Published:Updated:

''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா?''

கொந்தளிக்கும் முதல்வர் தொகுதி விவசாயிகள்

''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா?''

கொந்தளிக்கும் முதல்வர் தொகுதி விவசாயிகள்

Published:Updated:
##~##
''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா?''

ஒற்றுமையாக விவசாயம் செய்துவந்த மொண்டிப்பட்டி ஊராட்சி மக்கள், அங்கே அமைக்கத் திட்டமிடப்​பட்டுள்ள காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையால் இரண்டுபட்டுக் கிடக்​கின்றனர்முதல்வரின் தொகுதி​யான ஸ்ரீரங்கத்தில்தான் இந்த நிலை.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், 'ஸ்ரீரங்கம் தொகுதியில் 950 ஏக்கர் பரப்பளவில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காகித அடுக்கு அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்தக் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைக்காக மணப்பாறை அருகே கொண்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள வருகப்​பட்டி, கொட்​டப்பட்டி, போதுவார்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களின் நிலங்களை அடையாளம் கண்டுள்ளனர் அரசு அதிகாரிகள். இந்த நிலங்களில் பெரும்பான்மையானவை விளைநிலங்கள். கரும்பு, நெல், சோளம், வாழை, காய்கறிகள், தென்னை, மா, சப்போட்டா என பலவிதமான உணவுப் பொருட்கள் இங்கே பயிரிடப்படுகின்றன. 'இந்த விளைநிலத்துக்கு சற்றுத் தொலைவில் தரிசு நிலமும், கருவேல மரக் காடும் உள்ளன. அந்த நிலங்களை விட்டுவிட்டு, விளைநிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்த முயற்சிப்பது ஏன்?’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா?''

அந்த ஊராட்சியைச் சேர்ந்த 75 வயதான பழனியம்மாள், ''எனக்கு நாலு பொம்பளப் புள்​ளைங்க. 30 வருஷத்துக்கு முன்னால என் புருஷன் செத்துப்போயிட்டாரு. எனக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செஞ்சுதான் புள்ளைங்​கள கரையேத்துனேன். இந்த நிலத்தை கவர்மென்ட் எடுத்துக்கிட்டா, நாங்க பிழைக்க வழியில்லாம சாக வேண்டியதுதான்'' என்றார் வேதனையுடன்.

செந்தில்குமார் என்பவர், ''நாங்க எல்லாரும் அம்மாவு​க்குத்தான் ஓட்டுப் போட்டோம். அதுக்குப் பரிசா எங்களோட நிலத்தைப் பறிக்கப்போறாங்க'' என்றார் சோகமாக.

''எங்கள் நிலங்களைப் பறிப்பதுதான் ஓட்டுப் போட்டதற்குப் பரிசா?''

ஆலைக்கு எதிர்ப்பு ஒரு பக்கம் வலுக்க... மே 20-ம் தேதி, மணப்பாறை டு குளித்தலை சாலையில், 'காகித ஆலையை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது’ என மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் மறியல் நடத்தினர். குழுவின் ஒருங்கிணைப்பாளரான விஜயலட்சுமி, ''இது மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கே 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலை வரப்போவது இங்குள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கு இழப்பீடும் நில உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் தரப்போகிறது. அப்படி இருக்கும்போது தொழிற்சாலை அமைவதை ஏன் எதிர்க்கிறார்களோ? இங்கே காகித ஆலை அமைவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம். ஆலையை வேறு பகுதி​யில் அமைக்கவிட மாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

அதற்கு அடுத்த நாள்... மே 21-ம் தேதி, மணப்பாறை தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்கப் பிரமுகர்களும் பொது மக்களும் காகித ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இந்திய விவசாய சங்கத்தின் தமிழகத் தலைவரான குருசாமி, ''பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சிவப்புப் பட்டியலில்  காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. உலகில் எந்த பெரிய வளர்ந்த நாடும் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையைத் திறப்பதில்லை. அப்படிப்பட்ட ஆலையை இங்கே ஏன் நிறுவ வேண்டும்? இந்த ஆலை அமைப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்'' என்றார்.

மணப்பாறை வட்டாட்சியர் குளத்தூர் பாண்டியனைச் சந்தித்தோம். ''ஆற்றுப் படுகையில் இருந்து ஐந்து கி.மீ தூரத்தில்தான் இதுபோன்ற ஆலைகளை அமைக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. அந்தப் பகுதி மக்கள் அடையாளம் காட்டும் தரிசு நிலங்கள், கருவேல மரக் காடுகள் இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல்தான் விளைநிலங்களைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். காகித அட்டை ஆலை அமைவதால், அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும். நிலம் தருபவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாகவும் நல்ல இழப்பீடு தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக சிலர் மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள்'' என்றார்.

மே 27-ம் தேதி திருச்சிக்கு வரும் முதல்வர் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட ஏற்பாடுகள் நடத்து வருகின்​றன. மக்களின் அச்சத்தை போக்காமல் ஆலை அமைக்கப்படுமானால், தீவிர தொடர் போராட்​டங்கள் முதல்வரின் தொகுதியில் அரங்கேறலாம்.

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்