Published:Updated:

அணுக்கழிவின் குப்பைத் தொட்டியாகிறதா தமிழகம்?

தலை கல்பாக்கம்.. வால் கூடங்குளம்... தேனியில் நியூட்ரினோ மையம்...

அணுக்கழிவின் குப்பைத் தொட்டியாகிறதா தமிழகம்?

தலை கல்பாக்கம்.. வால் கூடங்குளம்... தேனியில் நியூட்ரினோ மையம்...

Published:Updated:
##~##
அணுக்கழிவின் குப்பைத் தொட்டியாகிறதா தமிழகம்?

மதுரையில் 'அணு உலை அறிவோம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையைச் சேர்ந்த ஜெ.பிரபாகரன் என்பவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில், எழுத்துக்களைவிட புகைப்படங்கள்தான் பேசுகின்றன. அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் அபாயங்களை, இதற்கு முன் நடந்த அணு உலை விபத்துக்களைக் கூறும் பதறவைக்கும் புகைப்படங்கள் மூலம் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வெளியிட, வைகோ பெற்றுக்கொண்டார். ஈழக் கொடுமைகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் நீதி கேட்டு, மாணவர் போராட்டத்தை வீரியத்தோடு எடுத்துச் சென்ற சென்னை சட்டக் கல்லூரி மாணவி திவ்யா, மதுரை முகிலன், நெல்லை பன்னீர், கோவை சிவா, தீபக் ஆகியோரின் பேச்சும் பரபரப்பாக இருந்தன. உளவுத் துறையினரும் இந்த விழாவை உன்னிப்பாகக் கவனித்தனர்.

அணுக்கழிவின் குப்பைத் தொட்டியாகிறதா தமிழகம்?

மாணவி திவ்யா பேசும்போது, ''ஈழத்துக்கான எங்கள் போராட்டத்துக்கு உந்து சக்தியாக இருந்ததே இடிந்தகரை மக்கள்தான். இனி, ஒட்டுமொத்த தமிழர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் போராடு வோம். இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகக் கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்குவோம்'' என்றார்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ''என்னைப் பொறுத்தவரை ராஜபக்ஷேவும் அணு உலையும் ஒன்றுதான். அவன் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான். அணு உலை பல ஆண்டுகள் இருந்து பல லட்சம் மக்களைக் கொல்லும்'' என்றார்.

'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன், ''663 நாட்களாக ஏகப்பட்ட போலீஸ் அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகளை எதிர்கொண்டு ஒரு போராட்டம் நடக்கிறது என்றால், அது கூடங்குளம் மக்களின் போராட்டம்தான். தமிழகத்தை அணுக் கழிவின் குப்பைத் தொட்டியாக்கிவிட்டனர். தலை கல்பாக்கம், வால் கூடங்குளம், தேனியில் நியூட்ரினோ மையம் என்று தமிழகத்தையே அழிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்'' என்றார்.

நூலாசிரியர் ஜெ.பிரபாகரன் பேசும்​போது, ''இந்தப் புத்தகத்தில் அணு உலை வேண்டாமென்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அணு உலை விபத்துகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை, படிப்பறிவில்லாத சாதாரண மனிதனும் படங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அணு உலை ஆபத்தில்லை என்று ஆதரிக்கும் பெரிய அறிஞர்களும் பார்க்க வேண்டும் என்பதுதான்இந்தப் புத்தகத்தின் நோக்கம்'' என்றார்.

பெரியவர் நம்மாழ்வார் பேச்சு உருக்கமாக இருந்தது. ''ரஷ்யாவும் இந்தியாவும் சோஷலிச ஜனநாயக நட்பு நாடுகள் என்கிறார்கள். செர்னோபிள் அணு உலை விபத்துக்குப் பிறகும், அதே அணு உலையை நட்பு நாட்டில் கொண்டுவரலாமா? இதுதான் நட்பு நாட்டுக்குச் செய்யும் நன்மையா? அந்தப் பக்கம் தஞ்சாவூரில் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை, பெரிய கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்து சுடுகாடாக்கிவிட்டனர். கூடங்குளம் அணு உலை இடிந்தகரைக்கு மட்டும் வைத்த வெடி அல்ல. தமிழ்நாட்டுக்கே வைத்த வெடி'' என்றார்.

வைகோ, ''எந்தக் காலத்திலும் அரசியல் லாபத்துக்காக மக்கள் பிரச்னைகளில் நான் சமரசம்செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழம், முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட், கூடங்குளம் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். வியட்நாமில் அமெரிக்கா போர் தொடுத்த கொடூரத்தை, 10 வயது சிறுமி நிர்வாணமாக கதறிக்கொண்டு ஓடிவரும் ஒரே ஒரு புகைப்படம் உலகத்துக்கு உணர்த்தியது. பாலகன் பாலச்சந்திரனின் வெறித்த பார்வையுடன் கூடிய ஒரே ஒரு புகைப்படம்தான், உலகத் தமிழர்கள் அனைவரையும் இலங்கைக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்தது. அதுபோல அணு உலையால் ஏற்படும் விளைவுகளை இந்தப் புத்தகத்தில் புகைப்படங்களாக வைத்திருக்கிறார் தம்பி பிரபாகரன். இது ஒட்டுமொத்த மக்களையும் அணு உலைக்கு எதிராகப் போராடவைக்கும்.

ராஜீவ் பிரதமராக இருந்தபோது, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டபோதே நாடாளுமன்றத்தில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கொண்டுவரத் திட்டமா என்று கேட்டேன். 'இல்லை, அது அனல் மின் நிலையம்தான்’ என்று பொய் சொன்னார் ராஜீவ். அப்பழுக்கற்ற அமைதி வழிப் பேரா£ட்டத்தை இடிந்தகரை மக்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பசிபிக் கடலில் கப்பலில் அந்த நாளில் நெடிய பயணம் செய்தவர்களுக்கு முதலில் கண்ணில் பட்ட நிலப் பகுதி நன்னம்பிக்கை முனை என்று சொல்லப்பட்டது. இன்று உலகம் முழுதும் அணு உலைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு, இடிந்தகரைதான் நன்னம்பிக்கை முனை.

காவல் துறையின் கடுமையான நடவடிக்கையால் இரண்டு மீனவர்கள் இறந்துபோனார்கள். அதில் ஒருவருடைய மகள் இந்தப் போராட்டச் சூழலிலும் படித்து இன்று வந்த பிளஸ் டூ தேர்வில் மாநில ரேங்க் வாங்கியுள்ளார்.

உலகில் பல நாடுகளும் அணு உலைகளை மூடி வரும்போது, இந்தியாவில் மட்டும் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் அணு உலையை திறக்க வேண்டிய அவசியம் என்ன? இதை மக்கள் ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்க வேண்டும்'' என்றார்.

அணு உலைப் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

- செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism