Published:Updated:

எழுந்து வா... நிவேதா!

மூன்று ஆண்டுகளைக் கடந்தும் சோகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
எழுந்து வா... நிவேதா!

''ரஷ்யாவுக்குப் போய் மருத்துவம் படிச் சுட்டு வந்து, இங்கே இலவசமாவே மருத்துவம் செய்யப்போறேன்!'' என்று முகம்கொள்ளாத சந்தோஷத்தோடும் மனசு நிறையக் கனவுகளோடும் சென்ற நிவேதா, அடுத்த சில நாட்களிலே இந்தியாவுக்குத் திரும்பினார், ஸ்ட்ரெச் சரில் சுய நினைவு இல்லாத பெண்ணாக. மூன்று ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நிவேதாவின் கதை பரிதாபமானது. 

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரவிக்குமார் - சுபத்ரா தேவி தம்பதியின் இரண்டாவது மகள் நிவேதாவுக்கு, டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடும்பப் பொருளாதாரம் அவரது ஆசைக்கு அணைபோட்டது. ஏமாற்றமும், ஆதங்கமுமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவருக்கு நம்பிக்கைக் கீற்றாகக் கிடைத்தது அந்தச் செய்தி.

ரஷ்ய நாட்டில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கலாம் என்பது தெரிந்ததும், மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக ரவிக்குமாரும் கஷ்டப்பட்டு சில லட்சங்களைப் புரட்டி ஆசை மகளை ரஷ்யாவுக்கு அனுப்பிவைத்தார். அடுத்து நடந்ததை ரவிக்குமார் பேசுகிறார்.

எழுந்து வா... நிவேதா!

''ரஷ்யாவுக்குப் போன தினத்தில் இருந்து இரண்டு வாரங்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தாள், நிவேதா. அதன் பிறகு திடீரென போன் வருவது நின்று விட்டது. அவள் படித்த மெடிக்கல் காலேஜுக்கு நாங்களே போன் செய்தோம். 'நிவேதா அப்பென் டிசிடிஸ் ஆபரேஷன் முடிந்து, ஐ.சி.யு-வில் இருக்கிறார்’ என்று தகவல் சொன்னார்கள். அப்பென்டிசைஸ் ஆபரேஷனுக்கும் ஐ.சி.யு-வுக்கும் என்ன சம்பந்தம் என்று பயந்துவிட்டோம். உடனே இந்திய தூதரகம் மூலமாக நடந்ததை விசாரித்தோம்.

'ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவமனையில், நிவேதாவுக்கு ஆபரேஷன் நடந்த நேரத்தில், டாக்டர்கள் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தைக் கொடுத்து இருக்கிறார்கள். அதனால், நிவேதா நிலைமை

எழுந்து வா... நிவேதா!

ரொம்பவும் சீரியஸாகிவிட்டது.’ என்றார்கள். உடனே பதறி ரஷ்யாவுக்குப் போனோம். அசைவு இல்லாமல் மெஷின்களுக்கு மத்தியில் கோமா நிலையில் படுக்கவைத்து இருந்தார்கள். மயக்க மருந்தை ஓவர் டோஸாகக் கொடுத்ததால், அவளது மூளை செல்கள் எல்லாம் செயல் இழந்துவிட்டன. திடீர்னு ஒரு நாள் நிவேதாவோட கை, கால் நரம்புகள் எல்லாம் இழுத்துக்கொண்டன. 'அலர்ஜி இருப்பதால்தான், நிவேதாவுக்கு இந்த நிலைமை. எங்களால் முடிந்த சிகிச்சையைப் பண்ணிட்டோம். உங்கள் நாட்டுக்கே கொண்டுபோங்கள்’ என்று சொன்னார்கள்.  இது எல்லாமே 2008-ல் நடந்தது. இங்கே வந்து  இந்தியாவில் இருக்கும் நிறைய மருத்துவமனைகளில் எங்கள் தகுதிக்கும் மீறி

எழுந்து வா... நிவேதா!

20 லட்சத்துக்கும் மேல் செலவு செய்துவிட்டோம். இதுக்கு மேல் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லை என்பதால், வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டோம்!'' என்று கண்ணீர்விட்டார்.

நிவேதா இருந்த அறைக்குச் சென்றோம். சாய்வுப் படுக்கையில், அசைவின்றிப் படுத்து இருந்த நிவேதாவின் விழிகளில் மட்டும் லேசான அசைவு.

''வாயைத் திறந்து சாப்பிட முடியாது என்பதால், நிவேதாவின் மூக்கு வழியே சின்னக் குழாயைச் செருகி உள்ளோம். அந்தக் குழாய் வழியாகத்தான் திரவ உணவு கொடுக்கிறோம். சில சமயங்களில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடவே சிரமப்படுவாள். அதனால் சளியை வெளியே எடுக்க, தொண்டையில் நிரந்தரமாக ஒரு குழாய் மாட்டி இருக்கிறோம்.. இவளை கவனிப்பதற்காகவே நானும் என் மனைவியும் வேலையை விட்டுவிட்டோம். இது என் தங்கையின் வீடு. அரிசி, பருப்பு சாமான்களுக்கும் தங்கைதான் உதவி செய்கிறார்.

'நிவேதாவின் உடல்நலத்துக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்’ என்று டாக்டர்கள் ராதா கிருஷ்ணனும், ராஜ்குமாரும் மருத்துவ ரீதியாக நிறைய உதவிகள் செய்கிறார்கள். நண்பர்களும் நிறையப் பண உதவி செய்கிறார்கள். ஆனாலும் இன்னமும் நிவேதா படுத்த படுக்கையாக இருப்பதுதான் ரணமாக இருக்கிறது. உடலில் வலி எடுத்தால்கூட, 'எனக்கு வலிக்கிறது’ என்று சொல்லவும் முடியாத நிலை யில், மகள் துடிப்பதைப் பார்க்கும் கொடுமை எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது!'' என்று சொன்னபோது, அவரையும் மீறிக் கண்ணீர் வடிந்தது.  

ஈரம் கசியும் கண்களோடு பேசிய சுபத்ரா தேவி, ''கை, கால் அசைக்க முடியாமப் படுத் திருந்தாலும், நடக்கிற சம்பவங்களை நிவேதா இப்ப ஓரளவு புரிஞ்சுக்கிறா. காலையில் கோயிலுக்குப் போய்ப் பிரார்த்தனை பண்ணிட்டு வர கொஞ்சம் நேரமாயிடுச்சு. நான் வீட்டுக்கு வந்ததும் என்னைப் பார்த்ததும் அவளோட கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிச்சு. என்னைக் காணலையேன்னு ரொம்ப நேரமா உள்ளுக்குள்ளேயே தவிச்சவ, நேரில் பார்த்ததும் அழுதுட்டா. என்னிக்காவது ஒரு நாள் அம்மான்னு வாய் திறந்து கூப்பிடுவாங்கிற நம்பிக் கையிலதான் வாழ்ந்துட்டு இருக்கோம்...'' என்றார் ஏக்கமாக.

உடைந்து விழுந்த வார்த்தைகளுக்குள், உடையாமல் இருக்கிறது நம்பிக்கை. எழுந்து வருவார் நிவேதா!

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு