Published:Updated:

கேரளாவுக்கு எதிராகக் காரமடையில் வெடித்த வைகோ

காய்கறி தரமறுத்தால் என்ன செய்வீர்கள்?

கேரளாவுக்கு எதிராகக் காரமடையில் வெடித்த வைகோ

காய்கறி தரமறுத்தால் என்ன செய்வீர்கள்?

Published:Updated:
கேரளாவுக்கு எதிராகக் காரமடையில் வெடித்த வைகோ
##~##

ம.தி.மு.க-வின் 18-வது ஆண்டு தொடக்கவிழாவுக்​காக கடந்த 6-ம் தேதி கோவை மாவட்டத்​துக்கு வந்தார் வைகோ. திருப்பூர் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இரவு காரமடையில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தார். மேடையில் ஈழ விவகாரம் தொடர்பாக வைகோ பேசிய சி.டி. ஒளிபரப்பட்டது. வெண்திரை முழுக்க ஈழத்தமிழ் ரத்தங்கள் சிதறிய போதெல்லாம் இயலாமையில் 'உச்’ கொட்டியது, கூட்டம். செஞ்சோலை சிறார்கள் மரணக் காட்சிகளும், முள்ளிவாய்க்கால் குரூரக் காட்சிகளையும் கண்டு பெருங்குரலெடுத்து அழுதார்கள் பெண்கள். காமன்வெல்த் இறுதி போட்டியில் ராஜபக்ஷே கலந்து கொண்ட காட்சி வந்தபோது, 'பிணந்திண்ணி நாயே!’ என்று மக்கள் வெடித்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தேர்தலைப் புறக்கணித்ததே, எதிரியை வீழ்த்திடத்தான்’ - பொதுக்கூட்ட மேடைக்கு எதிரே பளிச்சிடும் ஃபிளக்ஸைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவாறே மைக் பிடித்தார் வைகோ. ''கடந்த தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்தபோது சிலர் அஞ்சினார்கள், பலர் 'இதுவரையில் பட்டபாடெல்லாம் வீணாகி விடுமோ?’ என்று வெம்பினார்கள். ஆனால், என் உறுதி குலையவில்லை, ஆபத்தைக் கண்டு அசரவில்லை. ஆபத்தை சந்திக்கும் முடிவை எடுப்பவனே சாதிப்பவன். ம.தி.மு.க-வுக்கு இதுதான் நேர்த்தியான நேரம். உன்னதமான சூழல்.

கேரளாவுக்கு எதிராகக் காரமடையில் வெடித்த வைகோ

மக்கள் பிரச்னை எங்கே இருக்கிறதோ, தோள் கொடுக்க ம.தி.மு.க. அங்கே இருக்கும். கேரளத்தில் கம்யூனிஸ ஆட்சி இறங்கி காங்கிரஸ் பொறுப்புக்கு வந்து இருக்கிறது. நண்பர் உம்மன் சாண்டி தன் மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டுவார் என்று பார்த்தால், எடுத்த எடுப்பிலேயே 'முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று வம்பு வளர்க்கிறார். ஏன் உம்மன்... விபரீதத்துக்கு வித்திடுகிறீர்கள்? இது நடந்தால் பாசனத்துக்குத் தண்ணீர் இருக்காது. வைகையிலும் தண்ணீர் இருக்காது. நான்மாடக் கூடலாம் மதுரையில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காது. எங்களுக்கு வரும் தண்ணீரைத் தடுக்க முயலும் உங்களுக்கு காய்கறியையும், அரிசியையும், பாலையும் தடுக்க நினைத்தால் உங்கள் நிலை என்னவாகும்? நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்னை என்றாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அரசாங்கம் இந்த விவகாரத்தில், வீரியமாக என்ன முடிவு எடுத்தது?. அணை விவகாரத்தில் அச்சுதானந்தன் கூட்டம் அக்கிரம முடிவுகளை எடுத்தபோதே அதைத் தடுத்திருக்க வேண்டாமா? மக்கள் பிரச்னைகளில் எத்தனை பிழைகளைப் புரிந்திருக்கிறது கலைஞர் அரசு?

கேரளாவுக்கு எதிராகக் காரமடையில் வெடித்த வைகோ

ஏதோ போகிற போக்கில் ஆரம்பிக்கப்​பட்டதா தி.மு.க.? ரத்தமும், வியர்வையும் சிந்தி அண்ணா தொடங்கிய கட்சி. லட்சோப லட்சம் தொண்டர்களின் உயிர் உழைப்பில் வளர்ந்த இயக்கம். அண்ணா மரணம் அடைந்த பிறகு, வெள்ளித் தாம்பாளத்தில் அல்லவா உங்களுக்கு அதிகாரம் வந்து சேர்ந்தது. பல லட்சம் மக்களின் ஆதரவைப் பெற்ற மனிதநேய மக்கள் திலகமும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து கழகத்தை வளர்த்துக் கொடுத்தாரே! அப்படிப்பட்ட இயக்கத்தை முழுக்க முழுக்க சுயநலனுக்காகக் காவு கொடுத்து இருக்கிறீர்களே! இன்றைய அரசியலில் நாங்கள் உங்களை விட பல நூறு படிகள் மேலே. ம.தி.மு.க. எடுத்துக்கொண்ட முடிவில் சறுக்கல்கள் இருக்கலாம். பிழைக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். பதவி, பொறுப்பு இல்லாமல் மனிதன் வாழ்ந்திடலாம் ஆனால் பழிச்சொல்லோடு, அவப்பெயரோடு வாழக் கூடாது. 'பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி வைத்து இருக்கிறார் வைகோ’ என்று அன்று எங்கள் மீது ரசாயன வார்த்தைகளைத் தூக்கி வீசியவர்கள், எங்களது தேர்தல் புறக்கணிப்பை பார்த்து வாயடைத்து நின்றார்கள். நாங்கள் கை சுத்தமானவர்கள் என்பது நிரூபணமாகி இருக்கிறது. போதும்... இதற்கு மேல் உங்களைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை. காரணம் மக்கள் உங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கி இருக்கிறார்கள். மேலும் பலமிக்கவனிடம் மட்டுமே மோத விரும்பும் நான் நிராயுதபாணிகளிடம் போரிடுவது இல்லை...'' என்று சற்று இடைவெளிவிட்டவர் இளகிய குரலில்... ''நான் வரும் முன் என் உரையோடு சுழன்ற ஈழ துயர சி.டி-யை பார்த்து இருப்பீர்களே... நெஞ்சம் வெடித்திருக்குமே! இந்த சி.டி-யைப் பார்த்த பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு 'சாப்பிட மனம் வரவில்லை, தூக்கம் வரவில்லை’ என்று புலம்புகிறார்கள். எப்படி வரும் தூக்கமும், பசியும்? சிறார், கர்ப்பிணி, மூத்தோர் என்று எந்த பேதமும் பார்க்காமல், இரக்கம் இல்லாமல் கொன்று குவித்திருக்கிறானே சிங்களவன். அடுக்குமா இந்த பாவம்? இதுவரையில் பல லட்சம் பேர் பார்த்து உருகிய இந்த சி.டி-யை தமிழகத்தின் ஒவ்வோர் வீட்டுக்கும் கொண்டு சேர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனதருமை தம்பிமார்கள். பாருங்கள்... உருகுங்கள்... உணருங்கள். கொடூரன் ராஜபக்ஷேவை சர்வதேசக் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை அயராது உழைப்போம்...'' என்று அவர் கரங்களை நீட்ட... பல நூறு கரங்கள் உயர்ந்து அதை ஆமோதிக்கின்றன.

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism