Published:Updated:

`குடும்பப் பிரசாரம்; கணவரின் செயல்பாடு!' -82 வயதில் ஊராட்சித் தலைவரான முன்னாள் அமைச்சரின் மனைவி

3 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒருமுறை அமைச்சராகவும் இருந்தவரின் மனைவி வெற்றி பெற்றிருக்கிறார்.

விசாலாட்சி
விசாலாட்சி

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் விசாலாட்சி (82) என்பவரும் தி.மு.க சார்பில் சாந்தி (49) என்பவரும் போட்டியிட்டனர். இருவருமே வேட்புமனுத் தாக்கலின்போது கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருந்தனர். இவர்களில் விசாலாட்சி என்பவர், மூன்று முறை வெள்ளக்கோயில் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், ஒருமுறை ஊரகத் தொழிற்துறை அமைச்சராகவும் இருந்த துரை.ராமசாமியின் மனைவி ஆவார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் இருவருமே களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரசாரம் செய்தனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ஊராட்சியில் கடந்த 27-ம் தேதி நடந்த தேர்தலில் மொத்தம் 6,141 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது 351 வாக்குகள் செல்லாமல் போய்விட்டது. மீதமிருந்த 5,790 வாக்குகளில் 82 வயதான விசாலாட்சி 3,069 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சாந்தி 2,721 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

விசாலாட்சியிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் இது. 2001-2006 காலகட்டத்தில் இதே ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறேன். தற்போதைய தேர்தலில் குடும்பத்தாருடன் சேர்ந்து மக்களிடம் பிரசாரம் செய்தோம். எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்த என் கணவருடைய செயல்பாடுகள், மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றிருந்தது. மக்களும் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

சாந்தி
சாந்தி

வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சாந்தியிடம் பேசினோம். ``என்னை எதிர்த்து நின்னவங்க அரசியலை கரைச்சிக் குடிச்ச குடும்பம். அவங்களோட செல்வாக்கும், பவரும் வேற. அப்படியிருக்க, அவங்களோட ஒரு சாமானிய மனுஷியா நின்னு அவங்களுக்கு நிகராக வாக்குகளைப் பெற்றது மகிழ்ச்சி. மக்களோட சப்போர்ட் இருக்கும்னு நினைச்சேன். என்னுடைய சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மக்கள் தவறவிட்டுவிட்டார்கள். இருந்தாலும், என்னை நம்பி 2,728 பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது” என்றார்.