Published:Updated:

குற்றவாளியைப் பிடிக்க மிளகாய் தேய்ப்பு!

கோவை திகுதிகு

குற்றவாளியைப் பிடிக்க மிளகாய் தேய்ப்பு!

கோவை திகுதிகு

Published:Updated:
குற்றவாளியைப் பிடிக்க மிளகாய் தேய்ப்பு!
##~##

'குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க புதுப்புது நவீன வழிகள் கையாளப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில், வீடு வீடாகப் போய் மிளகாய் வற்றல் வாங்குகிறார்கள் எங்கள் கிராமத்து மக்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, 'இதென்ன கலாட்டா?’ என்று அறிந்துகொள்ள களத்தில் குதித்தோம்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகில் உள்ளது அரசம்பாளையம் பஞ்சாயத்து. இங்குள்ள அரிஜன காலனியில் சுமார் 200 வீடுகள் இருக்கின்றன. இந்தக் காலனி வீதிகளில் பஞ்சாயத்துக் குடி தண்ணீருக்காக பைப் லைன் போட்டாலே, விதவிதமான 'பஞ்சாயத்துகள்’ வெடிப்பது தொடர்கதையாக நடக்கிறது. சில மாதங் களுக்கு முன்பு ஒரு குழாயில் எலுமிச்சம் பழத்துடன், குங்குமம் தடவப்பட்ட கல் ஒன்று சிவப்பு நிற நூலில் கட்டப்பட்டுஇருந்தது. இதைப் பார்த்துக் காரணம் புரியாமல் மிரண்டு போனார்கள் மக்கள். இந்நிலையில், கடந்த வாரம் புதிதாக போடப்பட்ட ஒரு குழாயை உடைத்து, அதனுள் பெட்ரோல் ஊற்றப்பட்டு இருக்கவே, கிர்ர்ர்​ராகிக் கிடக்கிறார்கள் மக்கள்.

குற்றவாளியைப் பிடிக்க மிளகாய் தேய்ப்பு!

இதுகுறித்துப் பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சின்னசாமி, ''குடி தண்ணீர்க் குழாயைக் குறிவெச்சு இப்படிச் செய்றவன் இந்த ஊர் ஆசாமியா இருக்க வாய்ப்பு இல்லை. இது காத்து, கருப்பு பிரச்னையான்னும் புரியலை. இதில் அரசியல் சிக்கல் இருக்கலாம்ன்னு நினைக்கிறேன். நான் தலித் என்பதால், எதிர்க் கட்சி நபர்கள் சிலருக்குப் என்னைப் பிடிக்கலை. குடிதண்ணீர், சாலை வசதின்னு வரிசையா மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துட்டா, மறுபடியும் நானே ஜெயிச்சு வந்துடுவேன்னு பயந்து, தடுக்குறதுக்காக இப்படிச் செய்றாங்களோன்னும் சந்தேகமா இருக்கு.  

குற்றவாளியைப் பிடிக்க மிளகாய் தேய்ப்பு!

இங்கே இருக்கிற வீடுகளுக்கு சில பைப்புகள்தான் இருக்கு. இதனால அடிக்கடி சண்டை சச்சரவு வரும். வாய்ப்புக் கிடைக்​கிறப்ப நானும் புது பைப் போடுறேன். சமீபத்​திலும் ஒரு லைன் போட்டேன்.புதுசா பைப் மாட்டுறப்பவே, எதிர்க் கட்சி ஆளுங்க சிலர் பிரச்னை செஞ்சாங்க. அதையும் மீறி பைப்பை போட்டோம். அடுத்த நாள் ராத்திரியில் பைப்பை உடைச்சு பெட்ரோலை ஊத்தி இருக்காங்க. ஊர்க் கூட்டம் போட்டு, 'இது யாரோட வேலை?’னு கேட்டோம். அஞ்சு நாள் டயம் கொடுத்தோம். அதுக்குள்ளே தப்பு செஞ்சவன் உண்மையைச் சொல்வான்னு பார்த்தோம். ஆனா, எந்தப் பதிலும் வரலை.

அதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேற வழியை முயற்சி செய்கிறோம். அதுக்காக  எல்லா வீடுகளிலும் மிளகாய் வற்றலை வாங்கிட்டு இருக்கோம். ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்குக் கொண்டுபோய் சாமி கும்பிட்டு நேர்த்திக்கடன் கல்லில் இந்த மிளகாயைத் தேய்ப்போம். அப்படித் தேய்த்தால், தப்பு செஞ்சவன் உடம்பில் எரியும். கூடிய சீக்கிரத்தில் அவன் நோயில் விழுந்து தண்டனை அனுபவிப்பான்...'' என்றார் ஆதங்கத்துடன்.  

அவர் சொன்னபடியே காலனி வீடுகளில் பல பெண்கள், மிளகாயை சேகரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆதரவாளர்கள் சிலர், ''பஞ்சாயத்துத் தலைவர் இப்படிச் செய்வது நல்லாவா இருக்கு?!'' என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.  

இந்நிலையில், அரசம்பாளையம் அருகில் இருக்கும் சொலவம்​பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமாரபாளையத்திலும், சில வாரங்களுக்கு முன்பாக இதேபோன்று ஒரு காரியம் நடந்துள்ளது. பஞ்சாயத்து ஆழ்கிணறில் விவசாயத்துக்குப் பயன்படும் பூச்சிக் கொல்லி மருந்தை யாரோ கலந்து விட்டார்கள். கெமிக்கல் வாசனையை வைத்து தண்ணீர் விஷமாகி இருப்பது கண்டறியப்பட்டதால், மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த விவகாரத்திலும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இந்தப் பஞ்சாயத்து மக்களும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க மிளகாய் அரைக்கலாமா? முனி கோயிலில் குறி கேட்கலாமா? என்று பரபர விவாதம் நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு காவல் நிலையத்​தில் நாம் மேற்கூறிய சம்பவங்கள் குறித்து விசாரித்தபோது, ''எங்களுக்கு இந்த சம்பவங்கள் குறித்து எந்தப் புகாரும் வரவில்லை... '' என்றார்கள் அசட்டையாக.

இந்த இரு சம்பவங்களிலும் உயிர் அபாயம் ஏதும் நிகழவில்லை என்பதற்காக, போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது சரியல்ல. உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து, மக்கள் பயத்தை நீக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.  

- எஸ்.ஷக்தி

படங்கள்: ரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism