Published:Updated:

மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

அதிர்ச்சியில் தஞ்சை

மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

அதிர்ச்சியில் தஞ்சை

Published:Updated:
##~##
மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

'மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்பட்டு, மணல் குவாரியை அரசே நடத்தும்’ என்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 'மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவது இருக்கட்டும். அ.தி.மு.க-வில் புதிதாக உருவாகி உள்ள மணல் கொள்ளையருக்கு முதல்வர் கடிவாளம் போடட்டும்’ என்ற அலறல் தஞ்சை பகுதியில் கேட்கத் தொடங்கி விட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் ஆற்றிலும் மணல் அள்ளுவதை எதிர்த்து, கடந்த தி.மு.க ஆட்சியின்போது மக்கள் பல போராட்டங்கள் நடத்தினர். தஞ்சையில் கலெக்டராக இருந்த சண்முகம், திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், 'திருச்சென்னம்பூண்டி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலும், பழமாநேரி பகுதியில் காவிரி ஆற்றிலும் மணல் அள்ளுவது முற்றிலும் தடுக்கப்படும். இனி மேற்படி இடங்களில் மணல் அள்ளப்பட மாட்டாது’ என உறுதி அளிக்கப்பட்டது. மீறி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார் கலெக்டர். அப்படியே நடந்தது. மணல் கொள்ளை வெகுவாகக் குறைந்துவிட்டது என்று மக்கள் சந்ஷோசப்பட்டார்கள்.

மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

இப்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மணல் கொள்ளை மீண்டும் தொடங்கிவிட்டது. அதுவும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் புதிய மணல் கொள்ளையர்களாக அவதாரம் எடுக்கவே, திருக்காட்டுப்பள்ளி மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜூன் 16-ம் தேதி மீண்டும் போராட்டத்தை நடத்தத் தொடங்கி விட்டார்கள்.

மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

போராட்டக் களத்தில் இருந்த காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தியாக.சுந்தரமூர்த்தி, 'தி.மு.க. ஆட்சியின் தொடக்கத்தில் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றிலும், பழமாநேரி காவிரி ஆற்றிலும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தினமும் மணல் அள்ளினர். இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தோம். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பல கி.மீ. தூரத்துக்கு மணல் அள்ளப்பட்டது. இதனால் விவசாயம் இப்பகுதியில் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், மணல் அள்ளும் பகுதியின் கிழக்குப் பக்கம், அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டத்தால் 85 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம், மேற்குப் பக்கம் புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடங்கப்பட்டது. மணல் கொள்ளை நடப்பதால் இந்த இரண்டு திட்டங்களும் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. அதனால் போராட்டங்கள் நடத்தினோம். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் சண்முகம், அந்தப் பகுதியில் மணல் அள்ளத் தடை விதித்தார்.

மணல் கொள்ளையில் அ.தி.மு.க. புள்ளி!

ஆட்சி மாறியவுடன், அதிகாரிகளும் மாற்றப்பட்டு விட்டனர். இதனால், திருவாரூரைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் அதிரடிப் புள்ளி  ஒருவருக்கு, தடை விதித்த பகுதியில் மணல் குவாரி நடத்த அனுமதி அளித்து உள்ளனர். இப்போது நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன், மணல் கொள்ளை ஜோராக நடக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டை திருப்பிக் கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். அப்போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை!' என்கிறார் ஆதங்கத்தோடு.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம், 'எங்களுக்கு பாதுகாப்பும், நியாயமும் கிடைக்கச் செய்யவேண்டிய மாவட்ட நிர்வாகம், எங்களைத் தட்டிக் கழிப்பதிலேயே குறியாக உள்ளது. காலையில் இருந்து மாலை வரை கலெக்டர் அலுவலகத்தில் கிடந்த மக்களை அதிகாரிகள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தையும் தூக்கிவீசி விட்டனர். ஒரு சில லாரிகளுக்கு மட்டும் கணக்கு காட்டிவிட்டு, நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளிச் செல்கின்றனர். யார் தவறு செய்தாலும், நாங்கள் தட்டிக் கேட்போம். நல்லகண்ணு, நம்மாழ்வார் ஆகியோர் தலைமையில் விரைவில் போராட்டம் நடத்துவோம்!'' என்றார் ஆவேசமாக.

திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கவிதா, ''மணல் லாரிகள் படுவேகமாகப் போனதால், 'கார்த்திகேயன்’ என்கிற சின்னப்பையன் மணல் லாரியில் அடிபட்டு செத்துப் போயிட்டான். புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே பயமா இருக்கு. குடும்பத்தோட ரோட்டுக்கு வந்து போராடித்தான் தடை வாங்கினோம். இப்ப திரும்பவும் போராட வைக்கிறாங்க. எங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டாங்களா?' என கண்ணீர் விட்டார்.

தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரனிடம் பேசினோம். 'மணல் அள்ள சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து அனுமதி வாங்கி உள்ளனர். அரசு உத்தரவுப்படிதான் இங்கு மணல் குவாரி செயல்படுகிறது!' என்று ஒதுங்கிக் கொண்டார்.

தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்பதற்காக, அந்த நல்ல காரியத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கிறதோ ஜெயலலிதா அரசு?  

- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism