Published:Updated:

ஆச்சர்யம் தரும் தலச்சங்காடு!

நாகை அகழாய்வு முடிவுகள்

##~##
ஆச்சர்யம் தரும் தலச்சங்காடு!

'தனக்கு முன்பு ஆட்சி செய்தவர் கட்டிய கோட்டையா... நான் உள்ளே போக மாட்டேன்! அவர்கள் கொண்டுவந்த பாடத் திட்டமா... அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!’ என்ற தற்கால ஆட்சியாளர்களின் அதிரடி மனோபாவத்துக்கு பதிலடி கொடுப்பதுபோல் இருக்கிறது, நாகை மாவட்டம் தலச்சங்காட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள். இங்கு, 'முற்காலச் சோழர்களின் தலைநகரான பூம்புகாரின் அத்தனை கட்டுமானங்களையும் புதுப்பித்து, அவற்றைப் பாதுகாத்தவர்கள், பிற்காலச் சோழர்கள்’ என்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 பூம்புகாரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது தலச்சங்காடு. நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளி மைதானத்தை சமப்படுத்தும்போது, முற்காலச் சோழர்களின் எழுத்து வடிவில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதையடுத்து அந்த இடத்தை அகழாய்வு செய்ய அனுமதி வாங்கினார், தரங்கம்பாடி கோட்டையின் காப்பாட்சியர் கோ.முத்துசாமி. தஞ்சை மண்டல உதவி இயக்குநர் அர்ஜுனன் தலைமையில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த தொல்பொருள் துறையின் அகழாய்வு, தற்போது இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.

ஆச்சர்யம் தரும் தலச்சங்காடு!

''இந்த அகழாய்வு மூலமாக, நமது முன்னோர்களது கட்டடக் கலை, ஆபரணங்கள், சிற்ப வேலைகளை நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அங்குள்ள முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ஒன்றின் மூலமாக, பிற்காலச் சோழர்கள் முற்காலச் சோழர்களின் நகரங்களை, பண்பாட்டை எப்படி மதித்தார்கள் என்பதும் தெரிய வருகிறது.

ஆச்சர்யம் தரும் தலச்சங்காடு!

முற்காலச் சோழர்கள் பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அவர்களின்ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பகுதிதான் தலச்சங்காடு. இந்த பகுதியில் எங்கு

ஆச்சர்யம் தரும் தலச்சங்காடு!

தோண்டினாலும் முற்காலச் சோழர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கிடைக்கின்றன. அவற்றை பூம்புகாரிலும் தரங்கம்பாடி கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்திலும் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால், தற்போது கிடைத்திருப்பது முற்காலச் சோழர்களுக்கு பல நூற்றாண்டு​களுக்குப் பின்வந்த பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளும் கலைப்​பொருட்களும். அவற்றைப் பார்க்கும்போது தங்கள் முன்​னோர்களின் நினைவுகளை, அவர்களின் எச்சங்களை, பிற்காலச் சோழர்கள் எப்படி போற்றிப் பாதுகாத்து வந்தார்கள் என்பது தெரிய வருகிறது!'' என்றார், தரங்கம்பாடி கோட்டையின் காப்பாட்சியர் முத்துசாமி.

மேலும் பேசிய அவர், ''இங்கு கிடைத்தகல்வெட்டில், 'கி.பி 907-954-ல் தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆண்ட பிற்காலச் சோழனான முதலாம் பராந்தக சோழன், தங்கள் நாட்டில் உள்ள தலச்சங்காடு கிராமத்தில் முற்காலச் சோழர்கள் கட்டி வைத்த கோயில் இடிந்து பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு, அதே இடத்தில் புதிய கோயிலை நிர்மாணித்தான்’ என்ற செய்தி காணப்படுகிறது. அதோடு, அந்தக் கோயிலில் வைக்கப்பட்டு இருந்த சுடுமண் சிற்பத்தின் சிதைவுகளும், கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யாளிவரி எனப்படும் கருங்கல் வேலைப்பாடும் முழுதாகக் கிடைத்துள்ளன. கோயிலின் தரைத்தளம் 10 அடி அளவுக்கு அப்படியே முழுதாகக் கிடைத்து இருக்கிறது. தற்போதுள்ள மட்டத்தில் இரண்டு அடி ஆழத்தில் பிற்காலச் சோழர்களின் தரைப்பகுதி இருக்கிறது. அதற்கு கீழே இரண்டு மீட்டர் ஆழத்தில் முற்காலச் சோழர்கள் கட்டிய தரைப்பகுதி இருக்கிறது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை சங்க காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் கரிகாலன், கிள்ளிவளவன் போன்றவர்கள் வாழ்ந்தார்கள். பூம்புகார், பெருந்​தோட்டம், தலச்சங்காடு போன்ற இடங்களில் நடந்திருக்கும் அகழாய்வு மூலம், தற்​போதுள்ள நிலையிலிருந்து தரைத்தளம் கிட்டத்தட்ட 2.5 மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளது என்பது தெரிகிறது. கடல்கோள், பெருவெள்ளம், காற்று ஆகியவற்றால் அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்​சமாக நிலத்தில் தரை மட்டம் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்கிறது...'' என்று சொன்னார்.

சங்ககாலத்தைச் சேர்ந்த வெள்ளை, பச்சை, நீல பாசிமணிகள், கல் மணிகள், இரும்பு ஆணிகள், உறை கிணறுகள், முதுமக்கள் தாழிகள், வளையல்களுக்காக அறுக்கப்பட்ட சங்குகளின் மீதப்பகுதிகள், சுடு செங்கற்கள், கருங்கற்கள், கறுப்பு-சிவப்பு வண்ணத்துடன் கூடிய பானை மற்றும் பானை ஓடுகள் என்று அரிய பல பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. தற்போது நாம் வீட்டின் மேற்பகுதியில் பதிக்கும் ஆடம்பர ஓடுகளை அப்போதே நம் முன்னோர் பயன்படுத்தி இருக்கின்றனர். அவையும் இங்கு நிறையவே கிடைத்து இருக்கின்றன.

அதே போல அவர்கள் நீர் எடுக்கப் பயன்படுத்திய உறை கிணறு அமைக்கப்பட்டு இருக்கும் முறையும் ஆச்சர்யத்துக்கு உரியது. தற்போது நாம் பயன்படுத்தும் செங்கற்கள் போன்று மட்டுமின்றி முக்கோண வடிவத்திலும் செங்கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முக்கோண வடிவ செங்கற்களை இணைத்துக்கொண்டே வந்தால், அது அழகான வட்டமாக மாறும். அப்படி இணைத்துதான் வட்டமான உறைகிணறுகளை அமைத்து உள்ளனர்.

மொத்தத்தில், தலச்சங்காடு அகழாய்வு, 'நாம் புதிதாக எதுவும் கண்டுபிடிக்காவிட்டாலும், பழைய காலத்தில் இருந்ததைக்  கற்றுத் தெளிந்தாலே போதும்’ என்ற செய்தியைச் சொல்கிறது.

- கரு.முத்து