடரப்பட்ட வழக்கின் அஃபிடவிட்டில் கையெழுத்திட்ட 14 பேரில் கவிதா ராஜேந்திரனும் ஒருவர். அதன்பிறகு, 2008-ல் கண்ணப்பன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த பிறகு இவரும் கட்சிக்கு வந்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் இறந்த பிறகு, அந்தப் பதவிக்குக் குறிவைத்து சென்னைக்குப் போனார். அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது கட்சித் தலைமை.

ஆனால் அவரோ, அவருடன் கட்சி மாறியவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி கோஷ்டி அரசியல் செய்கிறார். மீன்சுருட்டி, தேவமங்கலம், பிள்ளைபாளையம் கூட்டுறவு சங்கங்களில் இவரோடு சீட்டுக்கட்டு நண்பர்களையும் மாற்றுக் கட்சியினரையும் நிறுத்தி ஜெயிக்கவைத்துள்ளார். அதோடு மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தேர்தலில் கிட்டத்தட்ட 85 டைரக்​டர்கள் பதவிகளை பா.ம.க-வினரும் தி.மு.க-வினரும் தமிழர் நீதிக் கட்சி​யினரும் வென்றதற்கு இவரே காரணம்'' என்றார் காட்டமாக.

இதுகுறித்து கவிதா ராஜேந்திரனிடம் கேட்டோம். ''குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. கூட்டுறவு தேர்தலில் மாற்றுக் கட்சிக்​காரர்கள் வெற்றி பெறுவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? மீன்சுருட்டியில் பாசறை மாவட்ட செயலாளரான கோகுல், தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நானும் அவரைத்தான் சிபாரிசு செய்தேன். ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார். அதற்கு நான்தான் காரணம் எனச் சொல்வதில் நியாயமில்லை. எனக்கு பா.ம.க-வையும் தி.மு.க-வையும் பிடிக்கவே பிடிக்காது. அப்படியிருக்க பா.ம.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன் என்று சொல்வது முற்றிலும் பொய்யானது. கடந்த காலங்களில் அப்போதைய மாவட்டச் செயலாளரின் நடவடிக்கையால் 21 நாட்கள் கட்சியைவிட்டு விலகி​யிருந்தேன். அதற்காக அம்மாவிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தேன். அம்மா​வுக்கும் கட்சிக்கும் உண்மையாக இருந்​ததைப் பார்த்துதான், அம்மா இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்'' என்றார்.

அம்மா கோர்ட்தான் விசாரிக்க வேண்டும்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism