Published:Updated:

தி.மு.க. தோல்விக்கு நாங்கதான் காரணம்...

பூசாரிகளின் போர்க்குரல்

##~##
தி.மு.க. தோல்விக்கு நாங்கதான் காரணம்...

ட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது, ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், நில அபகரிப்பு, மின்வெட்டு என தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இது எதுவும் இல்லாத புதிய காரணம் சொல்லி பரபரப்பு கிளப்புகிறது, பூசாரிகள் பேரவை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை​யுடன் இணைந்த 'அருள்வாக்கு அருள்வோர் மற்றும் குறி சொல்வோர் சங்கத்தின்’ இரண்டாவது மாநில மாநாடு, சென்னை சேத்துப்பட்டு குசலாம்பாள் திருமண மண்டபத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் குவிந்து விட்டனர். விபூதி, குங்குமம், சூலாயுதம், ஜடாமுடி, காவி உடை, உடுக்கை, உருமி மேளம் என்று சிட்டியை அமர்க்களப்படுத்தினார்கள் இவர்கள்.

தி.மு.க. தோல்விக்கு நாங்கதான் காரணம்...

மண்டப வாசலில் கையில் அட்டையைத் தாங்கிப் பிடித்து இருந்த சாமிநாத சாமி, ''மனுஷனுக்கு நிம்மதி வேணும். ரேஷன் கடையில் வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்தினேன். ஆனாலும், குடும்ப வாழ்க்கையில எனக்கு நிம்மதி கிடைக்கல. எல்லாப் பொறுப்புகளையும் நீயே பாத்துக்கோன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு சைக்கிளில் காசிக்கு கிளம்பிட்டேன். ஆரம்பத்துல ஊரே என்னைப் பாத்துச் சிரித்தது. காசி, ராமேஸ்வரம், சபரிமலை, அலகாபாத்துன்னு எல்லா இடத்தையும் தனி ஆளா சுத்தி வந்தப்புறம், அதே ஊர் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறது. தினமும் ஒரு தடவை சாப்பிடுகிறேன். மழை பெய்யும்போது குளிக்கிறேன். இப்படியே இருந்தா... நிம்மதியா நூறு வயசு வரை வாழலாம்! இந்துக்கள் எல்லாரும் ஒரு முறையாவது காசி யாத்திரைக்குப் போகணும். அடுத்த மாசம் பௌர்ணமி கிரிவலம் அன்னிக்கு, மறுபடியும் காசி யாத்திரை கிளம்புறேன். நீங்களும் வர்றீங்களா?'' என்றபடியே யாத்திரை குறித்த நோட்டீஸ் ஒன்றை கையில் திணித்தார்.

தி.மு.க. தோல்விக்கு நாங்கதான் காரணம்...

தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்தெல்லாம் வந்திருந்த பூசாரிகள், குறி சொல்வோர் மேடையில் ஏறி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவ்வப்போது நையாண்டி மேளக் குழுவினரை மேடை ஏற்ற... ஆளாளுக்கு அருள் வந்து சாமியாட ஆரம்பித்தனர். அடுக்கடுக்கான ருத்ராட்சக் கொட்டைகளுடனும் ஜடாமுடியோடும் மிரட்டலாக வந்திருந்த சடையாண்டி சாமி, ''திண்டுக்கல் பக்கத்தில் பஞ்சம்பட்டி கிராமத்தில் இருந்து வர்றேன். கிறிஸ்துவ குடும்பத்துல பிறந்த நான் ஏழு வயசிலேயே குறி சொல்ல ஆரம்பிச்சுட்டேன். இப்பவும் அப்பா, அம்மா எல்லோரும் கிறிஸ்டியன்தான். என் மனைவி, குழந்தைங்க எல்லாம் இந்து. 30 வருஷத்துக்கு முன்னாடியே என் உடம்புக்குள்ளே பகவதி அம்மாவும் சடையாண்டி சாமியும் இறங்கிட்டாங்க. அவங்க கொடுத்த சக்தியாலதான், இப்பவும் நான் அருள்வாக்கு சொல்றேன். லேட்டானா சாப்பாடு தீர்ந்திடும். அதனால சாப்பிட்டுவந்து மீதியைப் பேசுறேன்...'' என்றவர் உணவு வாங்க நின்றிருந்த நீண்ட வரிசையில் ஒட்டிக் கொண்டார்.

கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலரும், அருள்வாக்கு அருள்வோர் பேரவை நிறுவனருமான வேதாந்தம், ''கிராமக் கோயில் பூசாரி சங்கம் சார்பில், கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பதற்காக கடந்த ஜனவரி 27-ம் தேதி 20,000 பூசாரிகள் பேரணி சென்றோம். அமைச்சர் அல்லது அவரது பி.ஏ. யாராவது வந்து மனுவை வாங்கிக் கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு காத்துக் கிடந்தோம். ஆனால், ஒரு போலீஸைக்கூட அனுப்பி வைக்காமல் எங்களை அவமானப்படுத்தினார் கருணாநிதி. அப்போது பூசாரிகள் விட்ட சாபம் காரணமாகத்தான், கருணாநிதி ஆட்சியைப் பறிகொடுத்து நிற்கிறார்!

குறி சொல்வது, அருள் சொல்வது எல்லாம் அவரவரது நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், சில மீடியாக்களில் 'நிஜம், புலன் விசாரணை.....’ என்ற பெயர்களில் எங்களைப் பற்றி தவறாகச் சித்தரிக்​கிறார்கள். சினிமாவிலும்கூட நகைச்​சுவை என்ற பெயரில், நடிகர் விவேக் நிறைய கேலி, கிண்டல் செய்கிறார். இனியாவது அவர் இது போன்ற கிண்டலை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இந்து மத விரோத நடவடிக்​கை​களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூசாரிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்போம். கடந்த ஆட்சியில், கோயிலுக்குச் செய்யப்பட்ட தங்க வேலைப்பாடுகளில் நிறைய ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்!'' என்று கர்ஜித்தார்.

பூசாரி சங்கத்தின் கோரிக்கைகள் ஜெயலலிதாவை தட்டி எழுப்​பட்டும்.

- த.கதிரவன்