Published:Updated:

மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

தொண்டி பயங்கரம்...

பிரீமியம் ஸ்டோரி
##~##
மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

லை வீசிவிட்டு மணிக்​கணக்கில்காத்துக்​ கிடந்தாலும்... கிலோ கணக்கில்தான்மீன்கள் சிக்கும். ஆனால், வெடி வீசினால் சுலபமாக டன் கணக்கில் மீன்களை அள்ளிவிடலாம். எளிதில் லட்சங்களை சம்பாதிக்கலாம். இப்படித்தான் தொண்டி பகுதியில், குறிப்பாக புதுக்குடி, திருப்பாலைக்குடி ஏரியாவைச் சேர்ந்த சில மீனவர்கள் கடலில் வெடி வீசி மீன் பிடிக்கிறார்கள். இதற்கென, போலீஸுக்குக் 'கவனிப்பும்’ உண்டு. இதற்காகப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளைத் தவறுதலாகக் கையாண்டதில் பலருக்கு  கை, கால், கண் போயிருக்கிறது; இப்போது மூன்று உயிர்கள் பறிபோனதால் ஏரியாவில் பதற்றம். 

கடந்த 7-ம் தேதி மதியம் புதுக்குடியில் இருந்து ஆறு பேர் ஜெலட்டின் குச்சிகள் சகிதம் கடலுக்குச் சென்றார்கள். கரையில் இருந்து சுமார் நான்கு கி.மீ. தூரத்தில் படகுகளை நிறுத்திக்கொண்டு, குமாரவேலு என்பவர் ஜெலட்டினை கடலுக்குள் வீசினார். அது வெடித்து மீன்கள்

மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

மிதக்க ஆரம்பித்ததும் ஒரு படகை அங்கு நிறுத்தி இருவர் மீன்களை அள்ளினார்கள். அப்போதே சற்றுத் தள்ளி இன்னொரு இடத்திலும் ஜெலட்டினை வீச முயன்றபோது, அது படகுக்குள்ளேயே வெடித்து குமாரவேலுவைக் கடலுக்குள் தூக்கி வீச.... அந்தப் படகில் இருந்த நாகூர்கனி, ஜெயசந்திரன் இருவரும் குடல் சரிந்து படகில் விழுந்தார்கள். படகின் இன்னொரு முனையில் இருந்த சமயமணி மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் தெரிந்து கிராமத்தினர் வருவதற்குள் படகில் கிடந்த இருவரும் பிணமாகிப்​போனார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத் தேடலுக்கு பிறகு, கோரமாக சிதைந்துபோன நிலையில் குமாரவேலுவின் உடல் மீட்கப்பட்டது.

விஷயம் தெரிந்ததும் ஐ.பி., க்யூ, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், லோக்கல் போலீஸ் என படைகள் புதுக்குடியை முற்றுகையிட, மீனவர்கள் அத்தனை பேரும் தலைமறைவானார்கள்.

மீனவர்களின் வீடுகளுக்​குள் அதிரடி சோதனை நடத்தி ஜெலட்டின் குச்சி​களையும், தப்பி ஓடியவர்களையும் தேடியது போலீஸ். பாலமுருகன், சமயமணி, கண்ணன் ஆகியோரை ஊர்க்காரர்களே கூட்டி வந்து போலீஸில் ஒப்படைத்தனர்.

மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய தொண்டிப் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் சிலர், ''புதுக்குடியில் மூணு கோஷ்டிகள் இந்தத் தொழிலில் இருக்குது. பச்சை மரங்களை வெட்டி படகில் ஏத்திட்டுப் போய்,

மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

கடலுக்குள் நாலைஞ்சு இடத்தில் போட்டுட்டு வந்துடுவாங்க. ஒரு வாரத்தில் அந்த மரத்தில் பாசம் பிடிச்சு, அதைத் திங்கிறதுக்காக ஏராளமான மீன்கள் வரும். அந்தநேரம் ஜெலட்டின் குச்சிகளை வீசி வெடிக்கவைப்பாங்க. அந்த அதிர்ச்சியில செத்தும் மயக்கமடைஞ்சும் டன் கணக்கில் மீன்கள் கடலில் மிதக்கும். அதை எல்லாம் அரிச்சு அள்ளிக்கிட்டு வருவாங்க. வழக்கமான பீன்பிடித் துறை வழியா இல்லாம, இவங்களுக்குன்னு இருக்கும் தனியான ரூட்டில் சரக்கை இறக்கி, திருச்சிக்கும் கேரளாவுக்கும் அனுப்பிடுவாங்க.

வெடி வைச்சுப் பிடிப்பதால் மீன் குஞ்சுகள் அழிஞ்சு, மீன் வளமே பாதிக்குதுனு சொல்லி, நாங்க பல தடவை அவங்களிடம் சண்டை போட்டுப் பார்த்தோம். போலீஸ் கேஸ் எல்லாம் ஆகியிருக்கு. அப்படியும் அவங்க திருந்துற மாதிரித் தெரியலை. இதனால், கை, கால் ஊனமானவங்க நிறையப் பேர்

மீன் வெடியில் உயிர் இழந்த மீனவர்கள்!

இருக்காங்க. இப்ப மூணு உசுரே போயிருச்சு. இனியாச்சும் அவங்க திருந்தட்டும்!'' என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார்கள்.

திருமயத்தில் இருக்கும் கல் குவாரிகளில் இருந்துதான் இவர்களுக்கு ஜெலட்டின் கிடைக்கிறதாம். காவல் துறையை நன்றாகக் கவனித்துவிடுவதால், வெடி கிடைப்பதிலும் மீன் பிடிப்பதிலும் இவர்களுக்கு இடைஞ்சல் இல்லை என்கிறார்கள்.

பலியான குமாரவேலுவின் தந்தை கோட்டை ராஜா, ''வெடி வெச்சு மீன் பிடிக்கிறது சாதாரண விஷயம். இதை அதிகாரிகள்தான் பெருசாக்கிட்டாங்க. ஒரு குடிகாரனைத் தொழிலுக்குக் கூட்டிட்டுப்​போனதாலதான், என் மகன் அநியாயமாப் பலியாகிட்டான்!'' என்றார்.

மீனவர் சொசைட்டி தலைவர் முத்துக்குமார், ''ஊர்க் கட்டுப்பாட்டை மீறி இவர்கள் கடலில் வெடி வீசி இருக்கிறார்கள். இனியும் யாராவது இப்படிச் செய்தால், நாங்களே போலீஸில் பிடித்துக் கொடுக்க இருக்கிறோம்...'' என்றார் கண்டிப்புடன்.

தேவிப்பட்டினம் கடலோரப் பாதுகாப்புக் குழும இன்ஸ்பெக்டர் குமாரவேல், ''போன 26-ம் தேதி தகவல் வந்து கடலுக்குள் போனோம். ஆனால், யாரும் சிக்கவில்லை. போலீஸ் வருவது தெரிந்தாலே, ஜெலட்டினைத் தூக்கிக் கடலுக்குள் போட்டுவிடுகிறார்கள். இதே க்ரூப் மீது, போன அக்டோபர் மாசம் வழக்குப் போட்டு இருக்கிறோம். அப்படியும் அவர்கள் திருந்தவில்லை. இனி தீவிரமாகக் கண்காணிப்போம்!'' என்கிறார்.

இனியாவது இதுபோன்ற ஆபத்தான செயல்களில் மீனவ சமுதாயம் இறங்காமல் இருக்கட்டும்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு