Published:Updated:

'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா?'

பரோல் கைதி கொலை

'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா?'

பரோல் கைதி கொலை

Published:Updated:
##~##
'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா?'

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நான்கு கொலைகள் நடந்​திருப்பதால், திகிலில் உறைந்திருக்கிறது சோழவரம். லேட்டஸ்டாக, பரோலில் வந்த ஆயுள் தண்டனைக் கைதி முத்துப் பிரகாஷ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவரான அ.தி.மு.க-வைச் சேர்ந்த பொன்மணி என்பவரை, 2003-ம் ஆண்டு கொலைசெய்த வழக்கில் கைதானவர் முத்துப் பிரகாஷ். வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்து பிரகாஷ், பரோலில் வந்தார். கடந்த 20-ம் தேதி பரோல் முடிந்து வேலூர் சிறைக்குக் கிளம்பியிருக்கிறார். வழியில், நாகாத்தம் நகரில் உள்ள தன் மாமியார் வள்ளி வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவரை வழிமறித்து வெட்டிச் சாய்த்தது ஒரு கும்பல்.

என்ன பிரச்னை? யார் வெட்​டியது? ''முத்துப் பிரகாஷ§க்கு புறம்போக்கு நிலங்களை வளைப்பதும் விற்பதுதான் தொழில். நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்மணி கொலை செய்யப்பட்டதற்கும் ரியல் எஸ்டேட் பிரச்னைதான் காரணம். அந்தக் கொலை வழக்கில் பெயிலில் வந்த முத்து, ரியல்

'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா?'

எஸ்டேட் தொழிலை செய்துவந்தார். முத்து சிறையில் இருந்த சமயத்தில் தனது நண்பர்கள் மூலம் தொழிலை நடத்தினார். செங்குன்றம் பகுதியில் ஐந்து சென்ட் புறம்போக்கு நிலத்தை முத்துப் பிரகாஷ் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். அதை வாங்கியவருக்குத் தெரியாமல், ராமு என்பவர் வேறு ஒருவருக்கு அதே நிலத்தை விற்றுள்ளார். இந்த விஷயம் தெரிந்து முத்துவுக்கும், ராமுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் நடந்த மறுநாளே ராமுவின் டீம்தான் முத்துவைக் கொலை செய்திருக்காங்க'' என்கிறார்கள்.

முத்துப் பிரகாஷ் வீட்டுக்குச் சென்றோம். அவரது மனைவி ஜானகி நம்மிடம், '17-ம் தேதி ஜெயிலில் இருந்து வந்தார். இரண்டு நாள் வீட்ல இருந்தார். குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்கு பணம் ஏற்பாடு செய்யணும்னு வெளியில கிளம்பினார். பொணமாத்தாங்க திரும்பி வந்தார்..'' மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழுதார்.

அவரைச் சமாதானப்படுத்திவிட்டுத் தொடர்ந்தார் மாமியார் வள்ளி, ''எங்க வீட்டுக்கு வந்துட்டு வேலூர் போறதுக்காகக் திரும்பினார். கிளம்பி கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வெளியில யாரோ கத்துற சத்தம் கேட்டு நான் ஓடினேன். முத்துவை யாரோ வெட்டிட்டு இருந்தாங்க. நான் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க ஓடி வந்தாங்க. அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சிங்க'' என்று வருத்தப்பட்டார்.

'வேலூர் சிறையில் இருந்து உத்தரவு வந்ததா?'

வழக்கை விசாரிக்கும் பொன்னேரி டி.எஸ்.பி. உஷாராணியிடம் பேசினோம். 'இந்தக் கொலைக்கு நிலத் தகராறுதான் காரணம். முத்துவைக் கொலை​செய்ததாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர். அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்த பிறகுதான் முழு விவரமும் தெரியும்'' என்றார்.

இதுமட்டும் அல்ல... கடந்த சில நாட்களுக்கு முன், பூதூர் ஏரிக்கரையில் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலமும், எடப்பாளையத்தில் புதரில் ஒரு ஆண் சடலம் எரிந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேரும் யார் என்பது இதுவரை தெரியவில்லை. சிறுனியம் சவுக்குத் தோப்பில் மூன்று இளைஞர்கள் கத்தியால் உடல் முழுவதும் கீறப்பட்ட நிலையில் கிடந்தனர். அதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மற்றவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்ற விவரமும் தெரியவில்லை. அந்தச் சம்பவம் நடந்த மறுநாள் காலையில்தான் முத்துப் பிரகாஷ் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலும் காவல் துறை விசாரிக்கிறது.

''வேலூர் சிறையில் முத்துப் பிரகாஷ் யாருடன் தொடர்பில் இருந்தார்... ஜெயிலுக்குள் ஏதாவது பிரச்னை இருந்ததா? முத்துவைக் கொலைசெய்த கும்பலுக்கு வேலூர் சிறையில் இருக்கும் ரவுடிகளுடன் தொடர்பு இருக்கிறதா? அங்கிருந்து அவரைக் கொலைசெய்ய உத்தரவு வந்ததா என்பதையும் விசாரிக்கிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

- கவிமணி