Published:Updated:

ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

சேலம் பகீர்

ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

சேலம் பகீர்

Published:Updated:
##~##
ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தை நோக்கி ஒரு டாடா இன்டிகா கார் வருகிறது. காருக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு சேவல் இருக்கிறது. காவல் நிலையத்தை நெருங்க 100 அடி தூரம் இருக்கும்போது, கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியை வைத்து காரை மறிக்கிறார் ஒருவர். கார் நிற்கிறது. எதிர் திசையில் இருந்து சீறிவந்த ஆம்னி காரிலிருந்து ஏழு பேர் உருட்டுக்கட்டை, வீச்சரிவாளுடன் இறங்குகிறார்கள். டாடா இன்டிகாவில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டுகிறார்கள். அந்த வழியாக வந்த ஒருவர் அதைத் தடுக்க முயல.. அவரது வயிற்றிலும் கத்தி பாய்கிறது. சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு நடந்திருக்கிறது இந்த சம்பவம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெட்டுப்பட்டவர்கள் ரத்தம் சொட்டச் சொட்டத் துடித்துக்கொண்டிருக்க... பதறி ஓடிவந்த போலீஸ் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.

ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

சேலம் அன்னதானப்பட்டிக்கு ரவுடியிஸம் புதிது அல்ல. 'நெஞ்சைப் பிளந்து... கருங்கல்லை நட்டு!’ என்ற தலைப்பில் 7.10.12 தேதியிட்ட ஜூ.வி-யில் அந்த ஏரியாவில் நடக்கும் ரவுடியிஸத்தையும், காவல்

ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

துறையின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனாலும், தொடரும் ரவுடியிஸத்தால் நடுங்குகிறது சேலம்.

''தாதகாப்பட்டி, மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரது கோஷ்டிக்கும், இதே ஏரியாவைச் சேர்ந்த ரவுடிகள் பெருமாள், துரை கோஷ்டிக்கும் இடையே கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு கொலை தொடர்பான வழக்கில் முன்விரோதம் இருந்தது. அதில் 2011-ம் வருடம் கோழி பாஸ்கரின் அண்ணன் வெங்கடேசனையும், அவரது நண்பர் பழனிச்சாமியையும் துண்டுத்துண்டாக வெட்டி வீசினர். இந்த வழக்கில் எதிர் கோஷ்டிகளான பெரு மாள், துரை உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பலியான பழனிசாமியின் சொந்தத் தம்பிதான் இப்போது காவல் நிலையத்துக்கு எதிரில் குடும்பத்துடன் வெட்டப்பட்ட பாபு. இவரும் ரவுடிதான். இந்த இரட்டைக் கொலை வழக்கில் பாபுவும், அவரது அண்ணி பூங்கொடி, மாதேஸ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக இருக்கிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன், அன்ன தானப்பட்டியைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர்தான் வெங்கடேசனையும் பழனிசாமியையும் கொலைசெய்யப் பணம்

ரத்தம் சிந்தும் ரவுடிகள்!

கொடுத்தார் என்று கோழி பாஸ்கரும் பாபுவும் சேர்ந்து, சண்முகத்தை வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் கோழி பாஸ்கர், பாபு உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சேலம் மத்தியச் சிறையில் கோழி பாஸ்கர் கோஷ்டிக்கும், பெருமாள், துரை கோஷ்டிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதனால் பெருமாள் கோஷ்டியினர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். நிபந்தனை ஜாமினில் வெளியில் இருந்த பாபு குடும்பத்தின் மீதுதான் இப்போது தாக்குதல் நடந்திருக்கிறது'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பலத்த காயங்களுடன் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பாபுவிடம் பேசினோம். ''கையெழுத்துப் போட ஸ்டேஷனுக்கு வந்தேன். எங்க அப்பா மாது, அண்ணி பூங்கொடி, சின்னம்மா சாந்தி, அண்ணன் மகன் சுரேஷ், உறவினர் மாதேஸ் என ஆறு பேர் என்கூட வந்தாங்க. ஃபைனான்ஸியர் சண்முகத்தின் தங்கை தங்கமணிதான், வளத்தி குமார் மூலமாக கூலிப் படையை ஏவி இருக்கிறார். இதைத்தான் நான் போலீஸாரிடமும் சொல்லி இருக்கிறேன்'' என்கிறார்.

சேலம் மாநகரப் போலீஸ் கமிஷனர் மஹாலியிடம் பேசினோம். ''இந்த சம்பவம் தொடர்பாகப் பலரையும் விசாரித்து வருகிறோம். கூடிய சீக்கிரமே குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்'' என்றார் சாதாரணமாக.

சேலத்தில் பெருகிவரும் ரவுடியிஸத்தை காவல் துறை உடனே அடக்கவில்லை என்றால், ரவுடிகளுக்குள் நடக்கும் மோதல் பொதுமக்களையும் பாதிக்க அதிக நேரம் ஆகாது.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism