##~## |

நிர்வாகிகளைப் பந்தாடுவதில், அ.தி.மு.க-வுக்கு நிகர் அ.தி.மு.க-தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த நான்கு வருடங்களாக வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகஇருந்த வாசு மீது, 'தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாகச் செயல்படுகிறார், வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதனிடம் நெருக்கம் காட்டுகிறார்...’ என சரமாரியாக புகார்கள் தலைமைக்குப் போகவே, அவரைத் தூக்கி எறிந்துவிட்டு, சிவசங்கரனை பதவியில் அமர்த்தியது கட்சித் தலைமை. இந்நிலையில் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, புகாரில் சிக்கிய சிவசங்கரன் திடீரென நீக்கப்பட்டு, முன்னாள் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் வில்வநாதன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். சும்மா இருப்பார்களா முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுவின் ஆதரவாளர்கள்? வரிந்துகட்டிக்கொண்டு வில்வநாதன் மீது புதுப்புது புகார்களைத் தட்டிவிடுகின்றனர்!
வாசுவின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''சிவசங்கரனை நியமிக்கும்போதே, 'ஏற்கெனவே அவர் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டவர், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களிடம் நெருக்கமானவர், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை’ என்று கட்சித் தலைமையிடம் சொன்னோம். இப்போது அவரை

நீக்கிவிட்டு, அதே போல் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட வில்வநாதனை எப்படி தலைமை அறிவித்தது என்று தெரியவில்லை. திருப்பத்தூர் நீதிமன்றத்தில் 2001 ஆண்டுக்கு முன்னரே, அவர் மீது சந்தன மரக் கடத்தல் வழக்கு இருந்தது. கடந்த தேர்தலில் சோளிங்கர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முனிரத்தினத்துக்கு ஆதரவாக வில்வநாதன் செயல்பட்டார். அதோடு, கட்சிக் கூட்டத்திலும் ஒழுங்காகக் கலந்துகொள்வதில்லை. ஆனால், எங்க அண்ணன் வாசு, நான்கு ஆண்டுகளாக கட்சியை மாவட்டத்தில் வளர்த்தார். தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செல்வதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. ஆனால், அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி, நீக்கிவிட்டார்கள். வேலூர் அ.தி.மு.க-வில் உள்ள சில விஷக் கிருமிகள் அம்மாவுக்குத் தவறான தகவலைத் தருகிறார்கள். கடந்த தேர்தலில் வில்வநாதனுக்கும், சிவசங்கரனுக்கும் ஸீட் கொடுக்காததற்குக் காரணம், அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அம்மாவுக்குத் தெரியும் என்பதுதான். இவர்களை கட்சியில் வைத்து இருந்தால் மாவட்டத்தில் கட்சி காணாமலே போய்விடும்!'' என உணர்ச்சி வசப்பட்டார்கள்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுவிடம் கேட்டபோது, ''எனக்கு எல்லாமே அம்மாதாங்க. அவங்கதான் என்னை பதவியில் நியமிச்சாங்க; பிறகு நீக்கிட்டாங்க. எப்போதும் நான் அடிப்படைத் தொண்டன். வில்வநாதனைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது!'' என்று மட்டும் சொன்னார்.
தற்போதைய கிழக்கு மாவட்டச் செயலாளர் வில்வநாதன் நம்மிடம், ''என் மேல் எந்த ஒரு வழக்கும் இல்லை. நான் போலீஸ் ஸ்டேஷன் படிகூட ஏறியது இல்லை. எனது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படிச் சொல்கிறார்கள். நல்ல முறையில் கட்சியை வளர்ப்பதே எங்களது நோக்கம். சோளிங்கர் வெற்றி வேட்பாளர் மனோகரிடமே கேளுங்கள், என்னைப்பற்றிச் சொல்வார்!'' என்றார்.
புகார்களுக்கு என்ன மரியாதை என்பது விரைவில் தெரிந்துவிடும்.
- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்