Published:Updated:

நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!

பகீர் புகாரில் காங்கேயம் எம்.எல்.ஏ.

நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!

பகீர் புகாரில் காங்கேயம் எம்.எல்.ஏ.

Published:Updated:
நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!
##~##

தவி ஏற்று ஒரு மாதம்கூட முடியவில்லை...அதற்​குள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலர் மீது பகீர் புகார்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. அந்த வரிசை யில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான நடராஜின் தலை உருள்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன விவகாரம்?

ஜாமீனில் வெளியே வந்திருக்​கும் வயக்காட்டு புதூரைச் சேர்ந்த துரைசாமி நம்மிடம் பேசினார். ''விவசாயத்தை நம்பித்தான் எங்க ஊரே இருக்குது. மழை பெய்யும் நேரத்தில் கத்தாங்கன்னி குளம் நிறைந்தால் போதும், அந்த வருஷம் முழுவதும் விவசாயம் அமோகமாக இருக்கும். 20 வருடங்களுக்கு முன்னாடி சின்னுசாமி என்பவர் இந்தக் குளத்துக்குப் பக்கத்திலேயே ஒரு சலவை ஆலையை

நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!

ஆரம்பித்தார். அந்த ஆலையின் கழிவு நீரை அப்படியே வாய்க்காலில் விட்ட காரணத்தால் விவசாயம் சுத்தமாக அழிந்து விட்டது. குடிநீரும், நிலத்தடி நீரும் கெட்டுப் போய்விட்டது. கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மையும் வந்துடுச்சு. எங்களுக்கும் ஏகப்பட்ட தோல் வியாதிகள்... எட்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்த டாக்டர் குழு, 'இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினால் புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்கள் வரும்’னு எச்சரிச்சாங்க. அதனால, கிராமத்து மக்கள் சேர்ந்து அந்த ஆலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தோம். கலெக்டருக்கும், அதிகாரி​​களுக்கும் பல முறை மனு கொடுத்தோம். உடனே கோபப்பட்ட சின்னுசாமி, 'என்னை எவனும் ஒண்ணும் பண்ண முடியாது.எம்.எல்.ஏ., நடராஜும் என் பார்ட்னர்​தான்’னு தெனாவட்டா சொன்​னார்.

திருப்பூர் உட்பட பல ஊர்களில் சாயப்பட்டறையும், சலவைப்பட்டறையும் மூடும் நேரத்தில் புதிதாக இரண்டு யூனிட் தொடங்குகிறார் சின்னுசாமி. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல எம்.எல்.ஏ. நடராஜ் வந்தார். அவரிடம் நானும், சேகர் என்பவரும் 'இந்த ஆலையால் எங்க ஊரே நாசமாப் போச்சு. அதை மூடச் சொல்லுங்க’ன்னு ஒரு மனு கொடுத்தோம். உடனே அவர், 'இந்த ஒரு ஃபேக்டரியை மூடினால் எல்லாம் சரியாயிடுமா? கெட்டது கெட்டதுதான். என் கட்சிக்காரன் மீதே புகார் சொல்லற அளவுக்கு ஆயிடுச்சா... ஃபேக்டரியை மூட முடியாது!’ன்னு மிரட்டலா சொல்லிட்டுப் போய்ட்டார்.

நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!

பிறகு ராத்திரி 2 மணிக்கு காங்கேயம் இன்ஸ்பெக்டர், லேடி சப்-இன்ஸ்பெக்​டருடன் ஐந்து போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவர்களை எங்க வீட்டுக்குக் கூட்டிவந்து, எங்களை அடையாளம் காட்டினார் சின்னுசாமி. விளக்கம் சொல்றதுக்கு முன்னாடியே போலீஸ் என்னையும் சேகரையும் விலங்கு போட்டு ஸ்டேஷனுக்கு கொண்டுட்டுப் போய்ட்டாங்க. அடுத்த நாள் எஃப்.ஐ.ஆர் போட்டு எம்.எல்.ஏ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்ததா எழுதிக் கையெழுத்து வாங்கிட்டாங்க...'' என்றார் வேதனையோடு.

நியாயம் கேட்டால் கொலை மிரட்டல் வழக்கு!

இதுகுறித்து சேகர், ''கொலைக் குற்றம் செஞ்ச மாதிரி திடீர்னு நடு ராத்திரியில் வந்து மனைவி, இரண்டு கைக்குழந்தைகளோட தூங்கிட்டு இருந்தப்ப என்னைக் கைவிலங்கு போட்டு இழுத்துட்டுப் போனாங்க. இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜன், 'ஏண்டா, ஊரே அம்மணமா திரியறப்ப, நீங்க மட்டும் கோமணம் கட்ட நினைக்கறீங்கன்னு’ சொல்லி 'எதுக்குடா எம்.எல்.ஏ-கிட்ட மனு கொடுத்தீங்க? சும்மா இருக்க முடியாதா?’ன்னு கேவலமா திட்டினார்...'' என்றார் அழுகையோடு.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.சி.துரைசாமி, ''எம்.எல்.ஏ., நடராஜ் நன்றி தெரிவிக்க வரும்போது, 'ஊர்க்காரங்க எல்லோரும் சேர்ந்து ஒரு மனு எழுதி அவர்கிட்ட கொடுக்க வேண்டும் என்றும் துரைசாமியும், சேகரும் பேசட்டும்’ என்று முடிவு பண்ணினோம். அதேபோல, எம்.எல்.ஏ வந்ததும் மனு கொடுத்துப் பேசினாங்க. அவ்வளவுதான்... தாண்டிக் குதித்த எம்.எல்.ஏ. 'உங்களை என்ன பண்ணறேன்’னு சொல்லிட்டு கோபத்தோட போ​யிட்டார். அன்னிக்கு ராத்திரியே போலீஸ் அவங்களை கைது பண்​ணிடுச்சு. எம்.எல்.ஏ., அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலீஸை​விட்டு தொகுதி மக்களை மிரட்டுவது அநாகரிகமான செயல்!'' என்றார் வெறுப்போடு.

இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜ​னிடம் விளக்கம் கேட்டோம். ''எனக்கு எதுவும் தெரியாது. எஸ்.ஐ., கூப்பிட்டதால் போனேன். எனக்கும் இந்த கேஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...'' என்றவர், சற்று நேரம் யோசித்து, ''காங்கேயம் எம்.எல்.ஏ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். அதனால் ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்தோம். நீங்கள் சொல்வதுபோல கை விலங்கு எதுவும் போடவில்லை'' என்றார், 'பொறுப்போடு’!

எம்.எல்.ஏ-வான என்.எஸ்.​என்.நடராஜிடம் கேட்டபோது, ''இது சாதாரண மேட்டர். சின்னுசாமியும் நானும் தொழில் பார்ட்னர் கிடையாது. அந்தப் பகுதியில் சலவை ஃபேக்டரியால் பிரச்னை இருக்கும் போல இருக்கு. அதை என்னிடம் சத்தம் போட்டுப் பேசினாங்க. அதனால், கூட வந்த போலீஸ்காரங்க, இன்ஸ்பெக்டரிடம் சொல்லி மிரட்டி அனுப்பினாங்க. இருவரும் ரவுடிகள். என் புகழுக்கு களங்கம் விளை​விக்க வேண்டும் என்று தி.மு.க-வினரும், காங்​கிரஸ்​காரர்களும் முயற்சி செய்​கிறார்கள்!'' என்றார்.

ஆரம்பமே மிரட்டலாக இருக்கிறதே... இன்னும் என்ன வெல்லாம் நடக்குமோ?

- வீ.கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism