Published:Updated:

''தவம் இருந்து பொறந்த குழந்தை நிலைக்கலையே சாமீ..!''

கல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''தவம் இருந்து பொறந்த குழந்தை நிலைக்கலையே சாமீ..!''

ரசு மருத்துவமனைகளில் எத்தனை​யோ விதமான முறை​கேடுகள் நடந்து வருவதை வரலாறு சொல்லும். ஆனால், பிறந்த பிறகு முறையான கவனிப்பு இல்லாமல் இறந்த ஒரு குழந்தையை, தங்களது கவனக்குறைவு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, 'இறந்தேதான் குழந்தை பிறந்தது’ என்று தவறான சான்றிதழ் கொடுத்த கொடுமை இப்போது நடந்து இருக்கிறது! 

கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

கதறிக் கதறி அழுகிறார் அந்தத் தாய். ''என் பேர் ஸ்டெல்லா... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு இடுப்பு வலி வர... ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, நர்ஸம்மா படுக்கையில் படுக்கச் சொல்லுச்சு. அந்த நேரத்தில் நர்ஸம்மாவுக்கு போன் வரவே, பேசப் போயிடுச்சு. கொஞ்ச நேரத்திலேயே எனக்கு பிரசவம் ஆயிடுச்சு.

''தவம் இருந்து பொறந்த குழந்தை நிலைக்கலையே சாமீ..!''

ஆயாவும் எங்கேயோ போயிடுச்சு. பக்கத்திலே டாக்டர் யாரும் வரலை. திடீர்னு எனக்குப் பிரசவமானதும், யாராவது வாங்கன்னு சத்தமாக் கத்தினேன். ஆனா, நர்ஸம்மா ஏ.சி. ரூமுக்குள் இருந்ததால, அவங்களுக்குக் காது கேட்கலை. என் அடிவயித்துல இருந்து புள்ள பொறந்து, அழுதுச்சு. அப்பிடியே தொப்புள் கொடியோட படுக்கைக்குக் கீழே விழுந்திடுச்சு. அப்போ, கட்டில் கம்பியில குழந்தையோட தலை மோதிடுச்சு. நான் அலறினேன். அப்பவும் யாருமே வரலை.

கொஞ்ச நேரம் கழிச்சு நர்ஸம்மா வந்துச்சு. கையில் கிளவுஸ் போடாமத்தான் வந்தாங்க. அவங்க என் பக்கத்தில் வந்ததும் நான் மயங்கிட்டேன்.

அடுத்த நாள், 'உன் குழந்தை செத்துத்தான் பொறந்துச்சும்மா!’னு

''தவம் இருந்து பொறந்த குழந்தை நிலைக்கலையே சாமீ..!''

சொன்னாங்க. நான் கலங்கிட்​டேன். என் குழந்தை பொறந்து அழுததை நான் என் காதால் கேட்டேன். குழந்தை உயிரோடதான் பொறந்தது. ஆனா, 'வயித்துக்குள் அழுக்குத் தண்ணி குடிச்சதால், செத்துப்போச்சு’ன்னு ரிப்​போர்ட் எழுதி இருக்காங்களாம். அதனால், அவங்க குழந்தையை போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்க்கலாம்னு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போனாங்க. அங்கே எங்க சந்தேகம் வெளங்கிடுச்சு. தப்பா ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து இருக்காங்கன்னு சொல்லி, சதுரங்கப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைய்ன்ட் கொடுத்தோம். ஆனா, இன்னிக்கு வரைக்கும் அவங்க எதுவும் செய்யலை. தவமா தவம் இருந்து எனக்கு ஆண் குழந்தை பொறந்தும் நிலைக்கலையே சாமீ!'' என கதறினார் ஸ்டெல்லா.

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜசேகரன் எழுதிக் கொடுத்த அறிக்கை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொடுத்த பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் நகல்கள் நம்மிடம் கிடைத்தன. தன்னுடைய அறிக்கையில், 'வயிற் றுக்குள் அழுக்குத் தண்ணீரைக் குடித்ததால் குழந்தை இறந்தே பிறந்தது’ என்று எழுதி இருக்கிறார் டாக்டர் ராஜசேகரன். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையிலோ, 'குழந்தையின் தலையில் அடிபட்டதால்தான் இறந்திருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் டாக்டர் புகழேந்தி, ''இந்த மருத்துவமனையில் ஸ்டெல்லாவுக்குப் பிரசவம் பார்த்த நர்ஸ் அமலா காலை 6.05 மணிக்கு டாக்டர் ராஜசேகரனுக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். டாக்டர் உடனே வந்து இருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. இது முதல் தவறு. 'நான் அப்போது வெளியூரில் இருந்தேன்’ என்று சொல்லி இருக்கிறார் ராஜசேகரன். அப்படி அவர் வெளியூர் சென்று இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்டெல்லாவை கூட்டிச் செல் லுங்கள் என்று பரிந்துரைத்து இருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. இது இரண்டாவது தவறு. அடுத்து, ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கும்போது, அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாராவது பிரசவ அறையில் இருக்கலாம் என்று சட்டம் சொல் கிறது. ஆனால், நர்ஸ் அப்படி யாரையும் உள்ளே விடவில்லை. இது மூன்றாவது தவறு. பிரசவம் பார்ப்பதைவிட்டு, போனில் பேசச் சென்றது நான்காவது தவறு. அப்படியே குழந்தை இறந்து பிறந்தாலும், அந்த இறப்பை சட்டபூர்வமாக உறுதி செய்வது யார், நர்ஸா அல்லது டாக்டரா? இந்தப் பிரச்னையில் நர்ஸே முடிவு செய்து இருக்கிறார். இது ஐந்தாவது தவறு. இது குறித்து காவல் துறையில் புகார் செய்த பின்பும், குறைந்தபட்சம் சார்ஜ்ஷீட்டில்கூட டாக்டர் ராஜசேகரின் பெயரை போலீஸ் குறிப்பிடாதது ஏன்? இது இருப்பதிலேயே பெரிய ஆறாவது தவறு!'' என்றார்.

இது பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது ''டாக்டர் வருவதற்கு முன்னரே பிரசவம் நடந்து குழந்தை இறந்துவிட்டது. 9 மணிக்கு வந்த டாக்டர் நர்ஸ் சொன்னதைக் கேட்டு அறிக்கை கொடுத்து விட்டார். இப்போது அந்த நர்ஸ் இடமாற்றம் செய்யப் பட்டு இருக்கிறார். மேலும் விசாரணை நடந்து வருகிறது'' என்றார்கள்.

திருக்கழுக்குன்றம் காவல் நிலைய இன்ஸ் பெக்டர் ராஜேஷிடம் கேட்டதற்கு, ''தேவை​யான நடவடிக்கை உடனே எடுக்கப்படும்!'' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

இன்னும் எத்தனை காலம்தான் அரசு மருத்து​வமனைகள் அலட்சிய மருத்துவமனைகளாகவே இருக்கப்போகின்றனவோ?

- ந.வினோத்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு