Published:Updated:

டெல்டாவில் தொடரும் கொலைகள்!

அலறும் மக்கள்.. அலட்சிய காவல்துறை!

பிரீமியம் ஸ்டோரி
##~##
டெல்டாவில் தொடரும் கொலைகள்!

'தமிழகத்தில் எந்தவித தயவுதாட்​சண்யமும் இல்லாமல் கண்டிப்பாக சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்!’- இது அ.தி.மு-கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய வாக்குறுதி! ஆனால், ''அ.தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு டெல்டா மாவட்டங்களில்  கொலைகளும், கொள்ளை சம்பவங்களும் முன்பைவிட அதிகரித்துள்ளன...'' என்ற பகீர் குற்றச்சாட்டைக் கிளப்புகின்றனர், டெல்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்!

 ''தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் லலிதா என்கிற பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, பல லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றனர். நாடியம்மன் கோயில் அருகே ஓர் இளம் பெண்ணைக் கொன்று அரைகுறையாகப் புதைத்து விட்டார்கள். பேராவூரணி பகுதியில் பொன்னுச்சாமி என்கிற தேங்காய் வியாபாரி கொலையானார். காரங்குடா என்ற ஊரில் இரட்டைக் கொலைகள். தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டார். திருவையாறு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெங்கடேசன் என்பவர் தூக்கில் தொங்கவிடப்பட்டார். மன்னார்குடியில் லெனின், எட கீழையூரில் சரண்யா, முத்துப்பேட்டையில் சிவசுப்பிரமணியன் என்று இந்த இரண்டு மாதத்தில் ஏராளமான கொலைகள். தமிழகத்தை உலுக்கிய பேரளம் நாவலன் படுகொலையைத் தொடர்ந்து சுவாமிநாதன் என்பவரையும் தற்போது கொலை செய்து விட்டார்கள்.

டெல்டாவில் தொடரும் கொலைகள்!

பட்டுக்கோட்டை நிதி நிறுவன உரிமையாளர் கண்ணன் என்பவர் வீட்டில் 132 பவுன் தங்க நகைகளும், மன்னார்குடி டாக்டர் விஜயக்குமார் வீட்டில் 220 பவுன் தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. தஞ்சாவூரில் கல்லூரி மாணவி, போலீஸ்காரர் வீட்டில், கும்பகோணத்தில் பிரபல கடையில், திருவாரூரில் பல்வேறு இடங்களில் என கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பது எங்களுக்கு அதிர்ச்​சியாக இருக்கிறது...'' என பட்டியல் போட்டு வரிசைப் படுத்தினர், டெல்டாவாசிகள்.

ஏரியா அ.தி.மு.க. பிரமுகர்களிடம் பேசினோம். ''ரியல் எஸ்டேட், சொத்துப் பிரச்னை தொடர்பான

டெல்டாவில் தொடரும் கொலைகள்!

கட்டப்பஞ்சாயத்துகள் காவல் துறையினரின் ஒத்துழைப்போடுதான் நடக்கின்றன. பட்டுக்கோட்டை பகுதிகளில் தினமும் கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. டெல்டாவில் அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் நகரம் பட்டுக்கோட்டை. அதேபோல வெளிநாட்டுப் பணமும் அதிக அளவில் புழக்கம் உள்ளதால், இந்தப் பகுதிகளையே கொள்ளையர்கள் குறி வைக்கின்றனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். காரணம், பெரும்பாலும் இவர்கள் கட்சி ரீதியாகவோ, சாதிரீதியாகவோ கிரிமினல்களுடன் நெருக்கம் காட்டுகின்றனர். மாவட்டம் முழுவதும் பல வருடங்களாக ஒரே இடத்தில் இருக்கும் போலீஸ்காரர்களை உடனடியாக மாற்றினால்தான் நடவடிக்கை எடுப்பார்கள். குற்றங்கள் அதிகரித்து இருக்கும் நிலையில் போலீஸ்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  

நேரடியாக எங்கள் கட்சிப் புள்ளிகளின் தலையீடு இல்லை என்றாலும், அவர்கள் பெயரைச் சொல்லி மிரட்டும் கும்பலும் அதிகரித்து வருகிறது. தஞ்சை எஸ்.பி-யாக செந்தில்வேலன் இருந்த வரை, ரவுடிகள் ஒடுக்கப்பட்டனர். பெருமளவு குற்றச் செயல்களும் தடுக்கப்பட்டன. அவர் மாற்றலானதும் நிலைமை மோசம்.  அம்மா ஆட்சியிலும் இந்த கொடுமைகள் தொடர்வதுதான் வேதனை...'' என்று சொன்னார்கள்.

தஞ்சாவூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார், ''இந்த இரண்டு மாதங்களில் நடந்த பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் இன்னும் கண்டுபிடிக்கப்​படவில்லை. பெண்களைக் குறிவைத்தே பல குற்றங்கள் நடந்து உள்ளன. காவல் துறை அதிகாரி, முன்னாள் ராணுவ அதிகாரி வீடுகளில்கூட கொள்ளை அடிக்கப்படுகிறது என்றால் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம். தஞ்சாவூர் நகரத்தில் செயல்படும் போலீஸ் ஸ்டேஷன்களில் பகிரங்கமாகக் கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கின்றன. தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில், தி.மு.க பிரமுகர் ஒருவர் கைதானார். அவர் மீது குண்டர் தடுப்பு வழக்கும் அப்போது போடப்பட்டது. ஆனால், தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கை சரியாகக் கையாளவில்லை என்பதால், அவர் வெளியே வந்துவிட்டார். தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு படுகொலை நடந்து, அதே தி.மு.க. பிரமுகரின் பெயரும் இடம் பெற்று உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை டெல்டாவில் குறைந்து வருகிறது. சென்னை, மதுரை போன்ற இடங்களை மட்டும் இல்லாமல் டெல்டாவையும் முதல்வர் கவனிக்கவேண்டும்!'' என்று வேண்டுகோள் வைத்தார்.

காவல் துறை தரப்பில் பேசியபோது, ''தமிழ்நாடு முழுவதுமே போலீஸார் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. டெல்டா பகுதிகளில்இரண்டு மூன்று கொலைகளைத் தவிர மற்ற அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை அல்ல. கொள்ளை சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்​படுத்தப்படும்!'' என்று மட்டும் சொன்னார்கள்.

ஜெயலலிதா, சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் இது!

- நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு