Published:Updated:

வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!

பழிவாங்குகிறதா தமிழக போலீஸ்?

வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!

பழிவாங்குகிறதா தமிழக போலீஸ்?

Published:Updated:
##~##
வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!

பெங்களூரில் வெடித்த குண்டு, கோவையை அதிரவைத்தி​ருக்கிறது. குண்டு வெடிப்புச் சம்பவத்துக்குக் காரணம் என்று, போலீஸார் கைதுசெய்திருக்கும் 11 பேரில் எட்டு பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. பழிவாங்கும் நடவடிக்கையாகவே தமிழகக் காவல் துறை எங்களை சிக்கவைத்திருக்கிறது’ என்று, இஸ்லாமியக் கூட்டமைப்புகள் போராட்டம் நடத்திவருகிறது. சோதனை என்ற பெயரில் போலீஸார் மர்மப் பொருட்களை எங்களது வீடுகளில் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களும் கைதானவர்களின் வீடுகளில் இருந்து கேட்க ஆரம்பித்துள்ளது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களின் உறவினர்களைச் சந்தித்துப் பேசினோம். 'வளையல்’ ஹக்கிம் என்பவரது மனைவி ரமலத் பானு, 'விசாரணை என்றுதான் எனது கணவரை போலீசார் அழைத்துச் சென்றனர். பிறகுதான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்ததாகத் தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த மறுநாள் உள்ளூர் போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். பெங்களூரு போலீசாரும் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவந்த பொருள் ஒன்றை எங்கள் வீட்டு பீரோவின் மேல் வைக்கமுயன்றனர். என்னுடைய அம்மா சுல்தான் பீவி, அதைப் பார்த்துட்டு சத்தம் போட்டாங்க. அதனால அந்தப் பொருளை வைக்காம எடுத்துட்டுப் போய்ட்டாங்க. அந்தக் கோபத்துல போலீஸ் எங்க அம்மாவைக் கீழே தள்ளிவிட்டுட்டாங்க. என் கணவர் மேல் எந்தத் தப்பும் இல்லை. உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்யட்டும். யாரோ செய்த தவறுக்கு நாங்க எதுக்கு பலிகடா ஆகணும்?'' என்று கலங்கினார்.

வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!

கிச்சன் புகாரி என்பவரின் மனைவி ஜெனிலாவைச் சந்தித்தோம். 'கடந்த 7-ம் தேதி நடந்த ஒரு மோதல் பிரச்னையில் இஸ்லாமியர்கள் கைதுசெய்யப்பட்டதுக்கு எதிராகப் போலீஸ் மீது என் கணவர் வழக்கு

வெடித்தது பெங்களூரு.. அலறியது கோவை!

தொடர்ந்தார். அது போலீஸுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பழிவாங்கவே அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். நெல்லை சென்றபோது அவரைக் கைதுசெய்து, நாய் சங்கிலியால் கட்டி எங்கள் வீட்டுக்குச் இழுத்து வந்தனர். அப்போது அவர், 'கரன்ட் ஷாக் கொடுத்து மிக மோசமாகச் சித்ரவதை செய்றாங்க. நான் உயிரோட வருவேனானு சந்தேகமாக இருக்கு. எனக்காக துவா செய்யுங்க’னு அழுதார்'' என்று வேதனையுடன் சொன்னார்.

சதாம் உசேனின் தாயார் பஷிரியா, 'எனது மகன் வேறு ஒரு மோதல் வழக்கில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டான். கோவை மத்தியச் சிறையில் இருந்தவனை இப்போ குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்திருக்காங்க. என் மகனுக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவனைப் பார்த்து 50 நாட்கள் ஆகிவிட்டன. உயிரோடு இருக்கானா என்ற தகவல்கூட தெரியவில்லை'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்தார்.

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா நம்மிடம், 'இங்கே கைதுசெய்யப்பட்ட யாரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. தீவிரவாதிகள் வேரறுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எங்கே குண்டு வெடிப்பு  நடந்தாலும் அதற்கு முஸ்லிம்களைப் பலிகடா ஆக்குவது சரியல்ல. தமிழக போலீஸார் யாரைக் கைதுசெய்ய நினைக்கிறார்களோ, அவர்களை எல்லாம் பெங்களூரூ போலீஸ் மூலம் கைதுசெய்துள்ளனர். தமிழக உளவுத் துறையும், மத்திய உளவுத் துறையும் திட்டமிட்டே இதைச் செய்கிறது'' என்று குற்றம் சாட்டினார்.

கோவை மாநகர காவல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். 'பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பொறுத்தவரை, கோவையில் கைதுசெய்யப்பட்ட யாருக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை. சிம் கார்டு வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட சிறிய அளவிலான உதவிகளைத்தான் செய்துள்ளனர். கைதானவர்களின் வீடுகளில் வெடிபொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது, கர்நாடக மாநில போலீஸாரின் வழக்கு என்பதால், நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. கைது நடவடிக்கையால் கோவையில் எதுவும் பிரச்னை வரக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம்'' என்றார்.

கோவையில் மீண்டும் மத ரீதியான மோதல் நடந்துவிடாமல் எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.

-ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்