Published:Updated:

கப்சிப் வெங்கடாசலம்.. கைதான ராஜு!

ஜூ.வி. ரிப்போர்ட்.. ரியாக்ஷன் ஜெயலலிதாFollow - up

கப்சிப் வெங்கடாசலம்.. கைதான ராஜு!

ஜூ.வி. ரிப்போர்ட்.. ரியாக்ஷன் ஜெயலலிதாFollow - up

Published:Updated:
கப்சிப் வெங்கடாசலம்.. கைதான ராஜு!
##~##

'தி.மு.க. மீதுள்ள வெறுப்பில் மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைப் போல நீங்கள் யாரும் நடந்துகொள்ளக் கூடாது. அப்படி ஏதாவது நடப்பதாகத் தகவல் வந்தால், நடவடிக்கை கடுமையாக இருக்கும்!’ கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இப்படி பகிரங்கமாகவே எச்சரித்தார் ஜெயலலிதா. சொன்ன படியே, அவர் பேச்சை மீறி ஆட்டம் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பித்து விட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அமாவாசை கேரக்டராக மாறிவிட்டார் வெங்கடாசலம்’ என்ற தலைப்பில் கடந்த 12.6.11 ஜூ.வி. இதழில் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தைப் பற்றி எழுதி இருந்தோம். பொறுப்பேற்று ஒரு

கப்சிப் வெங்கடாசலம்.. கைதான ராஜு!

மாதம்கூட முடிவடையாத நிலையில்... எம்.எல்.ஏ-வும், அவரது ஆட்களும் வசூல் வேட்டை, கட்டப்பஞ்சாயத்து என களம் இறங்கி விட்டதைச் சுட்டிக்காட்டி இருந்தோம். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-விடம் விசாரணை.. அவரது ஆதரவாளர் கைது... என அடுத்தடுத்து அதிரடிகள் நடத்தி இருக்கிறார், முதல்வர்.

கார்டன் வட்டாரத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேலத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. பற்றி ஜூ.வி-யில் கட்டுரை வந்ததுமே, அது முதல்வருடைய பார்வைக்குப் போனது. டெல்லிக்குக் கிளம்பும் முன்பே இந்த விவகாரம் பற்றி பேசிவிட்டுத்தான் போயிருக்கிறார். டெல்லியில் இருந்து திரும்பியதுமே, சேலம் விவகாரம் பற்றி ஐ.எஸ். கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்திருக்கிறார். 'எம்.எல்.ஏ. கட்டப்பஞ்சாயத்து செய்வதும், வசூல் வேட்டையில் ஈடுபடுவதும் உண்மைதான். அவரை இயக்குவது அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர்’ என இருந்த ஐ.எஸ். ரிப்போர்ட்டைப் பார்த்ததும் ஏகத்துக்கும் டென்ஷனாகி விட்டாராம். அதனால்தான் அன்று இரவே ஏ.வி.ராஜுவை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் சொல்லிக் கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பை அம்மா வெளியிட்டார்! அப்போதும் அவர் கோபம் தணியவே இல்லை. 'ஏ.வி.ராஜு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்யுங்கள்!’ என காவல் துறைக்கு உத்தரவு பறந்ததாம். இரவோடு இரவாக ஏ.வி.ராஜுவை சேலம் போலீஸார் கைது செய்து விட்டார்கள். ஆபாச வார்த்தைகளில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தல் போன்ற பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்கிறார்கள்.

கப்சிப் வெங்கடாசலம்.. கைதான ராஜு!

யார் இந்த ஏ.வி.ராஜு?

''செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டு அ.தி.மு.க-வுக்குள்  வந்தார், ஏ.வி.ராஜு. 91-ல் சேலம் ஒன்றியச் செயலாளராக பதவி பெற்று, தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார். 2001-ம் ஆண்டு வீரபாண்டித் தொகுதி எம்.எல்.ஏ-வாக  இருந்த எஸ்.கே.செல்வம், 'ஏ.வி.ராஜ் கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை, கட்சிக்குள் கோஷ்டி சேர்ப்பது என கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்’ என அப்போதே அம்மாவுக்கு புகார் அனுப்பினார். அதனால் ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து ராஜு உடனடியாக நீக்கப்பட்டார்.

2003-ல் ஒரு தனியார் பைனான்ஸ் மேனேஜர் கொலை வழக்கில் ஏ.வி.ராஜை குற்றவாளியாக போலீஸ் சேர்க்க, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். மீண்டும் கட்சிக்குள் வந்ததும், 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சி கவுன்சிலராக நிறுத்தப்பட்டார். ஆனால், ஜெயிக்கவில்லை. சேலம் மேற்குத் தொகுதி வேட்பாளராக வெங்கடாசலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு ஆல் இன் ஆலாக செயல்பட்டது ஏ.வி.ராஜுதான்..! எம்.எல்.ஏ. பேரைச் சொல்லி திரும்பிய பக்கமெல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார். பணம் கொடுக்காதவர்களை மிரட்டவும் செய்கிறார். இவை எல்லாமே அம்மா கவனத்துக்குப் போனதும், உடனே நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காங்க...'' என்கிறார்கள் ஏ.வி.ராஜுவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

கைது செய்து கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்கு முன்பு கிடைத்த இடைவெளியில் ஏ.வி.ராஜுவுடன் பேசினோம். ''இது எல்லாமே செம்மலையின் திட்டமிட்ட சதி. கட்சியில நான் வளர்ந்துடுவேன்னு, இல்லாததையும் பொல்லாததையும் அம்மாகிட்ட சொல்லி என்னை பலிகடாவா ஆக்கிட்டாங்க. நான் கட்டப்பஞ்சாயத்து பண்ணவும் இல்லை... பணம் வாங்கவும் இல்லை. என் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதை அம்மாவிடம் நிரூபிப்பேன்!'' என்று சொன்னார்.

இதற்கிடையில் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தை கார்டனுக்கு வரவழைத்து 'அன்பு’ விசாரணை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. கார்டனில் விசாரணை முடிந்து வெளியே வந்த வெங்கடாசலத்திடம் பேசினோம்.

''ஏ.வி.ராஜுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சிக்காரர்கள் எல்லோரையும் போலத்தான் அவரையும் பார்த்தேன். அவரு இப்படியெல்லாம் தப்பு செஞ்சிருக்காருன்னு எனக்கு தெரியாது. அம்மா என்னை விசாரணைக்கு அழைச்சிருந்தாங்க. நடந்ததை அவங்ககிட்ட சொன்னேன். ' நீ மட்டும் நல்லவனா இருந்தால் போதாது. உன்னை சுத்தி இருக்கிறவுங்களும் நல்லவங்களா இருக்காங்களான்னு பார்த்துக்கணும். இதுக்கு மேல எதுவும் தப்பு நடக்காம பார்த்துக்கோங்க...’ன்னு நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. அம்மா சொன்ன அட்வைஸை என் வாழ் நாள் முழுக்க கடைப்பிடிப்பேன்!'' என்று உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார்.

சேலம் அ.தி.மு.க-வில் இன்னும் சில களையெடுப்பு களும் அடுத்தடுத்துத் தொடரப் போகிறதாம்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism