Published:Updated:

யுவராஜாவை மிரட்டும் சேலம் காங்கிரஸ்

குளுகுளு அறை... ஜிலுஜிலு வீடியோ!

பிரீமியம் ஸ்டோரி
##~##
யுவராஜாவை மிரட்டும் சேலம் காங்கிரஸ்

ரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் செய்திகளைக் கொடுப்பதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இணையாக எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கோஷ்டிச் சண்டைகள் கொடி கட்டிப் பறக்கும்! 

இப்போதைய ஸ்பெஷல், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுவுக்கும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவுக்கும் இடையே நடந்துவரும் லடாய்கள்தான். ''இனியும் இதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. யுவராஜா என்ன யோக்கியமா? அவர் மீதும் பல புகார்கள் இருக்கின்றன. அதை எல்லாம் வெளியிடப்போகிறோம்!'' என்று பொங்கி எழுந்துள்ளார், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம். அவரை சந்தித்தோம்.

யுவராஜாவை மிரட்டும் சேலம் காங்கிரஸ்

''தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் 45 ஆண்டு கால அரசியல் தியாக வாழ்க்கை மிகவும் உயர்வானது. இன்று வரை தமிழ்நாட்டில் காங்கிரஸைக் கட்டுக்கோப்போடு வளர்ச்சிப் பாதையை நோக்கி வழிநடத்தி வருகிறார். அதற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், காங்கிரஸை தமிழ்நாட்டில் இருந்து அழிக்கிற விதமாகவும், பொதுமக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா.

இந்திரா காந்தியின் செல்லப் பிள்ளையாகவும், தலைவர் மூப்பனாரின்

யுவராஜாவை மிரட்டும் சேலம் காங்கிரஸ்

மரியாதைக்கு உரியவருமாகத் திகழ்ந்தவர், தங்கபாலு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குத் தார்மீகப் பெறுப்பு ஏற்றுத் தன் பதவியைத் துறந்தவர். ஆனால், தலைவரின் செயல்பாடுகளை எல்லாம் கவனித்துத்தான், அன்னை சோனியா, அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. தேர்தலில் கூட்டணி அமைப்பது  சோனியாதான். அதனால் அவருக்குக் கட்டுப்பட்டு, கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால் யுவராஜா, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே தலைமைக்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாகக் கூட்டணிக்குள் குடைச்சல்களையும், பொது​மக்களிடம் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். தேர்தல் பிரசாரத்துக்கு எங்கேயும் போகாமல், தனது சொந்த ஊரில் நின்றார். தானும் தோற்றதோடு, தமிழ் நாட்டில் இளைஞர் காங்கிரஸ் நின்ற 10 இடங்களிலும் தோல்வி அடையச் செய்துவிட்டார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணமாக இருந்த யுவராஜா உடனே பதவி விலக வேண்டும்.

தலைவர் தங்கபாலுவின் அரசியல் வாழ்க்கை அளவுகூட இந்த யுவராஜாவுக்கு வயசு கிடையாது.

யுவராஜாவை மிரட்டும் சேலம் காங்கிரஸ்

ஆனால், அந்த வயசு வித்தியாசம்கூட பார்க்காமல், தொடர்ந்து தலைவரை வசைபாடி வருகிறார். இதை எங்கள் தலைவரிடம் சொன்னால், 'தலைவனுக்கு உரிய தகுதியே பொறுமைதான். என்னைப்போலவே நீங்களும் பொறுமையாக இருங்கள்’ என்கிறார். நாங்களும் எத்தனை நாள்தான் இதைத் தாங்குவது? 'கூட்டணிபற்றிப் பேச தங்கபாலுவுக்கு அருகதை, யோக்கியதை இல்லை’ என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் யுவராஜா பேசுகிறார். கடந்த வாரம் பிரணாப் முகர்ஜிகூட 'கூட்டணி உறுதியாகத்தான் உள்ளது’ என்றுதானே சொல்லிவிட்டுச் சென்றார். அவரைப் பார்த்து, இந்த யுவராஜா திட்ட வேண்டியதுதானே? இனியும் இவர் தலைவரைத் திட்டினால்... நாங்கள் பொங்கி எழுவோம்.

யோக்கியவானாகப் பேசும் யுவராஜாவுக்கு முதலில் ஒழுக்கம் இருக்கிறதா? பாத யாத்திரை என்பது எவ்வளவு புனிதமானது. ஆனால், அவர் ஏற்காட்டில் பாத யாத்திரையின்போது குளுகுளு அறையில் அரங்கேற்றிய விஷயங்களுக்கு எங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதை வெளியிட்டால், அவரது மானம் கப்பல் ஏறிவிடும். அதை ராகுலிடம் காட்டிவிட்டு, பிறகு வெளியிடலாம் என்றுதான் வைத்திருக்​கிறோம். இனியாவது நாவடக்கத்​தோடு நடந்துகொள்ள வேண்டும் அவர்!'' என்று வெடித்தார் காட்டமாக.

இது பற்றி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவிடம் பேசியபோது, ''தங்கபாலுவின் செயல்பாடுகளைப்பற்றி பொதுமக்களுக்கே நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இளைஞர் காங்கிரஸாரின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளின் சார்பாகத்தான் நான் பேசுகிறேன். இப்படியே இருந்தால், தமிழ்நாட்டில் தொடர்ந்து 50, 60 ஸீட்டுகளுக்காகத்தான் போராடிக்கொண்டு இருக்க வேண்டும். மாநிலத் தலைவர்தான் இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை தலைமைக்கு எடுத்துச் சொல்லி இருக்கவேண்டும். ஆனால், தங்கபாலு இங்கு உள்ள சூழ்நிலைகளை தலைமைக்கு வெளிப்படுத்தாமல் விட்டு​விட்டார். நாங்கள் தேர்தலுக்கு முன்பு இருந்தே 'தி.மு.க-வோடு கூட்டணி வேண்டாம்!’ என்று சொல்லிக்கொண்டு இருந்தோம். அதனால், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

பாத யாத்திரையில் ஒவ்வோர் இளைஞரும் அர்ப்பணிப்போடுதான் செயல்பட்டோம். அப்படி ஏதாவது தவறான ஆதாரம் இருந்தால், உடனே அதை ராகுலிடம் காட்டிவிட்டு, வெளியிட வேண்டியதுதானே? அப்படி எதுவும் கிடையாது, இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது!'' என்றார்.

பேசியது போதும், வீடியோவைக் காட்டுங்கப்பா!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு