Published:Updated:

''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு!

பிரீமியம் ஸ்டோரி
##~##
''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் மணல் குவாரி நடத்திக்கொண்டு இருந்த ஆறுமுகச்சாமிதான், இப்போதும் மணல் ராஜா! அவரிடம் இருந்து பலர், சப்-கான்ட்ராக்ட் எடுத்து மணல் அள்ளுகிறார்கள். அதன்படியே, கடலூர் மாவட்டம் பண்​ருட்டிக்கு அருகே தென்பெண்ணை ஆற்றில் உள்ள பெரிய கள்ளிப்பட்டுக் குவாரியை, குணசேகரன் என்பவர் சப்-கான்ட்ராக்ட் எடுத்து இருக்கிறார். அவர் மணல் விற்பனையில் பல விதமான முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்பதுதான் புகார். 

குணசேகரனின் குவாரியில் சட்ட விரோதமாக நடைபெறும் செயல்களுக்கு எதிராக, பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் அசோக் என்பவர், உயர் நீதிமன்​றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவரை சந்தித்தோம்.

''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

''நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு டி.டி. எடுத்துச் செல்லும் யார் வேண்டுமாலும், அரசு குவாரியில் மணல் அள்ளி வரலாம். ஆனால், இந்த குவாரியில் குணசேகரனின் லாரிகளைத் தவிர, மற்ற லாரிகளை அனுமதிப்பதே இல்லை. குணசேகரனின் மணல் கிடங்கில் இருந்துதான் மணல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். கிடங்கில் அநியாய விலைக்கு மணல் விற்பனை செய்கின்றனர். அரசு குவாரியில் இரண்டு யூனிட் மணல்

''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

624-க்கு விற்கப்படுகிறது. ஆனால், இவரது கிடங்கில்

''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

இரண்டு யூனிட் மணல்

''கள்ளிப்பட்டு குவாரியில் முறைகேடு நடக்கிறது''

3,000-க்கும் மேல் விற்கப்படுகிறது. ஆற்றில் இருந்து மணல் அள்ளச் செல்லும்போது, இரண்டு யூனிட் என்று ட்ரிப் ஷீட் போட்டுக்கொண்டு, நான்கு யூனிட்களுக்கு மேல் ஏற்றி வந்து, கிடங்கில் குவித்துவைத்துள்ளனர். இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, அதிகாரிகளை மாதம் தவறாமல் 'கவனித்து’விடுகின்றனர். மேலும், ஒரு மீட்டர் ஆழம், ஒரு கி.மீ. நீளத்துக்குத்தான் மணல் அள்ள வேண்டும். ஆனால், இந்த குவாரியில், விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, 15 அடி ஆழத்துக்கு செம்பாறை தெரியும் அளவுக்கு தோண்டி உள்ளார்கள். இந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகள்கூட கேள்வி கேட்க முடியாது. அப்படி யாராவது கேட்டால், அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். அப்படியும் அடங்காதவர்கள் மீது பலத்த தாக்குதலும் நடத்தி உள்ளனர். இந்தப் பகுதியில் 40 அடியில் நீர் மட்டம் உள்ளது. அதை உறுதிப்படுத்தும் அளவில் அரசின் நீர் வளத் துறையும் சான்றிதழ் கொடுத்து உள்ளது. இப்போது கொள்ளை அடிக்கப்படும் அளவுக்குத் தொடர்ந்து மணல் எடுத்துவந்தால், நீர்வளம் குறைந்துவிடும்.

அதனால்தான், இவரது குவாரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தாசில்தாருக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதால், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.  அரசு இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், கிராம மக்கள் ஒன்று திரண்டு பட்டினிப் போராட்டம் நடத்தவும் திட்டம் வைத்து இருக்கிறோம்.

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள்தான் என்று அரசுகள் பெருமையுடன் சொல்கின்றன. ஆனால், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு தென் பெண்ணை ஆற்றை இந்த அரசு தாரை வார்த்துவிட்டதே என்பதுதான் எங்கள் கவலை. இனியாவது நல்லது நடக்க வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டார்.

குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக, குவாரி கான்ட்ராக்டர் குணசேகரனுக்கு போன் செய்தோம். அவருடைய உதவியாளர் ஸ்ரீதர் பேசினார். ''குவாரிக்குச் செல்ல பொது வழி கிடையாது. நாங்களே பணம் செலுத்தி, தனியார் நிலம் வழியாகத்தான் எங்கள் லாரிகளை ஓட்டி வருகிறோம். மற்ற லாரிகளை நாங்கள் தடுக்கவில்லை. கிடங்கில்தான் மணல் வாங்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவும் இல்லை. அரசு விதிமுறைக்கு உட்பட்டு மூன்று யூனிட்கள் மணல் மட்டுமே ஏற்றுகிறோம்...'' என்று சொன்னார்.

பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் குமாரிடம் விசாரித்தோம். ''குவாரிக்குச் செல்ல பொது வழி இருக்கிறது. ஆனால், அது குறுகலானது என்பதால் லாரிகள் உள்ளே சென்று திரும்ப முடியாது. எனவே, கான்ட்ராக்ட் எடுத்து இருப்ப​வரின் லாரிகள், தனியார் நிலம் வழியாகச் சென்று வருகின்றன. மற்ற லாரிகளும் குவாரிக்குச் செல்வதற்கு வசதியாக, அந்த வழியை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகிறோம்...'' என்றவர், மற்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவில்லை.

கலெக்டர் அமுதவல்லியிடம் குவாரி குறித்துப் பேசினோம். ''அந்த குவாரியில் உடனே சோதனை நடத்த உத்தரவிடுகிறேன்...'' என்றவர், உடனே ஆட்களை அனுப்பவும் செய்தார்.

நிலைமை சீரடைந்துவிடும் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை. இப்போதும் குணசேகரன் நிறுவன லாரிகள் மட்டுமே குவாரிக்குள் சென்று வருகின்றன. மணல் கொள்ளைக்கு விரைவில் முடிவு வரட்டும்!

- க.பூபாலன்

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு