Published:Updated:

தி.மு.க. கூட்டணி வேண்டாம்..!

திருச்சி காங்கிரஸ் திடீர் தீர்மானம்

தி.மு.க. கூட்டணி வேண்டாம்..!

திருச்சி காங்கிரஸ் திடீர் தீர்மானம்

Published:Updated:
தி.மு.க. கூட்டணி வேண்டாம்..!
##~##

'தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டும்!’ என்று காங்கிரஸார் அவ்வப்போது குரல் கொடுப்பதும், 'காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகுகிறோம்’ என தி.மு.க. தலைமை பூச்சாண்டி காட்டுவதும், தமிழக அரசியலில் பார்த்து, அலுத்துச் சலித்த விஷயங்கள்! சட்டசபைத் தேர்தல் முடிந்து ஆட்சி மாறிய நிலையில், 'உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தொட்டியம் ராஜசேகரனிடம் இந்தத் தீர்மானம் பற்றிக் கேட்டதும், பொங்கிவிட்டார்.

தி.மு.க. கூட்டணி வேண்டாம்..!

''திருச்சி மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் தி.மு.க-வும், ரெண்டுல காங்கிரஸும் போட்டியிட்டது. போட்டியிட்ட ரெண்டிலுமே காங்கிரஸ் தோத்துப்போக முழுக் காரணம் தி.மு.க-தான்! மணப்பாறை, முசிறி ரெண்டு தொகுதிகளிலும் போட்டி தி.மு.க. வேட்பாளர்களை இறக்கினாங்க. முசிறி தொகுதியில போட்டியிட்ட எனக்கு எதிரா கண்ணையனும், மணப்பாறை வேட்பாளரான சுப.சோமுவுக்கு எதிரா பேராசிரியர் பொன்னுசாமியும் நின்னாங்க. இதை, தி.மு.க. மாவட்டச் செயலாளர் நேரு கண்டுக்கலை. சொல்லப்போனா, அவங்கள ஊக்கு விச்சார். கூட்டணித் தலைவரான கருணாநிதியிடம் விவகாரத்தை முறையிட்டோம். அவரும் நேருவைக் கூப்பிட்டுப் போட்டி வேட்பாளர்களை வாபஸ் வாங்கச் சொன்னார். அப்பவும் பலன் இல்லை. தி.மு.க. வேட் பாளர்கள் குறைஞ்ச வாக்கு வித்தியாசத்தில்தான் தோத்தாங்க. லால்குடி தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் சௌந்தரபாண்டியன் குறைஞ்ச வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சார். ஆனா, காங்கிரஸ் வேட்பாளர்கள், 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் நிலை. இதுக் கெல்லாம் காரணம் யார்? தி.மு.க-தானே? அப்புறம்எதுக்கு அந்தக் கட்சியோட கூட்டணியில்இருக்கணும்?

தனிச்சுத்தான் போட்டியிடணும். அப்படிச் செஞ்சா, உள்ளாட்சித் தேர்தல்ல முழு வெற்றி கிடைக்காவிட்டாலும், கை சின்னம் எல்லா இடங்களுக்கும் பரவலா போய்ச் சேரும். அடுத்து வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல முழுப் பலன் கிடைக்கும். அதனால எங்களோட தீர்மானத்தை மாநிலத் தலைமைக்கும், அகில இந்தியத் தலைமைக்கும் அனுப்பி வெச்சிருக்கோம்...'' என்றார் சூடாக.

தி.மு.க. தரப்பில் இதுபற்றிப் பேசினோம். ''அவங்க மாநிலத் தலைமை சொல்வதே டெல்லி யில் எடுபடுவது இல்லை. திருச்சியில் இருந்து இவங்க சொல்றதா, மேலிடத்தின் காதுல விழுந்துடப் போகுது... விடுங்க சார்! தேர்தல்ல ராஜசேகரன் தோத்தா, அதுக்கு அவங்க கட்சியில இருக்குற கோஷ்டிப் பூசல், மக்களுக்கு அவங்க மேல இருக்குற அதிருப்தின்னு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு. அதை எல்லாத்தையும் விட்டுட்டு, எங்க மாவட்டச் செயலாளர் நேரு மேல பாஞ்சால் அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? இப்போதைக்கு எங்களோட கவனம் எல்லாம் கட்சியைப் பலப்படுத்துறதுலேயும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்குறதுலேயும்தான் இருக்குது. இதுபோல வெத்துவேட்டு ஆட்களுக்கு பதில் சொல்லி, எங்க நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!'' என்கிறார்கள் கட் அண்ட் ரைட்டாக.

- ஆர்.லோகநாதன்

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism