Published:Updated:

''கோட்டையைப் பார்த்தாலே நடுங்குதுங்க..''

வேலூர் திகில்

''கோட்டையைப் பார்த்தாலே நடுங்குதுங்க..''

வேலூர் திகில்

Published:Updated:
##~##
''கோட்டையைப் பார்த்தாலே நடுங்குதுங்க..''

'வேலூர் என்றாலே எல்லோருக்கும் கோட்டைதான் முதலில் கண்ணுக்குள் நிற்கும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் கோட்டையில் விபசாரமும், கஞ்சா வியாபாரமும் அமோகமாக நடக்கிறது’ - என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) ஒரு குரல் பதிவு வந்திருக்கவே, உடனடியாக விசாரணையில் இறங்கினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோட்டையின் மேல்புறத்துக்கு கோட்டை நுழைவு வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோட்டையின் மதில்மேல் சுற்றிவந்தால் சுமார் நான்கு கி.மீ. பிடிக்கும். கோட்டையின் பின்புறம் அடர்ந்த மரங்களும், பாழடைந்த கட்டடங்களும் இருக்க, அங்கே சென்று பார்த்தோம். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும், மது பாட்டில்களும் கணக்கு வழக்கு இல்லாமல் குவிந்து கிடந்தன.

கோட்டைக்குப் பக்கத்தில் கடை வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ''மாலை  6 மணிக்கு மேல இங்க எல்லாத் தொழிலும் நடக்குதுங்க. தனியாக வரும் ஆட்களை மிரட்டி திருநங்கைகள் பணம் பறிக்கிறாங்க. யாராவது காதல் ஜோடிங்க வந்தா அவங்களை மிரட்டி தனியா இழுத்துட்டுப் போயிடாறங்க, லோக்கல் ரவுடிப் பசங்க. அவங்க பெரும்பாலும் வீட்டுக்குத் தெரியாம வர்றதால, இருக்குறதையெல்லாம் கொடுத்துட்டுப் போயிடுறாங்க.

''கோட்டையைப் பார்த்தாலே நடுங்குதுங்க..''

அதைவிட இங்க சர்வ சாதாரணமா விபசாரம் நடக்குது. அதுக்குனு தினமும் ஏகப்பட்ட பொண்ணுங்க வர்றாங்க. இங்க என்ன நடந்​தாலும் யாருக்கும் தெரியாது. மரங்களும், புதர்களும் இருக்கிறது, அவங்களுக்கு வசதியா இருக்கு. கோட்டை மதில் மேல் மதுபானம் கொண்டு போகக்கூடாதுனு காவல்துறை தடை போட்டு இருக்குது. ஆனாலும், கோட்டையே இப்போ டாஸ்மாக் பார் போலத்தான் இருக்குது!'' என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

கடைக்காரர் நம்மிடம் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், ''சார் எனக்கு சொந்த ஊர் புதுவை. இங்கேதான் இன்ஜினீயரிங் படிச்சிட்டு இருக்கேன்!'' என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவர், ''போனவாரம் என் லவ்வரோட கோட்டைக்கு வந்தேன். சாயந்திரம் நாங்க கோட்டைக்குப் பின்புறம் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தபோது, நாலு பேர் எங்களைப் பிடிச்சு பணம் கேட்டு மிரட்டினாங்க. என் லவ்வர்கிட்ட தவறா நடக்கவும் முயற்சி செய்தாங்க. ஆனா நான் கெஞ்சிக் கூத்தாடி என்கிட்ட இருந்த

''கோட்டையைப் பார்த்தாலே நடுங்குதுங்க..''

500-ஐக் கொடுத்துட்டு... விட்டா போதும்னு ஓடியாந்துட்டோம். கோட்டையைப் பார்த்தாலே ஈரக்குலையெல்லாம் நடுங்குதுங்க...'' என்றார் மிரட்சியில் இருந்து மீளாதவராக.

வேலூர் டவுன் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கவனத்துக்கு ஒட்டு மொத்த விஷயங்களையும் கொண்டு போனோம். ''நீங்க சொல்ற விவகாரங்கள் பற்றி இதுவரை எங்களிடம் புகார் எதுவும் வரவே இல்லை. கோட்டையில இனி தினமும் மாலையும் இரவும் போலீசாரை ரவுண்ட்ஸ் போகச் சொல்லிடுறேன். பகல் நேரத்துலேயும் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்றேன். பொது மக்களுக்கோ.. காதலர்களுக்கோ எந்தப் பிரச்னை என்றாலும் என்னோட செல்போனைத் (9443226677) தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம்.'' என்றும் உறுதி கொடுத்தார்.

டி.எஸ்.பி-யின் நடவடிக்கை வேலூர் மக்களுக்கு நிம்மதியை தரட்டும்.

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism