Published:Updated:

தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

நீதி கேட்டு அலையும் தர்மபுரி தம்பதி

##~##
தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

'நம்பிக்கை துரோகம் செய்து திருமணம் நடத்தியதோடு, எங்கள் மகளின் கற்பை அவள் மாமனாரே சூறையாடி, தற்கொலையிலும் தள்ளிவிட்டார்! அரசாங்கத்தின் உயர் பதவியில் வலம் வரும் அவரை சட்டம் தண்டிக்க வேண்டும்!’ என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-க்கு மனு கொடுத்தனர், ஓர் ஏழைத் தம்பதி. தகவல் அறிந்து, அவர்களை சந்தித்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தர்மபுரி அருகே மாதேமங்​கலத்தைச் சேர்ந்த நடராஜ் - செல்வ​ராணி தம்பதிதான் அவர்​கள். செல்வராணியிடம் பேசியபோது, ''என் கணவருக்கு உறவுக்காரர்தான் புதுக்கோட்டை  நகராட்சி கமிஷனராகப் பணியாற்றும் பாலகிருஷ்ணன். அவருக்கு ஜீவா, கார்த்திக், ஜீவிதான்னு மூணு பிள்ளைகள். மூணு பேருமே புத்தி சுவாதீனம் இல்லாதவங்க. நாங்க பாலகிருஷ்ணனின் அண்ணன் ரங்கனுக்கு, கொத்தடிமைகள் மறுவாழ்வு திட்டத்துல அரசு கொடுத்த வீட்டுல குடி இருக்கோம். இதையே காரணமா வெச்சிக்கிட்டு, எங்க மகள் சுதாவை அவங்க மூத்த மகன் ஜீவாவுக்குக்

தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

கட்டிவைக்க வற்புறுத்தினார் பாலகிருஷ்ணன். பையன் நிலைமையைப் பார்த்துட்டு, நாங்க மறுத்தோம். உடனே, 'பெண் கொடுக்கலைன்னா எங்க அண்ணனுக்கு சொந்தமான வீட்டை காலி பண்ணுங்க’ன்னு மிரட்டினாங்க. அதோட, 'ஜீவாவுக்கு பெரிய டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்குறோம். சீக்கிரமே குணமாயிடுவான்’னு சொன்னார். நாங்க சம்மதம் சொல்லாமலே பத்திரிகை அடிச்சுக் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் பாலகிருஷ்ணன் செஞ்சுட்டார். எங்களால எதிர்க்க

தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

முடியலை. அவங்க ஊரான பென்னாகரத்துல 2009-ல் கல்யாணம் நடந்துச்சி. அப்போ, சுதா கழுத்துல தாலியையே ஜீவாவின் அம்மா சுந்தரம்மாள்தான் கட்டினாங்க. அந்த அளவுக்கு விவரமே இல்லாத பையன் ஜீவா. இருந்தும், பாலகிருஷ்ணனின் நெருக்கடிகளுக்கு பயந்துதான் கிளி மாதிரி இருந்த சுதாவை அவனுக்குக் கட்டி வெச்சோம்.

நாங்க சுதாவைப் பார்க்கப்போனப்போ எல்லாமே, மருமகன் ஜீவா தெருவில் குழந்தைகளோடு விளையாடிக்கிட்டுத்தான் இருப்பார். இப்படிப்பட்ட மருமகனால எந்த சந்தோஷமும் கிடைக்காம இருந்த சுதாவின் தலையில் விழுந்த அடுத்த இடிதான், மாமனார் பாலகிருஷ்ணனின் தொல்லை. சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சுதாவை

தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

உறவுக்கு அழைச்சிருக்கார். திகைச்சுப்போன அவ, 'நீங்க எனக்கு அப்பா ஸ்தானம். இனிமே இப்படிப் பேசாதீங்க’ன்னு எச்சரிச்சிருக்கா. உடனே தன் மனைவி சுந்தரம்மாளிடம், 'சுதா தப்பான கேரக்டர்’னு அவதூறு சொல்ல... அந்தம்மா சுதாவை தினமும் கொடுமைப்படுத்தி இருக்காங்க. தொடர்ந்து தொல்லைப்படுத்திய பாலகிருஷ்ணன் ஒரு நாள் சுதாவை சிதைச்சும் போட்டுட்டார்...'' என்றவர், பேச முடியாமல் கேவினார்.

தொடர்ந்து பேசிய அவர் கணவர் நடராஜ், ''இந்தக் கொடுமை​யால மனசும் உடம்பும் ரணமாகி, எங்க வீட்டுக்கு சுதா வந்திருச்சு. நடந்த விஷயத்தை அம்மாவைத் தவிர யார்கிட்டேயும் சொல்லலை. வெளியில் சொன்னா அவமானம்னு அவளும் மறைச்சுட்டா. இந்த நிலையில எங்க ஊரைச் சேர்ந்த சிலர், பாலகிருஷ்ணன் சார்பா வந்து, 'ஒழுங்கா புருஷன் வீட்டுக்குப் போய் வாழலைன்னா குடும்பத்தோடு கொளுத்திடுவோம்’னு மிரட்டினாங்க. 'வாழப்போனா மாமனார், மாமியார் கொடுமை... பொறந்த வீட்டுல இருந்தா மிரட்டல்’னு எங்க மக ரொம்பப் பரிதவிச்சுப் போயிட்டா. 18 வயசுப் பொண்ணால இதையெல்லாம் தாங்கமுடியாம போன வருஷம் ஆகஸ்ட் மாசம் அரளி விதையைத் தின்னுட்டுப் போய்ச் சேர்ந்துட்டாய்யா...'' என்று கலங்கியவர்,

தற்கொலைக்குத் தூண்டினாரா புதுக்கோட்டை கமிஷனர்?

''ஆனா, வயித்து வலி காரணமாத்தான் சுதா தற்கொலை பண்ணிக்கிட்டதா போலீஸ் கேஸை முடிச்சிருச்சு. எங்க மகளின் கொலைபாதகத்​துக்குக் காரணமான அவரை சட்டம் தண்டிக்கணும். அப்பதான் சுதாவின் ஆத்மா சாந்தியடையும்!'' என்றார் குமுறலாக.

பாலகிருஷ்ணன் பற்றி புதுக்கோட்டை நகராட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, ''கொஞ்ச நாள் முன்பு இவர் மீதான ரோடு புகாருக்காக, அப்போதைய நகராட்சிகளின் செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி நடவடிக்கைக்குப் பரிந்துரைச்சார். அது பெண்டிங்லதான் கிடக்குது. அது மட்டுமில்லாம, அரசியல்வாதிகளே மிரண்டு போகும் அளவுக்கு நகராட்சி திட்ட ஊழல்களில் விளையாடுகிறார். பெண்கள் விஷயத்திலும் பலே கில்லாடி... அடிக்கடி திருச்சி போய்த் தங்குவார். சமீபத்தில் பெண் சித்தா டாக்டர் ஒருத்தர் மேல் மையல் கொண்டு சேஷ்டைகள் பண்ண... அந்தம்மா அசிங்கமா திட்டி அனுப்பிடுச்சு. அதனால, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவங்களைப் பழிவாங்க அலைஞ்சுகிட்டு திரியுறார். இன்னொரு விஷயம், இப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியே தன் பாக்கெட்லன்னு சொல்லிப் பலரிடமும் வசூல் வேட்டை நடத்துகிறார்!'' என்று அடுக்கினார்கள்.

இதற்கெல்லாம் விளக்கம் கேட்டு பாலகிருஷ்ணனின் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டோம். ''அஞ்சு நிமிஷத்தில் கூப்பிடுகிறேன்...'' என்றவர், அதற்குப் பின் பலமுறை முயன்றும் போனை எடுக்கவில்லை. மறுநாள் பேசியவர், ''உங்களுக்கு என் செல்போன் நம்பரை யார் கொடுத்தாங்க? உங்ககிட்ட நானே பேசறேன்!'' என்று கூறித் தொடர்பைத் துண்டித்தவர், இதுவரை அழைக்கவே இல்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் பாலகிருஷ்ணன் பற்றிக் கேட்டபோது ஆச்சர்யமானவர், ''அப்படி யாரையுமே எனக்குத் தெரியாதே! உடனே அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறேன்...'' என்றார்.

உடனடியாக விசாரிப்பது மட்டுமல்ல, சுதாவின் சாவுக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கவும் அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராஜாசெல்லம், வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்