Published:Updated:

நில அபகரிப்பு புகாரில் ஸ்டாலின் மைத்துனர்!

நாகை அதிர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##
நில அபகரிப்பு புகாரில் ஸ்டாலின் மைத்துனர்!

தி.மு.க-வினர் செய்த நில அபகரிப்புகளைக் கண்டறிந்து மீட்க தனிப் பிரிவை ஏற்படுத்திய பின்னர், அதில் சகட்டுமேனிக்குப் புகார்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன! 

நாகை மாவட்டத்தில், 'முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் (மனைவி துர்காவின் அண்ணன்) மருத்துவர் ராஜமூர்த்தியின் மீதும் குற்றச்சாட்டு கிளம்பவே... தி.மு.க. திகிலில் இருக்கிறது!

'திருவெண்காட்டில் வசிக்கும் ராஜமூர்த்தி, கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் எந்த வம்புதும்புக்கும் போனது இல்லை. போலீஸ், அரசு அலுவலகங்கள் என்று எதிலும் சிபாரிசு செய்தது இல்லை. அரசு மருத்துவர், சிறந்த இலக்கியவாதி, வள்ளலார் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டவர்’ என்றெல்லாம் புகழப்படுபவர் என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டு ஏரியாவாசிகளுக்கே ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி.

நில அபகரிப்பு புகாரில் ஸ்டாலின் மைத்துனர்!

ராஜமூர்த்தி மீது நாகை எஸ்.பி. ஆபீஸில் புகார் கொடுத்து இருக்கும் மத போதகரான குணசீலனை மயிலாடுதுறையில் சந்தித்தோம்.

''குத்தாலம் ஏரியாவில் என் நண்பர் பொன்ராஜ் என்பவர் 1980-ல் செயின்ட் மேரிஸ் மெட்ரிக்

நில அபகரிப்பு புகாரில் ஸ்டாலின் மைத்துனர்!

பள்ளியைத் தொடங்கினார். அது வளர்ச்சி அடைந்ததும், அதை அறக்கட்டளையாக்கி, அதில் அவரது உறவினர்கள் இருவரோடு என்னையும் உறுப்​பினர் ஆக்கினார். பொன்ராஜ் உடல்நலக் குறைபாட்டால், 2000-ல் இறந்துவிடவே, அவர் மனைவி ஸ்டெல்லா பள்ளியைத் தொடர்ந்து நடத்தினார்.

அப்போது உறுப்பினர்களில் ஒருவரான எட்வர்டு, பள்ளி மீது வழக்குப் போட்டார். அதை நீதிமன்றத்துக்கு வெளியேவைத்து சமரசம் செய்தோம். பிறகும் பல பிரச்னைகள் இருந்ததால், பள்ளியை விற்கும் முடிவுக்கு வந்தார் ஸ்டெல்லா. நான் அதை எதிர்த்தேன். அதற்காக ஒரு முறை அவருக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பினேன். நண்பர் பொன்ராஜின் ஆசைப்படி பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால், ஸ்டெல்லாவோ பள்ளியை விற்றுவிட வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த 2010-ம் ஆண்டு எனக்குத் தெரியாமல் ஸ்டெல்லா

நில அபகரிப்பு புகாரில் ஸ்டாலின் மைத்துனர்!

இந்தப் பள்ளியை ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தியிடம் விலை பேசிவிட்டார். அப்போது ஸ்டெல்லா, 'குணசீலன்தான் பிரச்னையாக இருப்பார்’ என்று சொல்ல... ராஜமூர்த்தி என்னிடம் பேசினார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவரின் மாமனார் மதன்​மோகன், மனைவி ஹேமலதா ஆகியோர் என்னை மிரட்டினர்.

ராஜமூர்த்தியும் அவரது மாமனாரும் ஒரு நாள்  வந்து, என்னை மிரட்டி  10, 15 வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள். பிறகு ஒரு நாள், மீண்டும் என்னை மிரட்டி அழைத்துச்சென்று, பள்ளியை அவர்கள் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்தார்கள். அதேபோல், பள்ளியில் நடைபெற்ற அறிமுக விழாவுக்கும் மிரட்டியே அழைத்துப்போனார்கள். அவரது ஆட்களைக் கண்டு பயந்துபோனதால், அவர்கள் சொன்னதை செய்தேன். இப்போது முதல்வர் அம்மா அமைத்​திருக்கும் தனிப் பிரிவும், அவர்கள் கொடுத்த தைரியமும்தான் புகார் அளிக்கக் காரணம்!'' என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மருத்துவர் ராஜமூர்த்தியிடம் பேசினோம். ''இது முழுக்க முழுக்​கப் பொய்யான குற்றச்சாட்டு. சமூகத்தில் எந்தக் கெட்ட பெயரும் இல்லாமல் வாழ்ந்து வருபவன் நான். அந்தப் பள்ளியை நடத்திவந்த ஸ்டெல்லா பல்வேறு காரணங்களால் விற்றுவிட முடிவு செய்தபோது, அவரிடம் இருந்து அதைக் கைப்பற்ற அங்கு உள்ள சிலர் பல வேலைகளைச் செய்தார்கள். பள்ளியை வாங்க வந்த சிலரை அடியாட்கள் வைத்து மிரட்டி ஓடவைத்தனர். அதையடுத்து எங்களிடம் வந்த ஸ்டெல்லா, 'அந்தப் பள்ளியை நீங்கள்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்!’ என்று கதறினார். ஏற்கெனவே, திருவெண்காட்டில் நாங்கள் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறவர்கள் என்பதால், எங்களிடம் வந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், என் மனைவி ஹேமலதா ஸ்டேட் பேங்க் மூலமாக கடன் பெற்று, முறைப்படி பள்ளிக்கூடத்தை வாங்கினார். சட்ட விதிகளின்படி பரிமாற்றம் நடந்தது. அப்போது குணசீலனே வந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். அதற்குப் பிறகு பள்ளியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில், 'நல்லவர்கள் கையில் இந்தப் பள்ளி சேர்ந்து இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்!’ என்று வானளாவப் புகழ்ந்தார். மிரட்டி அவரை அழைத்துச் சென்றால், அப்படிப் பேசுவாரா என்ன? இதற்கு எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன.

2010 மார்ச் மாதம் நடந்த விஷயத்தை இப்போது குணசீலன் வேறு மாதிரி மாற்றிப் பேச ஆரம்பித்திருப்பது ஏதோ உள்நோக்கத்தால்தான். அது எதுவாக இருந்தாலும், எப்படிப்பட்ட புகார் கொடுத்தாலும், நாங்கள் அதை சட்டப்படி சந்திப்போம். எல்லா ஆவணங்களையும் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து உள்ளோம். அதில் ஏதாவது தவறு இருந்தால், காவல் துறையின் நடவடிக்கைக்கு உட்பட்டு நடப்போம்!'' என்று தெளிவாக சொன்னார்.

விஷயம் இப்போது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் வசம் போயிருக்கிறது. அவர்கள் புகாரை ஏற்று தங்கள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில், 'பள்ளியை யாரும் மிரட்டி வாங்கவில்லை’ என்று ஸ்டெல்லா வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். விரைவில் உண்மைகள் வந்துவிடும்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு