Published:Updated:

அரசு நிலத்தை அபகரித்தாரா?

ஞானசேகரன் மீது கிடுகிடு புகார்

அரசு நிலத்தை அபகரித்தாரா?

ஞானசேகரன் மீது கிடுகிடு புகார்

Published:Updated:
அரசு நிலத்தை அபகரித்தாரா?
##~##

வேலூர் தொகுதியில் காங் கிரஸ் வேட்பாள ராகக் களம் இறங்கிய ஞானசேகரன் மீது, 'ஆவடியில் உள்ள சொத்துகளைக் கணக்கில் காட்டாமல் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்’ என அப்போது புகார் கிளம்பியது. அந்த விவகாரம் இப்போது கோடிக்கணக்கான மோசடி என்று, விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த செந்தில், பிரபு ஆகிய இருவரும்தான் ஞானசேகரனுக்கு எதிராகப் பிரச்னையைக் கிளப்பி இருக்கிறார்கள். அவர்களை சந்தித்தபோது, பிரபு விலா வாரியாகப் பேசினார். ''1942-ம் ஆண்டில் ஆவடி டு அம்பத்தூர் சாலையில் உள்ள 526 ஏக்கர் நிலத்தில் ஆல்

அரசு நிலத்தை அபகரித்தாரா?

இந்தியா ரேடியோ, போலீஸ் கேம்ப், மின்சார வாரியம், முருகப்பா குரூப்ஸ், இ.எஸ்.ஐ. நிலம் போன்ற இடங்களோடு வெடிமருந்து பொருட்களைப் பாதுகாக்கும் குடோன் ஐ.சி.ஐ. இந்தியா லிமிடெட் பெயரில் இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் செயல்படாமல் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 'நிலம் யாருக்கும் விற்கக் கூடாது. அடகு வைக்கக் கூடாது. யார் பெயருக்கும் அத்தாரிட்டி போடக்கூடாது’ என சட்டம் இயற்றப்பட்டது. அந்த 526 ஏக்கரும் வனப்பகுதியைச் சேர்ந்தவை. இந்த நிலையில், ஐ.சி.ஐ. நிறுவனம் அந்த இடத்தில் மேற்கொண்டு எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் இருந்தது. அதனால், 1983-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் மீது வழக்குப் போட்டு 1986-ல் அந்த நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்னையே... அதாவது, 'அந்த நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல், அப்போது பதவியில் இருந்த ஞானசேகரனுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். அரசு நிலத்தை குறைந்த விலையில் அபகரித்துக் கொண்டார் ஞானசேகரன்...'' என்றவர், தொடர்ந்தார்.

அரசு நிலத்தை அபகரித்தாரா?

''ஐ.சி.ஐ. நிறுவனம் 18 ஏக்கரை இதற்கு முன்பே ஞானசேகரனுக்கு விற்று உள்ளது. அந்த நிலத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் ஒப்பந்தம் போட்டது நிறுவனம். அதற்குப் பிறகு ஞானசேகரன் பெயரில் 20 ஏக்கரும், அவரது மனைவி மற்றும் பினாமிகள் பெயரில் 20 ஏக்கரும் அரசிடம் இருந்து மார்க்கெட்டைவிடக் குறைவான விலைக்கு கொடுக்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ. என்ற காரணத்தாலும், அன்றைய ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர் என்பதாலும் ஞானசேகரனுக்கு, அரசு நிலத்தை விற்று உள்ளனர்.

இந்த நிலையில்தான் நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த

அரசு நிலத்தை அபகரித்தாரா?

தீர்ப்பு வரவில்லை. அவர் தற்போது தன் பெயரில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை 2010 டிசம்பர் மாதம் வேறொரு நபருக்கு விற்றுவிட்டார்.

நாங்களும் ஆறு வருடங்களாக கோர்ட்டுக்கு நடையாக நடந்து நீதி கிடக்காமல் திரும்பியதுதான் மிச்சம். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'சட்டத் துக்குப் புறம்பாக வாங்கிய நிலத்தை எல்லாம் அரசு கைப்பற்றும்’ என்று கூறியுள்ளார். நாங்கள் கூறும் இந்த நிலத்தில் ஞானசேகரன் மட்டும் சம்பந்தப்படவில்லை. முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பல அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு உள்ளனர். எனவே புதிய அரசு, இந்த நிலத்தை மீட்டுப் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் ஏதேனும் சிறு தொழிற்சாலையைக் கொண்டு வரவேண்டும்.

அரசு நிலத்தை அபகரித்தாரா?

400 கோடி மதிப்பிலான நிலம் தனியாருக்குப் போகக்கூடாது!'' என்று ஆதங்கப்பட்டார்.

ஆவடி நில சர்ச்சை சம்பந்தமாக ஞானசேகரனிடம் பேசியபோது, ''முடிந்துபோன விஷயத்தை ஏன் மீண்டும் கேட்கிறீர்கள்? ஐ.சி.ஐ. இந்தியா லிமிடெட் கம்பெனி 1942-க்கு முன்னே அங்கு வெடிமருந்து களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதாக இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு பெயின்ட் கம்பெனி ஸ்பேர்ஸ் குடோன் ஆரம்பிக்க முயற்சி நடந்தது. ஆனால், அதெல்லாம் நடக்காததால், அந்த கம்பெனி நிலத்தை தமிழக அரசு வாங்கியது. ஆங்கிலேய அரசு அப்போதே, 'ஆங்கிலேயர்கள் யார் வேண்டுமானாலும் நிலத்தினை வாங்கிக் கொள்ளலாம். இந்தியர்கள் யாராவது நிலத்தை வாங்க வேண்டுமானால், அரசிடம் சட்டப்படி அனுமதி பெற்றுத்தான் வாங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. நான் உட்பட ஏழு பங்குதாரர்கள் 20 ஏக்கரை 1996-ல் வாங்கி னோம். என் மனைவி மேகலா பெயரில்கூட நிலம் இருக்கிறது. உச்ச நீதிமன்றமே 'வாங்கிய வர்களுக்கே இந்த நிலம் உரியது’ என்று தீர்ப்பு சொல்லிவிட்டது. ஏற்கெனவே சில புல்லுருவிகள் தேர்தல் வேட்பு மனு சமயத்தில், நான் சொத்துக் கணக்கை சரியாகக் காட்டவில்லை என்று இந்த நிலத்தை மேற்கோள் காட்டித் தேர்தலில் நிற்கவிடாமல் செய்யப் பார்த்தார்கள். ஆனால், நீதி என்பக்கம் இருந்தது. இப்போது தேர்தலில் தோற்றதும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி மறுபடியும் பிரச்னை கிளப்புகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றியோ அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்தோ சொத்துகளை வாங்கவில்லை. நேர்மையான முறையில்தான் வாங்கினேன்!'' என்றார் ஆவேசமாக.

நிலம் யாருக்கு சொந்தம் என்பதை அரசு மறுபரிசீலனை செய்தால் நல்லது. இல்லையென்றால், இந்தப் பிரச்னை இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியம், ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism