Published:Updated:

சாக்கடையாகும் தாமிரபரணி

காகித ஆலைக் கழிவு.. கொந்தளிப்பில் விவசாயிகள்

சாக்கடையாகும் தாமிரபரணி

காகித ஆலைக் கழிவு.. கொந்தளிப்பில் விவசாயிகள்

Published:Updated:
##~##

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் தாமிரபரணி ஆற்றில் ஒரு பக்கம் மணல் கொள்ளை என்றால், இன்​னொரு பக்கம் ஆலைக் கழிவுகள். 

சுயநலத்தால் ஒரு ஆற்றையே பாழாக்கிக்கொண்டு இருப்பவர்​களுக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கிறார்கள் மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக எல்லைக்குள் உற்பத்தியாகி மாநில எல்லைக்குள்ளேயே கடலில் கலக்கும் ஆறு, தாமிரபரணி. பக்கத்து மாநில எல்லைப் பிரச்னை எதுவும் இல்லாததால் ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி விருதுநகர், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்கும் இந்த ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே செயல்பட்டு வரும் காகித ஆலைகளின் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே ஆற்றில் விடவேண்டும் என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது.

சாக்கடையாகும் தாமிரபரணி

ஆனால், அரிராம் நகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீசப்தகிரி காகித ஆலையின் கழிவு நீர் ஆற்றில் நேரடியாகக் கலந்து சாக்கடை போல மாறிவிடுவதாக உள்ளூர் மக்கள் திடீர் சாலை மறியலில் இறங்கினர்.

சாக்கடையாகும் தாமிரபரணி

இதுபற்றி, முக்கூடல் நகர அ.தி.மு.க. செயலாளர் மரிய ஜேசையா, ''மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அரிய மூலிகைகளைக் கடந்து இந்த ஆறு வருவதால் மருத்துவக் குணம்கொண்ட இந்த ஆற்றின் நீர் சுவை மிகுந்ததாக இருந்தது. ஆனால், இப்பொழுது அது எல்லாமே பழைய கதையாகிவிட்டது. ஸ்ரீசப்தகிரி பேப்பர் மில்லின் கழிவு நீரைச் சுத்தப்படுத்தத் தனியாக டேங்க் வெச்சிருக்காங்க. அதைப் பயன்படுத்த நிறைய செலவாகும் என்பதால், இரவு நேரத்தில் ஆற்றுக்குள்

சாக்கடையாகும் தாமிரபரணி

கழிவு நீரைத் திறந்துவிட்டுட்டாங்க. ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் அது சாக்கடை மாதிரி கருப்பாகத் தேங்கிக்கிடந்திருக்கு. காலையில் ஆற்றில் குளிக்கப் போனவங்க அதைப் பார்த்துட்டு ஊருக்குள்ள இருந்தவங்களுக்குத் தெரியப்படுத்தினாங்க. ஆத்திரம் அடைஞ்ச ஊர் மக்கள் திரண்டுவந்து சாலை மறியல் செஞ்சாங்க. இந்த தகவலைக் கேட்டு வருவாய்த் துறை அதிகாரிகளும் போலீஸாரும் வந்து ஆலையைச் சுத்திப் பார்த்தாங்க. வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்ததும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி வாங்காததை ஒப்புக்கொண்டனர். அனுமதியே இல்லாமல் இந்த ஆலை வருடக்கணக்கில் செயல்பட்டது எப்படி?  அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தது எதற்காக?'' எனக் கேள்வி எழுப்பினார்.

ஆலை நிர்வாகத்தின் தரப்பில் பேசியவர்கள், ''ஆலையில் கழிவு நீரைச் சுத்தம் செய்து மறுசுழற்சிக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தும் வசதி இருக்கிறது.  தவறுதலாகக் கழிவு நீர் ஆற்றில் கலந்துவிட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கு விண்ணப்பித்துவிட்டோம். சீக்கிரமே அனுமதி கிடைத்துவிடும்'' என்று முடித்துக் கொண்டனர்.

இதுகுறித்து, நெல்லை மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ''அந்த ஆலையின் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தாசில்தாரை அனுப்பி ஆய்வுசெய்ய சொன்னேன். முதல் கட்டத் தகவல்களின் அடிப்படையில் ஆலையை மூட உத்தரவிட்டேன். தவறுகள் நடந்தது உறுதியானால், கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என்றார் அக்கறையுடன்.

நீர் வளம் காப்பதில் அனை​வருக்கும் பங்கு இருக்கிறது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism