Published:Updated:

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?

குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி!

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?

குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி!

Published:Updated:
அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?
##~##

ற்றுக் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று குழந் தைகளைக் காப்பாற்றக் குதித்த ஒரு கூலித் தொழிலாளி, தனது உயிரையே தியாகம் செய்து இருக்கிறார்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த மனிதனின் பெயர்... அருள்ராஜ். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ராம் நகரைச் சேர்ந்தவர். இரு ஆண்டு களுக்கு முன்பு குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி பிரிந்து போய்விட்டார். தனியே வசித்த அருள்ராஜ்... குடிநீர் பிரச்னை, சாலைப் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காகவும் அப்பகுதி மக்களுக்காக முதல் ஆளாக வந்து நிற்பார். இதனால், அந்த ஏரியாவில் அவர் மிகவும் பிரபலம்.

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?

இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, அருள்ராஜ் ஊருக்கு வெளியே, கிருஷ்ணா நதிக் கால்வாய் அருகே மரத்தடியில் அமர்ந்து இருந்தார். தூரத் தில் கரையோரம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த யுகேஸ்வரன், ஜாஷ்சுதீன், மெஹருன்னிசா ஆகிய மூன்று குழந்தைகள் தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அருள் ராஜுக்கு அந்தக் குழந்தைகளை நன்றாகத் தெரியும். அந்தப் பழக்கத்தில் அவ்வப்போது, 'ஜாக்கிரதை... தண்ணிக்குள்ளே போகா தீங்க!’ என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்த படியே இருந்துள்ளார்.

ஆனால்... யுகேஸ்வரனும், ஜாஷ்சுதீனும் திடீரென கால்வாயின் நடுப்பகுதிக்குச் செல்ல, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். பயந்துப்போன மெஹருன்னிசாவும் பதற்றத்தில் தடுமாறி, தண்ணீரில் விழுந்துவிட்டாள். இதைக் கண்டு பதறிய, அருள்ராஜ் உடனடியாக தண்ணீரில் குதித்து நீந்தினார். முதலில், ஒன்பது வயது குழந்தையான மெஹருன்னிசாவைக் தூக்கிக் கொண்டுவந்து கரையில் போட்டார். அதற்குள் மற்ற இரு குழந்தைகளும் சுமார் 100 அடி தூரத்துக்குச் சென்று விட்டனர். உடனே, வேகமாக நீந்திய அருள்ராஜ், ஒரு வழியாக ஜாஷ்சுதீனைப் பிடித்து, இழுத்து வந்து கரை சேர்த்தார். அதற்குள், தண்ணீரில் இருந்த முட்செடிகளாலும், கற்களாலும் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தண்ணீரில் குதித்து, நீண்ட தூரம் நீந்திச் சென்று யுகேஸ்வரனையும் பிடித்துவிட்டார். அவனுக்கு 14 வயது, உடலும் சற்று

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?

குண்டு.  ஏற்கெனவே பயந்துபோய் இருந்தவன், அருள்ராஜைப் பார்த்ததும் அவர் மீது பாய்ந்து பயத்தில் இறுக்கமாகப் பிடித்து இருக்கிறான். அதைத் தாங்கிக்கொண்டு, அவனை சுமந்தபடி கஷ்டப்பட்டு நீந்தி இருக்கிறார், அருள்ராஜ். ஒருவழியாக கரைக்குப் பக்கத்தில் அவனை முழங்கால் அளவு தண்ணீரில் இறக்கிவிட்டார். யுகேஸ்வரன் சமாளித்துக் கரை ஏறிவிட்டான். ஆனால் பலத்த காயங்களாலும், மூச்சுத் திணறியதாலும் அருள்ராஜ் தண்ணீரிலேயே மயங்கி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

மீட்கப்பட்ட குழந்தைகள் ஊருக்குள் சென்று விஷயத்தைச் சொல்ல, பதறிப்போய் ஊர் மக்கள் ஓடி வந்திருக்கிறார்கள். அதற்குள், அருள்ராஜ் நீண்ட தூரம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். தண்ணீரில் குதித்துத் தேடியும் அருள்ராஜ் கிடைக்கவில்லை. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போக, அவர்களும் வந்து நீண்ட நேரம் தேடினர். கிட்டத்தட்ட சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால், முட்புதரில் சிக்கி, பிணமாகக் கிடந்தார் அருள்ராஜ்.

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?

அருள்ராஜின் அகால மரணம் ஊரையே உலுக்க... துக்கத்தில் தவித்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அவர் உடலை தாரை தப்பட்டையுடன் தூக்கிச் சென்று மாபெரும் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

கலங்கிய கண்களுடன் இருந்த அருள்ராஜின் அம்மா எலிசபெத், ''எனக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க. பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். மூத்தவன் 15 வருஷத்துக்கு முன்னமே இறந்துட்டான். அருள்ராஜ்தான் கூலி வேலைக்குப் போய் எனக்கு சோறு போட்டுட்டு இருந்தான். அவன் ரொம்ப நல்லவன்ப்பா. யாருக்காவது உதவின்னா ஓடோடி போய் செய்வான். சம்பவத்தன்னிக்கு அவனுக்குக் கடுமையான காய்ச்சல். மாத்திரைகூட போட்டுக்கலை. காலையில சாப்பிடவும் இல்லை. 'காத்தாட கால்வாய்ப் பக்கம் போயிட்டு வர்ரேன்’னு போனான். அப்புறம் அவனைப் பிணமாத்தான் பார்த்தேன். மூணு குழந்தைகளைக் காப்பாத்திட்டு, அவன் போயிட்டான். என் பையன் இறந்த துக்கம் தொண்டையை அடைச்சாலும்... இன்னொரு பக்கம் பச்சப் புள்ளைங்களைக் காப்பாத்தி இருக்கான். அந்தத் திருப்தி எனக்குப் போதும்...'' என்றார் கண்ணீருடன்!

உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது ஜாஷ்சுதீனுக்கு இன்னும் அருள்ராஜ் விஷயத்தை யாரும் சொல்லவில்லையாம். நம்மிடம் அப்பாவியாக, ''அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?''  என்று கேட்டான்.

என்ன பதில் சொல்வது?

- பி.சுபாஷ்பாபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism