Published:Updated:

பொன்முடி ராஜினாமா செய்யட்டும்!

வெறுப்பில் விழுப்புரம் தி.மு.க.

பொன்முடி ராஜினாமா செய்யட்டும்!

வெறுப்பில் விழுப்புரம் தி.மு.க.

Published:Updated:
பொன்முடி ராஜினாமா செய்யட்டும்!
##~##

தொடர்ந்து வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்தைக் கையில் வைத்திருந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. ஆனால் இப்போது அவர் நிலை..? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த மாதம் 13-ம் தேதி காலை... தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரத்தில், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகமும் தி.மு.க. வேட்பாளர் பொன்முடியும் அருகருகே அமர்ந்து இருக்க... இருவர் மனதிலும் 'திக் திக்’! முதலில் தபால் ஓட்டுகள் எண்ண ஆரம்பித்தவுடன், பொன்முடி அதிக வாக்குகளைப் பெற... சி.வி.சண்முகத்தின் முகத்தில் கலவரம்! ஆனால் அதற்கடுத்த சுற்றுகளில் எல்லாம் அதிக வாக்குகள் வாங்கி 12,097 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார் சி.வி.சண்முகம். அதுவரை பொன்முடியின் பின்னால் அமைதியாக இருந்த தி.மு.க-வில், இப்போது விதவிதமான விமர்சனங்கள். அதனால், 'பொன்முடி இனிமேல் தேர்தலில் சென்னை பக்கம்தான் நிற்பார், விழுப்புரம் பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்’ என்று தி.மு.க-வினரே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.

பொன்முடி ராஜினாமா செய்யட்டும்!

கடந்த 28-ம் தேதி, விழுப்புரம் தி.மு.க. நகரச் செயலாளர் பாலாஜி, ''பொன்முடிக்குக் கிடைக்காத வாக்குகள் 7,000-த்தை எனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, நான் எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்!'' என்று தடாலடியாக அறிவித்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், 31-ம் தேதி, நகராட்சித் துணை சேர்மன் பார்த்திபன் ராஜினாமா செய்தார். தொடர் ராஜினாமாக்கள் குறித்து, ''என்னதான் நடக்கிறது விழுப்புரம் தி.மு.க-வில்?'' என உடன்பிறப்புகளிடம் கேட்டோம்.

''தேர்தலில் பொன்முடி தோத்ததுக்குக் காரணம், வேறு யாரும் இல்ல. அவருடைய அணுகுமுறைதான்! ஆனா, அவரோ இந்தத் தோல்விக்காக, அவருடன் இருந்தவங்களையும், நகரச் செயலாளரையும் கடுமையா வசைபாடினார். அந்தக் கோபத்தின் எதிரொலியாத்தான் நகரச் செயலாளர் பாலாஜி ராஜினாமா செய்தார். பொன்முடி டெல்லி செல்லும்போது, 'நான் இனி விழுப்புரம் வரமாட்டேன். விழுப்புரம் தொகுதியில  இனி எப்பவும் போட்டியிட மாட்டேன்’னு சொல்லிவிட்டுத்தான் சென்னைக்குக் கிளம்பினார். நிர்வாகிகளை மதிக்காமல் அவர் நடந்து கொள்ளும்விதம், அனைவருக்குமே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியே அவர் தொடர்ந்து நடந்துகொண்டால்,  தி.மு.க-வில் இருந்து பாதிப் பேர் கழட்டிப்பாங்கன்னு தோணுது. 7,000 வாக்குகள் குறைஞ்சதுக்காகப் பொறுப்பேத்துக்கிட்டு பாலாஜி ராஜினாமா செய்ததுபோல, மீதி 5,000 வாக்குகளுக்குப் பொன்முடி பொறுப்பேத்துக்கிட்டு ஏன் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது?'' என்று கேள்வி எழுப்பினார்கள் காட்டமாக.

பொன்முடி தரப்பினரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''பொன்முடி எக்காரணம் கொண்டும் அடுத்த தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட மாட்டார். இதே விழுப்புரத்தில்தான் போட்டியிடுவார். அவர் வேறு தொகுதிக்கு மாறினால், 'பயந்து ஓடிட்டார்’ன்னு சொல்ல மாட்டாங்களா? அதுக்காகவே அவர் மீண்டும் சி.வி.சண்முகத்துக்கு எதிராக களமிறங்கி, கண்டிப்பா அவரைத் தோற்கடிப்பார். அவர் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பதால் கண்டிப்பாக சென்னைக்குப் போக மாட்டார். அப்படியே ஒருவேளை தொகுதி மாறினாலும், அவரது சொந்த ஊரான திருக்கோயிலூரில்தான் போட்டி இடுவார். நகரச் செயலாளர் ராஜினாமா செய்யும்போது, மாவட்டச் செயலாளரை நேரில் பார்த்துக் கடிதம் கொடுக்கவில்லை. அவர் தன்பாட்டுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து ராஜினாமா கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பியைக் கொடுத்துவிட்டு, 'காப்பி டு மாவட்டச் செயலாளர்’ன்னு அனுப்பி வைச்சிட்டார். இதை பாலாஜி திட்டமிட்டுச் செய்தாரோ அல்லது சாதாரணமாக செய்தாரோ, தெரிய​வில்லை!

விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாளர் ராதாமணி, 'இந்த முறை பொன்முடி ஜெயிக்க மாட்டார். நான்தான் இனி மினிஸ்டர்’னு சொன்னதாக்கூட ஒரு பேச்சு எங்க காதுக்கு வந்துச்சி. ராதாமணி இப்பதான் முதல் முறையா தேர்தல்லயே நிக்குறார், அவர் எப்படி இப்படிச் சொல்லலாம்?'' என்று கொதித்தவர்கள், ''இப்போ நடந்த செயற்குழுக் கூட்டத்தில்கூட, 'நாம தோத்ததுக்கான காரணத்தைப்பத்தி பேச வேண்டாம். அடுத்ததா பஞ்சாயத்துத் தேர்தல் இருக்கு... நாடாளுமன்றத் தேர்தல் அடுத்து வருது. அஞ்சு வருஷம் கடகடன்னு ஓடிடும். அடுத்தடுத்த தேர்தல்களில் ஜெயிக்கிறதுக்கான முயற்சிகள் எடுப்போம். அதுக்கு வெள்ளோட்டமா தலைவர் பிறந்த நாளை ஜோராகக் கொண்டாடுங்க’ என்று  நம்பிக்கையாகத்தான் பேசினாரே தவிர, யாரையும் ஒரு வார்த்தைகூட குறை சொல்லவில்லை. தோத்ததும் இவுங்களாவே கண்டதையும் இஷ்டத்துக்குப் பேசறாங்க!'' என்று முடித்தனர்.

வாயால் வளர்ந்த பொன்முடி அதே வாயால் தோற்றும் போயிருக்கிறார்!

- அற்புதராஜ், படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism