Published:Updated:

தவிக்கும் தர்மபுரி குழந்தைகள்!

திருமணம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
தவிக்கும் தர்மபுரி குழந்தைகள்!

சில விஷயங்களில் பழைமையை மதிக்கலாம். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் இன்னும் மாறாமல் இருக்கும் குழந்தைத் திருமணம் என்ற பழைமையான வழக்கம், நம் வேதனையைத்தான் கூட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தாலும்கூட, உள்வாங்கி ஒதுங்கியுள்ள கிராமங்கள் சிலவற்றில் இது போன்ற திருமணங்கள் யார் கண்களுக்கும் தெரியாமலேயே நடந்து முடிந்துவிடுகின்றன! 

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் நல்லம்பள்ளி, அரூர், பாப்பாரப்பட்டி, கருப்​பனம்பட்டி, பென்​னாகரம் அருகேயுள்ள மாதேஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அஸ்தகிரியூர் உள்ளிட்ட ஊர்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டன. ஆடி மாதப் பிறப்புக்கு முன்பாக வரும் கடைசி முகூர்த்தம் என்பதால்தான் இத்தனை திருமணங்கள் ஏற்பாடானதாம்.

தவிக்கும் தர்மபுரி குழந்தைகள்!

தர்மபுரி பகுதியில் குழந்தைத் திருமணங்​களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவரும் சிலரிடம் பேசினோம்.

''கடுமையான எச்சரிக்கை, விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் என எதையுமே தர்மபுரி மாவட்ட பெற்றோர்கள் சிலர்

தவிக்கும் தர்மபுரி குழந்தைகள்!

பொருட்படுத்துவதே இல்லை. அந்த அளவுக்குப் பகுத்தறிவு அற்ற பழைமை​வாதிகளாக இருக்கிறார்கள். இது போன்ற குழந்தைத் திருமணம் மூலம், குருவி தலையில் பனங்காயாக சிறு வயதிலேயே குடும்ப பாரம் விழுவதால், தாக்குப் பிடிக்க முடியாமல் அந்தப் பெண் குழந்தைகள் திணறிப் போகிறார்கள்... சிலர் விபரீத முடிவுகளையும் தேடிக்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி, வேலை இன்மை இரண்டும்தான் குழந்தைத் திருமணங்களுக்கு முக்கியக் காரணங்கள். அதுவும் குறிப்பாக, இந்தப் பகுதியில் உள்ள பல பெற்றோர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள்தான் குழந்தைத் திருமணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசினால், 'தப்புன்னு தெரியுது. ஆனால், முதியோர் பாதுகாப்பில் ஊரிலேயே பெண் குழந்தைகளை விட்டுச் சென்றால், சூழ்நிலை வசத்தால் வழி தவறிப் போயிடக்கூடாதுன்னுதான் சின்ன வயசுல கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்!’ என்கிறார்கள். மொத்தத்தில், தாங்கள் செய்வது தவறு என்று உணர்ந்தாலும்கூட வாழ்வாதாரப் பிரச்னைகள்தான் இந்த மாவட்டப் பெற்றோர் சிலரை இப்படிப்பட்ட காரியங்களை செய்யத் தூண்டுகிறது...'' என்று தெரிவித்தனர்.

தர்மபுரி கலெக்டர் லில்லியிடம் இது பற்றிப் பேசினோம். ''கடந்த முகூர்த்தத்தின்போது அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தந்து தயார்  செய்து வைத்தோம். எதிர்பார்த்த மாதிரியே சில இடங்களில் சிறுமிகளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதுதெரிந்து, அத்தனையையும் தடுத்தோம். விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளால் மட்டுமே இவர்களை முழுமையாக மாற்ற முடியாதுதான். பொருளாதாரப் பற்றாக்​குறையும் இதற்கு முக்கியக் காரணமாக இருப்பதால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தொழிற்பேட்டை அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அரசு யோசித்து வருகிறது. அவையெல்லாம் படிப்படியாக அமலுக்கு வரும். நிச்சயம் குழந்தைத் திருமணமே நடக்காத மாவட்டம் என தர்மபுரி பெயர் எடுக்கும்!'' என்றார்.

இன்னுமா அரசு யோசிக்க வேண்டும்?

- எஸ்.ராஜாசெல்லம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு