Published:Updated:

''70 வயதிலும் பதவி ஆசை!''

கொந்தளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

##~##
''70 வயதிலும் பதவி ஆசை!''

சிதம்பரம் அண்ணாமலை பல்​கலைக்​கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களும், ஊழியர்களும்  நிர்வாகத்துக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் கடந்த ஆண்டு குதித்தனர். பல்கலைக்கழகத்தின் பதிவா​ளருக்குப் பணி நீடிப்பு கொடுக்கக் கூடாது என்பதுதான் போராட்டத்தின் முக்கிய அம்சம். இது பற்றி 'முற்றுகைப் போராட்டம்.. முழி பிதுங்கும் நிர்வாகம்’ என்ற தலைப்பில் 11.7.10-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் எழுதியிருந்தோம். ஆனாலும் பேராசிரி​யர்களின் குரலுக்கு நிர்வாகம் செவிசாய்க்காமல், பதிவாளர் ரத்தினசபாபதிக்கு ஓராண்டு பணி நீடிப்பு வழங்கியது. இந்த ஆண்டு மீண்டும் பணி நீட்டிப்பு கொடுக்கவே, பிரச்னை தீயாகப் பற்றி எரிகிறது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல்கலைக்கழகப் போராட்டக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் இளங்கோ நம்மிடம் பேசினார். ''அரசாங்க ஆணையின் படியும், பல்கலைக்கழகத்தின் சட்டப்படியும் பதிவாளர் பதவியில் 58 வயது வரைதான் இருக்கமுடியும். ஆனால், பதிவாளர் ரத்தினசபாபதிக்கு 70 வயது ஆகிவிட்டது. ஏன், இவரை

''70 வயதிலும் பதவி ஆசை!''

விட்டால் தகுதியான ஆளே இல்லையா? இவருக்குப் பணி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்றுதான் கடந்த ஆண்டு துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகை​யிட்டு, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி​னோம். எங்கள் குழுவைச் சேர்ந்த 12 பேர் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து போலீஸ் கைது செய்து, சிறையில் அடைத்தது. அதன் பிறகு பிரச்னை அரசின் கவனத்துக்குப் போனது. அப்போதைய முதல்வர் கருணாநிதி தலையிட்டு, உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி, பேச்சுவார்த்தை நடத்தினார். 'இந்த ஒரு வருடம் மட்டும் பதிவாளர் ரத்தினசபாபதி பதிவாளராக இருப்பார். அடுத்தவருடம் கண்டிப்பாக வேறு ஒருவரை நியமனம் செய்வார்கள். அதனால் நீங்கள் போராட்​​​டத்தை கைவிட வேண்டும். அப்படிக் கைவிட்டால், உங்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறச் சொல்கிறேன்!’ என பொன்​முடி உத்தரவாதம் கொடுத்தார். அதனால் போராட்டத்தை விலக்கிக் கொண்​டோம்.

''70 வயதிலும் பதவி ஆசை!''

அவர்கள் கொடுத்த ஒரு வருடம் ஜூன் 30-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. நாங்கள் இப்போது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, 'அவருக்கு மேலும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். 58 வயதில் ஆரம்பித்து, 70 வயது வரைக்கும் அவருக்கே பணி நீட்டிப்பு கொடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வயதிலும் பதவி ஆசையுடன் இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் மொத்த கன்ட்ரோலும் பதிவாளர் கையில்தான் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருப்பவரிடம் நிர்வாகம் முழுப் பொறுப்பையும் எப்படி ஒப்படைத்து உள்ளது? அவரை உடனடியாகப் பதிவாளர் பதவியில் இருந்து அனுப்பாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். அதோடு போராட்டம் நடத்துவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம். கூடிய சீக்கிரமே அறிவிப்பு வரும்!'' என்றார் கொதிப்பாக.

''70 வயதிலும் பதவி ஆசை!''

பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் சிலரோ, ''எல்லா விஷயத்துலயுமே விதி மீறல் என்பது அண்ணா​மலை பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடந்துவருகிறது. உதாரணத்துக்கு தமிழ்நாட்டைத் தவிர வெளி மாநில மாணவர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்பது பல்கலைக்கழக விதியிலேயே உள்ளது. ஆனா, இங்குள்ள சிலரோ வெளி மாநில மாணவர்கள் பலருக்கு லோக்கலில் ஏதாவது ஒரு போலியான அட்ரஸ் புரூஃப் வாங்கிக் கொடுத்து, அட்மிஷன் போட்டு விடுகிறார்கள். இப்படி ஏராளமான வெளி மாநில மாணவர்கள் இப்போது படிச்சிட்டு இருக்காங்க. பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு போஸ்டிங்குக்கும் ஒரு தொகை நிர்ணயம் பண்ணி இருக்காங்க. என்ன தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, பணத்தைக் கட்டினால் மட்டும்தான் வேலை! இப்படி பல்கலைக்கழத்துக்குள் நடக்கும் எல்லா தில்லு​முல்லுகளும் தெரிந்த ஒரே நபர் பதிவாளர்தான். அந்த இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், இதுபோன்ற முறைகேடான விஷயங்களைச் சொல்லித்தர வேண்டியிருக்கும். அதுக்கு சில வருடங்களாவது ஆகும். அதனால்தான் பல்கலைக்கழக நிர்வாகம், பதிவாளரை மாற்ற மனசே இல்லாமல் தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கிக்கொண்டே இருக்கிறது. இது நியாயம் இல்லை!'' என்று சொல்கிறார்கள்.

பதிவாளர் ரத்தினசபாபதி தரப்பில் பேசிய​போது, ''எல்லா விஷயத்திலும் அவர் கண்டிப்போடு நடந்துகொள்வார். அது இங்குள்ள சிலருக்குப் பிடிக்க​வில்லை. அதனால்தான் அவரை மாற்​றியே ஆகவேண்டும் என பிரச்னை பண்ணுகிறார்கள். பல்கலைக்கழகத்தை சிறப்பாக வழி நடத்துகிறார் என்பதால்தான், அவருக்கு நிர்வாகம் தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை!'' என்றனர் கறாராக.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமநாதனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டபோது, ''இது நிர்​வாகம் முடிவெடுக்க வேண்டிய விஷயம். இதில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை'' என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டார்.

இந்தப் பிரச்னை பெரிதாக வெடிப்பதற்குள், தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

- க.பூபாலன்

படங்கள்: ஜெ.முருகன்