Published:Updated:

அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

சேலம் திகில்

அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

சேலம் திகில்

Published:Updated:
அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

ப்படி என்னகோப​மோ? சேலம் மாவட்​டம் மல்லூரில் அரசியல் கட்சி​களைச் சேர்ந்தவர்களின் உடமைகள் மீது தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இப்படி தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கவே, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அரண்டு கிடக்கிறார்கள். 

அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

இதுபற்றி அறிந்துகொள்ள 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகநாதனை சந்தித்​தோம். ''நான் இதே வார்டில் மூன்று முறை கவுன்சிலராக தொடர்ந்து இருக்கேன். என்கிட்ட எல்லாக் கட்சி​யினருமே அன்பா இருப்பாங்க. சில மாதங்கள் முன்பு என் ஆம்னி வேனுக்கு யாரோ தீ வைச்சுட்டாங்க. சம்பவம் நடந்த அன்று நான், நெடுஞ்சாலைத்துறைத் அமைச்சரைப் பார்க்க சென்னைக்குக் கிளம்​பிட்​டேன். செல்போனில் சார்ஜ் இல்லாததால், வீட்டில் இருந்தவங்க என்னிடம் பேச முடியல. வீட்டில் வந்து பார்த்தப்பதான் முழு விவரமும் தெரிஞ்சுது. ஆம்னி வேன் மேல போட்டிருந்த கவரையும், ஸ்டெப்னி டயரையும் எடுத்து வண்டியின் கீழே உள்ள இன்ஜினுக்கு அடியில் போட்டு, அதை மண்ணெண்ணெய் ஊத்தித் தீ வைச்சுட்டுப் போயிருக்காங்க. ஸ்டெப்னி டயர் வெடிச்ச சத்தம் கேட்டுதான் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைச்சிருக்காங்க. யார் வெச்சதுன்னு தெரியல. ஆனா, இப்படி தொடர்ந்து பல இடங்களில் தீ வெச்சிருக்காங்க. நல்லா தெரிஞ்சவங்கதான் இப்படிப் பண்ணியிருக்க முடியும். வெளியூரில் இருந்து வந்து, தீ வைச்சுட்டு அவ்வளவு சீக்கிரமா தப்பிப் போக முடியாது. அக்கம்பக்கத்துல எல்லோரும் அன்பாத்தான் பேசுறாங்க. யாருன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? போலீஸ் கொஞ்சம் அக்கறை எடுத்தா நல்லது. ஆனால் மல்லூரில் உள்ள காவல் துறை, இதை எல்லாம் கண்டுபிடிக்கிற மாதிரியே தெரியல. அம்மா ஆட்சியில இனியும் இந்த மாதிரி தவறுகள் நடக்காம காவல் துறைதான் பார்த்துக்கணும்!''என்றார்.

அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

தி.மு.க-வின் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மணி, ''நாடாளுமன்றத்  தேர்தலில் இருந்து மல்லூரில் பல இடங்களில் தீ வைச்சிருக்காங்க. ஈஸ்வரன் கோயில் பக்கத்தில் உள்ள கொடிவேந்தனின் டெம்போவுக்கும், 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரேணுகா வீட்டிலும் தீ வைச்சாங்க. இத்தனைக்கும் அவுங்க புருஷன் போலீஸ்காரர். எங்க தி.மு.க. கட்சி ஆபீஸ்லயும் தீ வைச்சாங்க... மனுநீதி நாளுக்கு வீரபாண்டியார் வருவதற்கு வரவேற்பு கொடுக்க வெச்சிருந்த ஃபிளெக்ஸ் பேனர்கள் எல்லாம் தீயில் எரிஞ்சு போச்சு. தே.மு.தி.க. ஆபீஸுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கும்கூட தீ வைச்சுட்டாங்க. யார் தீ வைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்க முடிவு செஞ்சு, இரவுபகலா வேவு பார்த்து, ஒரு முறை தீ வெச்சவனைக் கண்டுபிடிச்சோம். போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சோம். நான்தான் தீ வைச்சேன்னு உண்மையை அவனும் ஒப்புக்கிட்டான். ஆனா, அவனுக்கு ஒரு அரசியல்வாதி வேண்டப்பட்டவர்ங்கிறதால, அவன்கிட்ட பணத்தை வாங்கிட்டு விட்டுட்டாங்க.

மல்லூரைப் பொறுத்தவரை, காவல் துறை ரொம்ப மோசம்! ஒரு சின்ன பிரச்னைன்னு யார் ஸ்டேஷனுக்குப் போனாலும் பணத்தைக் கறந்துட்டு, கட்டப்பஞ்சாயத்துப் பண்ணி அனுப்பிடுவாங்க. இவுங்களைப் பற்றி வெளியில் பேசினா, 'உன் மேல கேஸ் போடறேன்’னு மிரட்டுறாங்க. இப்படித் தொடர்ந்து பல இடத்துல தீ வைக்கறவன் யாருன்னு கண்டுபிடிக்கவும் துப்பு இல்லை, கண்டுபிடிச்சுத் தந்தாலும் வெளியே அனுப்பிடுறாங்க!'' என்றார் குமுறலாக.

அரசியல்வாதிகளை மிரட்டும் மர்மத் தீ!

தே.மு.தி.க. நகரச் செயலாளர் மனோகரன், ''இரண்டு வாரத்துக்கு ஒரு முறை எங்காவது தீ வைப்பு சம்பவம் நடக்குது. அடுத்தது எங்க தீ வைப்பாங்களோன்னு பயமா இருக்கு. ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தாலும், வாங்கிட்டு 'கண்டுபிடிச்சிடலாம்’னு சொல்லி அனுப்பிடறாங்க. எங்க கட்சி அலுவலகத்தை ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இரவுல தீ வெச்சுக் கொளுத்தினப்ப, மாவட்ட செயலாளர் வந்து பார்த்துட்டு, மல்லூர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். அது என்ன ஆச்சுன்னே தெரியல. போலீஸ்தான் விரைவில் குற்றவாளியைப் பிடிக்கணும்!'' என்றார்.  

இதுபற்றி மல்லூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ''ஆமா! மல்லூரில் தொடர்ந்து யாரோ ஃபயர் வைக்கிறங்க. இதை யார் செய்றாங்கன்னு நாங்களும் ஒரு தனிப்படையை அமைச்சு தேடிக்கிட்டுத்தான் இருக்கோம். கூடியவிரைவில் பிடிச்சுருவோம். குற்றவாளியைப் பிடிச்சுக் கொடுத்தோம். பணம் வாங்கிட்டு ஸ்டேஷனில் அனுப்பிவிட்டார்கள் என்று சொல்வது உண்மை இல்லை. நான் இங்க வந்து மூன்று மாசம்தான் ஆவுது. பழைய ஃபைல்களை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கேன். விரைவில் குற்றவாளியைப் பிடிச்சுருவோம்...'' என்றார்.

மீண்டும் தீ பிடிப்பதற்குள், போலீஸ் குற்றவாளியைப் பிடிக் கட்டும்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism