Published:Updated:

ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

மிரட்டும் சட்டம்... கலங்கும் கன்னியாகுமரி

ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

மிரட்டும் சட்டம்... கலங்கும் கன்னியாகுமரி

Published:Updated:
##~##
ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

''கையில் வெண்ணெயை வைத்துக்​கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, சொத்தைக் கையில் வைத்துக்கொண்டு கஞ்சிக்கு வழியில்லாமல் கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறோம்'' என்று குமுறுகின்றனர் குமரி மாவட்ட விவசாயிகள். ''இதற்கெல்லாம் காரணம் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்தான். அந்தச் சட்டத்தை இனியும் அரசு தளர்த்தவில்லை என்றால், நாங்கள் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்'' என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 1946-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம். அதன் பிறகு, இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு 1949-ம் ஆண்டு மெட்ராஸ் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் சட்ட வடிவம் பெற்றது. மரங்களை அழிப்பதைத் தடைசெய்து மரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. ஆனால், அது இப்போது இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக குமுறுகின்றனர் விவசாயிகள்.

குமரி மாவட்ட சிறு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோபகுமார், ''ஆரம்பத்தில் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தபோது, குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைத்தனர். 1949-ல் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை குமரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. ஏனென்றால், அது சென்னை சமஸ்தானத்துக்கான சட்டம். குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு, இங்கு நடைமுறைப்படுத்தாமல் இருந்த இந்தச் சட்டத்தை புதிதாகக் கொண்டுவந்தது. 1979, 1980, 1982, 2002 ஆண்டுகளில் ஆட்சியரின் அறிக்கை மூலமாக சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பட்டா நிலங்களை தனியார் காடுகள் என்று அறிவித்துவிட்டனர். அதனால், நாங்கள் படும்பாடு கொஞ்சநஞ்சம் அல்ல'' என்று நிறுத்த...  

ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

தொடர்ந்தார் விவசாயி சாகுல் ஹமீது. ''தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிற சொத்துக்களை விற்கவும் உரிமை மாற்றம் செய்யவும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அதிகாரி,

ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

மாவட்ட வருவாய் அதிகாரி, சுற்றுப்புறச் சூழல் பொறியாளர், வட்டாட்சியர் எனப் பலரிடமும் அனுமதி பெற வேண்டும். குழந்தைகளின் கல்வி, திருமணச் செலவு என்று அத்தியாவசிய தேவைக்கு சொத்தை விற்க வேண்டும் என்றால்கூட... ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். இந்தச் சட்டத்தால் எங்க வாழ்வாதாரமே அழிந்துவிட்டது'' என்று புலம்பினார்.

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிற பகுதிகளில் பெரும்பான்மையானது ரப்பர் சாகுபடிதான். அதனால், ரப்பர் பயிரிடும் விவசாயிகள், இந்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாகக்கூறி போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்றனர். அதுபற்றிப் பேசிய திருவட்டார் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹென்றி, ''எங்கள் பகுதியில் மரங்களை அரசாங்கம் நடவில்லை. இது கானகமும் இல்லை. இந்தப் பகுதி கானகம்போல் செழித்து வளர்ந்தது, மனிதனின் அபரிமிதமான உழைப்பால்தான். ரப்பர் சாகுபடி மற்ற பயிர்களில் இருந்து முற்றிலும்

ரப்பர் உற்பத்தி குறையுது... விவசாயிகள் வாழ்க்கை சரியுது!

வேறுபட்டது. ரப்பர் பயிருக்கு ஒரே நேரத்தில் குழிபறித்து, கன்று நட்டு, உரமிட்டுப் பராமரிக்க வேண்டும். அதில் ஏழாவது வருடத்தில் இருந்து 15 முதல் 25 ஆண்டுகளுக்கு ரப்பர் பால் எடுக்கலாம். அதன் பிறகு, மரத்தை வெட்டிவிட்டு மறுநடவுதான் செய்ய வேண்டும். இப்போது உள்ள இந்தச் சட்டத்தின்படி முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கும் புதிய மரங்களை மறுநடவு செய்வதற்கும் ஆட்சியர் தொடங்கி பலருக்கும் மனு போட்டு அனுமதி பெற வேண்டும். இதனால் முதிர்ச்சி அடைந்த மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் மிகப் பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியர், வனத் துறை அமைச்சர், முதல்வரின் தனிப் பிரிவு என பலருக்கும் மனு கொடுத்திருக்கிறோம்.

எங்களுடைய சொந்த பட்டா நிலத்தில் நாங்கள் பயிர் செய்வதற்கு ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்? உலக அளவில் குமரி மாவட்டத்தில் விளையும் ரப்பர்​தான் சிறந்த ரப்பர் என சான்று அளிக்​கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் ரப்பர் கன்றுகள், இந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் ரப்பர் விதைகளால் உருவானவைதான். குமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் சிக்கலால், வரும் ஆண்டில் இந்திய அளவில் ரப்பர் உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும்'' என்று வருத்தப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜனிடம் பேசினோம். ''இது சம்பந்தமாக தமிழக அரசின் வனத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழு, குமரி மாவட்டத்துக்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அந்தக் குழுவின் முடிவு தெரிந்தவுடன், அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

சட்டங்கள், மனிதனையும் இயற்கை வளங்களையும் காப்பதற்குத்தான். அவை, வதைப்பதாக இருக்கக் கூடாது!

- என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்