##~## |

'பதவி உயர்வு கொடுத்தால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார் கள். ஆனால் செக் போஸ்ட்டில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மேற்படி வருமானத்தைக் கணக்குப் போட்டு, பதவி உயர்வையே தவிர்த்து வருகிறார்கள். இவர்களால் அடுத்த நிலையில் இருக்கும் எங்களின் பதவி உயர்வு பாதிக்கிறது. மாண்பு மிகு முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற ரீதியில் ஒரு மனு முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்திருக்கிறது. மனுவை அனுப்பி இருப்பவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப் பாளர்களாக பணிபுரியும் அதிகாரிகள்!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தகவல் அறிந்து அவர்களைச் சந்தித்து விவரம் கேட்டோம். ''தமிழகம் முழுக்க மொத்தம் 20 செக் போஸ்ட் இருக்கிறது. அதில் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி, கோவையை அடுத்த கே.ஜி. சாவடி, சென்னையை அடுத்த பெத்திக்குப்பம் ஆகிய மூன்றும் ஏ கிரேடு சோதனை சாவடி கள் என தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள 20 செக் போஸ்ட்களிலும் தொழில் நுட்பமற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்ற பதவியில் 72 பேர் வேலை செய்கிறார்கள். ஓசூரிலும், கே.ஜி. சாவடியிலும் இருக்கும் இந்த ஆய்வாளர்கள், பதவி உயர்வு அல்லது பணிமாறுதல் எது வந்தாலும் ஏற்பதே கிடையாது. பல வருடங் களாக ஒரே இடத்தில் பசை தடவின மாதிரி உட்காந்துக்கிட்டு இருக்காங்க. அதுக்குக் காரணமே இங்கே கிடைக்கிற வருமானம் தான்.

ரெண்டு பகல் ரெண்டு இரவு சேர்ந்ததை நாங்க ஒரு ட்யூட்டின்னு சொல்லுவோம். இந்த ஒரு

ட்யூட்டியில மட்டும் அவங்க ஒவ்வொருத்தரும் வீட்டுக்கு எடுத்துப் போற தொகை ஒண்ணே முக்கால் முதல் ரெண்டு லட்சம் தேறும். இந்த ஒரே காரணத்துக்காக பல வருஷமா ஒரே இடத்துல உட்காந்துக்கிட்டு கொட்டம் அடிக்கிறாங்க. அரசுக்கு சேரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணம் முறை கேடாக எங்கெங்கோ போகுது.
எங்களை மாதிரி கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு பெற்றால் தொழில் நுட்பமற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்களாக ஆக முடியும். ஆனால் இந்த திமிங்கில அதிகாரிகள் நகர அடம் பிடிப்பதால் எங்க புரமோஷன் தாமதமாகிறது. அவங்களை மாதிரி தவறான நோக்கத்துக்காக நாங்க இந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலை. எங்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய பலன் உள்ளிட்ட விஷயங்களுக்காகத்தான் நாங்க இந்த பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். வருமானத்திலேயே குறியாக இருப்பவர்களுக்கு எங்க கஷ்டங்கள் கண்ணுக்கே தெரிவது இல்லை. அதனால்தான் விஷயத்தை முதல்வர் கவனத் துக்குக் கொண்டு போய் இருக்கோம்!'' என்று வேதனையோடு பேசினார்கள்.
இந்த பிரச்னை பற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டோம். ''நீங்க சொல்ற விஷயம் என் கவனத் துக்கும் வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. அனைவருக்குமே விதிப்படி பதவி உயர்வு, பணி மாறுதல் ஆணைகள் வழங்கப்படும். அதை ஏற்க விருப்பம் காட்டாத அதிகாரிகளை விருப்ப ஓய்வு வாங்கிட்டு போகும்படி சொல்லப் போகிறோம். தகுதியிருந்தும் பதவி உயர்வு பெறமுடியாமல் இருப்பவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும்!'' என்று சொன்னார்.
நல்லதே நடக்கட்டும்!
- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்:தி.விஜய், ரா.கலைச்செல்வன்