Published:Updated:

பட்டுப்போகுதே, பட்டுப் பூங்கா!

வேதனையில் காஞ்சி நெசவாளர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
பட்டுப்போகுதே, பட்டுப் பூங்கா!

'காஞ்சிப் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்​போவதாக பளபளப்பாக அறிவிக்கப்​பட்ட பட்டுப் பூங்கா திட்டம் இப்போது பட்டுப்போக ஆரம்பித்துவிட்டது... உடனே நடவடிக்கை எடுங்கள்!’ என்ற வேதனைக் குரல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) பதிவாகி இருக்கவே... கிளம்பினோம். 

முறைசாராத் தொழிலாக இருந்த பட்டுத் தொழிலில், கூலி உயர்வு கேட்டுப் போராடிய நெசவாளர்களுக்கு ஒரு விடியலாக அறிவிக்கப்பட்டதுதான் பட்டுப் பூங்கா திட்டம். 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு, நெசவாளர்களுக்கு வேலை உத்தரவாதம், அரசின் நேரடிக் கண்காணிப்பில் பட்டுத் தொழிலின் அத்தனை அம்சங்களும் ஒரே வளாகத்தில் அமைவது, அரசின் நலத் திட்டங்கள் நெசவாளர்களுக்கு தவறாமல் போய்ச் சேருவது போன்ற பல அம்சங்களோடு, மத்திய அரசின் 2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது காஞ்சிபுரம் நெசவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. மத்திய ஜவுளித் துறை அறிவித்த இந்தத் திட்டத்துக்கு, தமிழக அரசு இடம் ஒதுக்கித் தருவதாகவும் அறிவித்தது.

பட்டுப்போகுதே, பட்டுப் பூங்கா!

அதன் பின்னர்தான், நிகழ்ந்தது பெரிய சறுக்கல். உறுதி அளித்த தி.மு.க. அரசு, கடைசி நிமிடம் வரை இந்தத் திட்டத்துக்கு இடம் ஒதுக்கித் தரவே இல்லை. நெசவாளர்கள் குரல், அரசின் காதில் விழவே இல்லை.

இப்போது ஆட்சியைக் கைப்பற்றி உள்ள அ.தி.மு.க. அரசு,  இந்தப் பட்டுப் பூங்கா அமைப்​பதற்கு இடம்

பட்டுப்போகுதே, பட்டுப் பூங்கா!

ஒதுக்கி கடந்த மாதம் ஆணை வெளியிட்டது. விறுவிறுவென அடுத்த கட்டப் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில், 'பட்டுப் பூங்கா அமைப்​பதற்கான அடிப்படை நோக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது’ என்று குற்றம் சாட்டி உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முத்துக்குமாரிடம் பேசினோம். ''பெற்ற குழந்தையைத் தொலைத்துவிட்ட தாயின் பரிதவிப்பில் இருக்கிறோம். இந்திய அளவில் புகழ் பெற்ற கைத்தறி நெசவு நகரமான காஞ்சிபுரத்தில், பட்டுத் தொழில் இங்கு நிறுவனமயமாக இல்லை. போதிய கூலி தராமல், நெசவாளர்களை இன்னமும் முதலாளிகள் சுரண்டி வருகின்றனர். போலிப் பட்டு சகஜமாகப் புழக்கத்தில் இருப்பதால், காஞ்சிப் பட்டுத் தொழில் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

பட்டுப் பூங்கா திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிதான் முதலில் முன்​வைத்தது. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக, காஞ்சிபுரம் வந்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, காஞ்சியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் திட்டத்தை மாநில முதல்வர் அறிவித்தது, அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. பூங்கா அமைக்க இடம் வழங்குவதோடு மாநில அரசின் பங்காக

பட்டுப்போகுதே, பட்டுப் பூங்கா!

40 கோடி தருவதாகவும் கருணாநிதி அப்போது கூறினார். மத்திய அரசின் 2009-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டம் இடம் பெற்று இருந்தது. ஆனால், நடந்தது வேறு. பட்டுப் பூங்கா திட்டம் வெற்றி பெற்றால், அந்தப் பெயர் மத்திய அரசுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலோ என்னமோ... மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், இந்தத் திட்டத்துக்கு இடையூறு செய்யத் தொடங்கினார்.

பட்டுப் பூங்காவில் இடம்பெறுவதற்காக முன்னணி நிறுவனங்களைக் கொண்ட சொஸைட்டி உருவாக்கப்பட்டது. இதில், தொழிலாளர்களைச் சுரண்டும் உற்பத்தியாளர்களே பிரதானமாக இடம்பெற்றார்கள். மேல்​கதிர்பூர் கிராமத்தில் 70 ஏக்கர் இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்தது. திட்டம் அடுத்த கட்டத்தை எட்டாத நிலையில், ஆட்சி அதிகாரத்தை தி.மு.க. இழந்துவிட்டது. அடுத்துப் பொறுப்பு ஏற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, பட்டுப் பூங்காவுக்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக அரசு ஆணை ஒன்றை சில நாட்களுக்கு முன் பிறப்பித்து உள்ளார். இந்தத் திட்டம் முழுக்க முழுக்கத் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், நெசவாளர்களைக்கொண்ட முறையான கமிட்டி அமைக்கப்படவில்லை. நெசவாளர்களின் பங்களிப்பே இந்தத் திட்டத்தில் இல்லை. பட்டு உற்பத்தியாளர்களும், சாயத் தொழில் அதிபர்களும் மட்டுமே இந்த வளாகத்தில் இடம்பெறப்போகிறார்கள். நெசவாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத்தால், நெசவாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை!

நெசவாளர்களும் ஐந்து அல்லது 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து, ஒரு யூனிட்டை எடுத்துத் தொழில் செய்யும் வகையில் திட்டம் சீரமைக்கப்பட வேண்டும். உற்பத்தியாளர்களுக்குத் தருவதைப்போலவே, 40 சதவிகித மானியத்தை அந்தக் குழுவுக்கும் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று கொந்தளித்தார்.

பல தரப்பட்ட பூக்களும் இடம் பெறுவதே ஒரு பூங்காவுக்கு அழகு. பட்டுப் பூங்காவிலும் உற்பத்தியாளர்களோடு நெசவாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கை.

அரசு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்றே நம்புவோம்!

- கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு