Published:Updated:

காந்தியை தோற்கடித்தாரா துரைமுருகன்?

வேலூர் தி.மு.க. விறுவிறு

காந்தியை தோற்கடித்தாரா துரைமுருகன்?

வேலூர் தி.மு.க. விறுவிறு

Published:Updated:
காந்தியை தோற்கடித்தாரா துரைமுருகன்?
##~##

''ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட் பாளரான காந்தி தோற்கக் காரணம் துரைமுருகன்தான்! காந்தி மீது இருக்கும் சொந்த வெறுப்பில், கட்சியை அடகு வெச்சிட்டார். இனியும் தலைவர் அவரைக் காப்பாற்ற நினைத்தால், வேலூரில் கட்சி காணாமல் போய்விடும்...'' என்று ஆவேசக் குரல் எழுப்புகிறார்கள் வேலூர் மாவட்ட உடன்பிறப்புகள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்திக் கும், கருணாநிதியின் வலக் கரமாக வலம்வரும் துரை முருகனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்த விரிசல் அதிகமாகிவிட்டது. காந்தியின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''ஆரம் பத்தில் இருந்தே எங்கள் அண்ணன் காந்தியை, துரைமுருகனுக்குப் பிடிக்காது. அண்ணனோட அசுர வளர்ச்சியைக் கண்டு அவருக்கு பயம். அதோடு, அவருக்கு வயதாகிவிட்டதால், தன் மகனையோ அல்லது தம்பி துரைசிங்காரத்தையோ அரசியலில் வளர்த்துவிட நினைச்சார். அது நடக்கலை. எங்க அண்ணன் குறுகிய காலத்தில் கட்சித் தலைமைக்கு நெருக்கமாகி விட்டார். துரைமுருகனிடம் தினமும் தளபதி ஸ்டாலின்

காந்தியை தோற்கடித்தாரா துரைமுருகன்?

பேசுவாரோ இலையோ... எங்க அண்ணனுடன் போனில் பேசுவார். 'மாவட்டத்தில் கட்சி எப்படி இருக்கு? நீங்கதான் அதன் வளர்ச்சியைப் பார்த்துக்கணும்’னு அண்ணனிடம் தளபதி சொல்வார். இதெல்லாம் துரைமுருகனுக்குப் பிடிக்கலை. ராணிப்பேட்டை தொகுதியை காந்திக்குக் கொடுக்கக் கூடாதுன்னு துரைமுருகன் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டார் தெரியுங்களா? தளபதி மனசு வெச்சதால அண்ணனுக்கு ஸீட் கிடைச்சது.

தொகுதி மறுசீரமைப்பில் ராணிப்பேட்டையில் உள்ள வள்ளிமலை உட்பட சில பகுதிகள் காட்பாடி பகுதியோடு சேர்ந்துருச்சு. துரைமுருகன் அங்கே ஓட்டு கேட்கப் போகும்போது நாங்களும் போய் இருந்தோம். வள்ளிமலை ஏரியாவுல இருந்த மக்கள் 'இங்கே ரோடு வசதி சரியில்லை, தண்ணி வசதி இல்லை’னு துரைமுருகன்கிட்ட புகார் செஞ்சாங்க. அதுக்கு துரைமுருகன், 'உங்க எம்.எல்.ஏ. காந்தி எதுவும் செய்யலையா?’ன்னு அவங்ககிட்டயே குதர்க்கமா கேட்டார். அப்புறம் எப்படி மக்கள் ஓட்டுப் போடுவாங்க? அண்ணனுக்கு ஆதரவா பிரசாரம் பண்ண தொகுதிப் பக்கம் வரவே இல்லை.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திறப்பு விழாவில்கூட அண்ணனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போயிட்டார். ஜனவரி மாசம் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு அண்ணனைக் கூப்பிடவே இல்லை. அண்ணன் நடத்திட்டு இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சி மூலமா அவரோட புகழ் மக்களிடம் பெருகுவதை துரைமுருகனால் ஜீரணிக்கவே முடியலை.

கட்சியோட எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி, ஒரு தெருமுனை பிரசாரமா இருந்தாலும் துரை முருகனை எங்க அண்ணன் பாராட்டிப் பேசாம இருக்க மாட்டார். இவரோ எந்தக் கூட்டத்துலேயும் எங்க அண்ணனைப் பத்தி ஒரு வார்த்தைகூட பேச மாட்டார். காட்பாடி தொகுதியில் அவர் தோற்றுப் போனால்கூட பரவாயில்லை. காந்தி, ராணிப் பேட்டையில் ஜெயிச்சிடக் கூடாதுன்னு நினைச்சார். எப்படியோ ஜெயிச்சிட்டார்... ஆனா, இது வரைக்கும் காட்பாடி தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வரவே இல்லை. சென்னையில் இருந்துக்கிட்டு தலைவருக்கு ஜால்ரா அடிக்கிறதை மட்டுமே தொடர்ந்து செய்றார். அவர் என்ன வேணும்னாலும் செய்யட்டும். எங்க அண்ணன் தன்னோட செல்வாக்கை மறுபடியும் வேலூர்ல காட்டத்தானே போறார்...'' என சூடு குறையாமல் சொன்னார்கள்.

துரைமுருகன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே... அப்படித்தான் இருக்குது அவங்க சொல்றது. கடந்த அஞ்சு வருசத்துல தொகுதி மக்களுக்குத் தேவையானதை செஞ்சு கொடுத்திருந்தா மக்கள் எதற்காக தோற்கடிக்கப் போறாங்க..? தலைவர் கலைஞருக்கு அடுத்தபடியா இருக்கும் முக்கியமானவர்களில் அண்ணன் துரை முருகனும் ஒருத்தர். இந்த மாதிரி லோக்கல் அரசியல் பண்ண வேண்டிய அவசியம் அவருக்குக் கிடையாது!'' என்றார்கள்.

இந்த விவகாரம் பற்றிப் பேச துரைமுருகனை பல முறை தொடர்பு கொண்டோம். ''ஐயா பிஸியா இருக்கார். அப்புறம் பேசுங்க...'' என்றே திரும்பத் திரும்ப பதில் சொன்னார் அவரது உதவியாளர். அதன் பிறகு துரைமுருகனின் தம்பி துரைசிங்காரத்திடம் பேசினோம். ''அரசியலே வேண்டாம்னு ஒதுங்கி இருக்கேன். எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால விவசாயத்தில் இறங்கிட்டேன். அண்ணனைப் பத்தி நீங்க சொல்ற மாதிரியான புகார் எதுவும் எங்க கவனத்துக்கு இது வரைக்கும் வரலை. அவரைப் பொறுத்த வரைக்கும் தலைவரும், கட்சியும்தான் உயிர் மூச்சு. சிலர் பொறாமையில என்ன வேணும்னாலும் சொல்வாங்க. சொல்லிட்டுப் போகட்டும். அதற்கு எல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது!'' என்றார்.

வேலூர் மாவட்டத்தில் உருவாகி இருக்கும் கோஷ்டிப் பூசலை, அறிவாலயம் உடனே கவனிக்கவில்லை என்றால் கட்சிக்கு ஆபத்துதான்!

- கே.ஏ.சசிகுமார்

படம்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism