Published:Updated:

தி.மு.க. மாவட்டத்தின் ராஜினாமா ஆவேசம்

ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்தவருக்கும் ஸீட்.. பல கட்சி மாறி வந்தவருக்கும் ஸீட்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தி.மு.க. மாவட்டத்தின் ராஜினாமா ஆவேசம்

தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் பறிக்கப்பட இருப்பதாக எழுந்த சர்ச்சை அடங்காத நிலையில்... வட சென்னை மாவட்டச் செயலாள​ரான வி.எஸ்.பாபு உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்து உள்​ளார்கள். 

சென்னையின் உடன்பிறப்புகளிடம் நடந்ததை விசாரித்தோம். ''முக்கியக் காரணம், சேகர்பாபுவின் வரவுதான். பொதுவாக மாவட்டச் செயலாளரை கேட்டுவிட்டுத்தான் தொகுதிக்குள் கட்சியின் ஆட்களை கூட்டத்தில் பேச அனுமதிப்பார்கள். ஆனால், பாபுவுக்கு தகவல் சொல்லாமலே கொளத்தூர் தொகுதி பொதுக் கூட்டங்களில் சேகர்பாபு பேச அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு முறை கருணாநிதி திடீரென பிரசாரத்துக்கு

தி.மு.க. மாவட்டத்தின் ராஜினாமா ஆவேசம்

வந்தார். குறைந்தகால அவகாசமே இருந்ததால் பாபுவால் கூட்டத்தைச் சேர்க்க முடியவில்லை. அதனால், கருணாநிதியே பாபுவை கடிந்து கொண்டார். அதேபோல் துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோர் பிரசாரத்துக்கு வந்தபோதும் பாபு தரப்பில் இருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. இதற்கும் தலைமையில் இருந்து பாபுவுக்கு குட்டு. இதை எல்லாம்விட ஓட்டுப்பதிவு நாள் அன்று நடந்த சம்பவம்தான் பாபுவை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது.

கொளத்தூர் தொகுதியில் மதியம் 3 மணிக்கு மேல் பதிவு ஆகாத ஆப்சென்ட் ஓட்டுகளை கணக்கு எடுத்து அவற்றைத் தங்களுக்கான ஓட்டுகளாக மாற்ற ஆளும் தரப்பு ரகசிய திட்டம் தீட்டியது. அந்த நேரம் பார்த்து பாபுவின் தம்பியான கொளத்தூர் பகுதி செயலாளர் வி.எஸ்.ரவி சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் தொகுதிக்குள் வந்து அலம்பல் செய்தார். இதில் எதிர் வேட்பாளர் சைதை துரைசாமி சுதாரிக்கவே, ரகசியத் திட்டம் அம்பேல். கடுப்பான ஸ்டாலின் அன்று இரவு ரவியை அடித்து விட்டார் என்றே சிலர்  கூறுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும்விட, தொகுதிக்குள்  சம்பந்தப்​

தி.மு.க. மாவட்டத்தின் ராஜினாமா ஆவேசம்

பட்டவர்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை என்றும் குற்றச்சாட்டு. ஓட்டுப் பதிவுக்குப் பின்பு கட்சியின் அதிமுக்கிய நபர் ஒருவர், பாபுவின் வீட்டுக்குச் சென்று சுமார்

தி.மு.க. மாவட்டத்தின் ராஜினாமா ஆவேசம்

5.25 கோடியை கைப்பற்றினாராம். பாபு அண்ட் கோ-வினர், 'இது எங்களது வட்டித் தொழிலில் புழங்கும் பணம்’ என்று எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் சமாதானம் அடையவில்லையாம். இதைத் தொடர்ந்து கட்சியே அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரான நிலையில் பாபு கௌரவமாக ராஜினாமா செய்துவிட்டார்...'' என்கிறார்கள்.

பாபுவின் ராஜினாமாவைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதி செயலாளரான ஆர்.டி.சேகரை வட சென்னை மாவட்டச் செயலாளராக கட்சி நியமித்துள்ளது. இது குறித்து வி.எஸ்.பாபுவிடம் பேசினோம். ''பிடிக்கலை... விலகிட்டேன். வேற என்ன செய்ய... எங்க குடும்பமே 30 வருஷமா கட்சிக்காக உழைச்சது. 22 வயசுல சிட்டிபாபு நினைவு மன்றச் செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக மாவட்டச் செயலாளர் வரைக்கும் பொறுப்புக்கு வந்தேன். ஸீட் கேட்டேன், கொடுக்கலை. கொளத்தூர்ல தளபதி நிக்கப் போறதா சொன்னாங்க. சரி, பக்கத்துல எங்காச்சும் கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். அதுவும் தரலை. அ.தி.மு.க-வுல இருந்து ஓடிவந்து ஒரே மாசம்தான் ஆன சேகர்பாபுவுக்கு ஸீட் தந்தாங்க. பல கட்சி மாறி வந்த ரங்கநாதனுக்கும் ஸீட் கொடுத்தாங்க.

இப்ப தொகுதியில 'கட்சிக்காக இத்தனை வருஷம் உழைச்சதுக்கு இவருக்கு என்னமா கிடைச்சது பாரு மரியாதை...’ன்னு என் காதுபடவே இளக்காரமா பேசுறாங்க. அதைக் கேட்டுத் தாங்குற சக்தி எனக்கு இல்லை. எனக்கு தி.மு.க. தவிர எந்தக் கட்சியையும் தெரியாது; தலைவரையும் தளபதியையும் தவிர யாரையும் தெரியாது. அவங்கதான் என் உலகமா இருந்தேன். ஆனா, இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது.

அதனாலதான் தளபதிகிட்ட ராஜினாமா கடிதத்தை கொடுத்துட்டேன். இதைக் கேள்விப்பட்ட என் தம்பி ரவியும் புரசை பகுதி இளைஞர் அணி அமைப்பாளரான என் அண்ணன் மகன் சீனிவாசனும் 'நீங்களே விலகுனதுக்கு அப்புறம் நாங்க மட்டும் அங்க இருந்து என்ன செய்யப் போறோம்’னு ராஜினாமா பண்ணிட்டாங்க.

மத்தபடி நான் வேலை பார்க்கவில்லை; என் தம்பியை ஸ்டாலின் அடிச்சிட்டார் என்பது எல்லாம் வதந்தி. பணப் பட்டுவாடாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்கிட்ட இருந்து பணத்தை பறிமுதல் செஞ்சாங்க என்பதும் நம்பும்படியாக இல்லை. ஆனா ஒண்ணு... கடைசி வரைக்கும் தலைவனுக்குத் தொண்டனாகவும் தளபதிக்கு விசுவாசியாகவும் இருப்பேன்...'' என்று சொன்னார்.

வி.எஸ்.பாபுவைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த சிவாஜியும் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். இது குறித்துப் பேசும் கட்சி நிர்வாகிகள், ''ஸ்டாலினின் மனைவியும் சிவாஜியின் மனைவியும் நெருங்கிய தோழிகள். அந்த செல்வாக்கில் இவர் பதவிக்கு வந்தார். பதவியில் இருந்தபோது கட்சியினரை அரவணைத்துச் செல்லவில்லை, அமைச்சர் கே.பி.பி.சாமியையும் மதிக்கவில்லை. சிவாஜியின் உதவி​யாளர்கள் ஆடிய ஆட்டமும் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அதனால்  கட்சிதான் அவரை ராஜினாமா செய்ய வைத்தது...'' என்கிறார்கள்.

தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமோ?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு