Published:Updated:

ஜெயலலிதாவுக்காக காத்திருக்கும் 7

ஸ்ரீரங்கம் விசிட் எதிர்பார்ப்புகள்

ஜெயலலிதாவுக்காக காத்திருக்கும் 7

ஸ்ரீரங்கம் விசிட் எதிர்பார்ப்புகள்

Published:Updated:
ஜெயலலிதாவுக்காக காத்திருக்கும் 7
##~##

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக, ஜூன் 19-ம் தேதி வருகை தர இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெய லலிதா. மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் என்பதால், ஏகப்பட்ட கோரிக்கைகளுடன் அவரை வரவேற்கக் காத்துக் கிடக்கிறார்கள் தொகுதி மக்கள்! இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக நிர்வாகத்தை, முன்னாள் எம்.எல்.ஏ-வான பரஞ்சோதி கவனித்து வருகிறார். இரண்டு கம்ப்யூட்டர்கள், நான்கு உதவியாளர்கள் என காலை 8 மணியில் இருந்து, இரவு 8 மணி வரையில் வாக்காளர்களுக்காகக் காத்திருக்கிறது இந்த அலுவலகம். மக்களிடம் இருந்து வரும் புகார்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. 'அந்த புகார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவுக்காக காத்திருக்கும் 7

எந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, அது எந்த நிலையில் இருக்கிறது?’ என்ற விவரங்கள் உடனுக்குடன் முதல்வரின் கவனத்துக்குப் போகிறது. அதன் அடிப்படையில் ஸ்ரீரங்கத்து தேவைகளை நிறைவேற்றுவது குறித்து ஜெயலலிதா அறிவிப்பும் வெளியிடுவாராம். 

புதுப்பொலிவு பெறுமா முக்கொம்பு?

திருச்சியின் முக்கியப் பொழுது போக்கு ஸ்தலமான முக்கொம்பு, இப்போதைக்கு காதலர்கள், அதுவும் கள்ளக் காதலர்களுக்கு ஏதுவான இடமாகவே விளங்குகிறது. சிறுவர் பூங்காவில் செயல்பட்ட 'காவிரி எக்ஸ்பிரஸ்’ எனும் குட்டி ரயில் மூன்று ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டு உள்ளது. இதே போல், பொதுப்பணித் துறை பயணியர் மாளிகை அருகே இருக்கும் 'மான் பூங்கா’ போர்டை நம்பிச் சென்றால், ஏமாற்றமே மிஞ்சும். அந்த இடமே சிதிலமடைந்துவிட்டது. போதிய பராமரிப்பின்றி மான்கள் இறந்த காரணத்தால் மூடப்பட்டு விட்டது. பூங்காக்களில் உள்ள சிலைகள் உடைந்தும், ஊஞ்சல்கள் செயல்படாத நிலையிலும் அறுந்து தொங்குகின்றன. முக்கொம்பு புதுப்பொலிவு பெற அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கியக் கோரிக்கை!

திருவானைக்காவுக்கு யானை வருமா?

இறைவனை யானை பூஜித்து, காவல் காத்த ஸ்தலம் என்கிறது அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் ஸ்தல புராணம். இப்படிப்பட்ட ஸ்தலத்தில் இருந்த கோயில் யானை சாந்தி, பல மாதங்கள் முன்பு இறந்துவிட்டது. இன்னும் புதிய யானை கொண்டுவரப்படாததால், சிவ பக்தர்கள் வருத்தப்படுகிறார்கள். யானையை விலை கொடுத்து வாங்குவதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். யானைகள் மீது தனிப்பிரியம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, இதைக் கண்டிப்பாகத் தீர்த்து வைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்காக காத்திருக்கும் 7

இது காவலர்கள் பிரச்னை!

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அது போல், போக்குவரத்துக் காவல் நிலையம் பிரதான சாலையில், புறம்போக்கு நிலத்தில் புறாக்கூண்டு போல் அமைந்துள்ளது. சொந்தக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டால், சுமுகமான சூழ்நிலையில் பணியாற்ற ஏதுவாக இருக்கும் என்பது காவலர்களின் எதிர்பார்ப்பு.

தீருமா அடிமனைப் பிரச்னை?

ஸ்ரீரங்கனுக்கு சேவை செய்ததற்காக மானியமாக வழங்கப்பட்ட வீடுகளும், மனைகளும் ராஜ கோபுரத்தைச் சுற்றிலும் சுமார் 200 உள்ளன. ரங்கநாதர் கோயில் கட்டுப்பாட்டில் இருந்து இந்த நிலங்கள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் பிறகு அப்பகுதி மக்கள், மாநகராட்சிக்கு அனைத்து வரிகளும் செலுத்தினர். சில ஆண்டுக்கு முன், ரங்கநாதர் கோயில் இணை கமிஷனராக கவிதா பொறுப்பேற்றார். கோயில் நிர்வாகம் சார்பில், நிலத்தை அனுபவித்துவரும் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையால், ஸ்ரீரங்கத்தில் வீடுகளை விற்கவோ, வாங்கவோ முடியாத சூழ்நிலை. தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்’ என்று ஜெயலலிதா அறிவித்ததால், அந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என காத்திருக்கின்றனர் ஸ்ரீரங்கம்வாசிகள்.

வேண்டும் பஸ் ஸ்டாண்ட்!

ஸ்ரீரங்கத்தில் தேவி தியேட்டருக்குப் பின்புறம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஆனால், 'இது நெரிசலான பகுதி. அங்கு போய் வருவது சிக்கலாக இருக்கிறது’ என்று சொல்லி, பஸ் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். இப்போது நடுரோட்டில்தான் பயணிகளை ஏற்றி இறக்குகிறார்கள். ஆகவே, பஸ் நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்கவேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

வருமா கூடுதல் ரயில்வே மேம்பாலம்?

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் திருவானைக்கா ரயில்வே மேம்பாலம் குறுகலானது. இதில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு அருகில் இன்னொரு ரயில்வே மேம்பாலம் அமைக்கத் திட்டம் தீட்டப்பட்டும், இன்னும் செயல் படுத்தப்படவில்லை. ஆகவே, இப்பிரச்னைக்கு தீர்வு வரும் என்று நம்புகின்றனர் ஸ்ரீரங்கம் மக்கள்.

காவிரியைக் காப்பாற்றுங்கள்!

திருச்சி, ஸ்ரீரங்கம் ஏரியா சாக்கடைக் கழிவுகள் மொத்தமும் காவிரியில் கலப்பதால், கூடிய விரைவில் காவிரியும் கூவமாகிவிடும் அபாயம் உள்ளது. மேலும் கம்பரசம்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக ராமநாதபுரத்துக்கு தண்ணீர் செல்கிறது. அதற்காக நீர் உறிஞ்சப்படுவதால், காவிரிக் கரை ஓரம் அமைந்திருக்கும் அந்த ஊரில் நீர்மட்டம் குறைந்துபோக... அல்லாடுகிறார்கள் மக்கள். காவிரிக் கரை ஓரங்களில் பல ஊர்களில் நிலவும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க, காவிரியில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஏரியாக்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவையும் தீர்க்கப்பட வேண்டும்.

தொகுதிவாசிகளின் கனவை நனவாக்குவாரா முதல்வர்?

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism