Published:Updated:

அதிகாரம் காட்டும் இடம் பேருந்து நிலையம்தானா?

கேள்வி எழுப்பும் சிறு வியாபாரிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அதிகாரம் காட்டும் இடம் பேருந்து நிலையம்தானா?

டலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு, புதிய கமிஷனர் வந்தாலும் சரி... காவல் துறையில் புதிய அதிகாரிகள் வந்தாலும் சரி... அவர்களால் முதல் நடவடிக்கையில் தண்டிக்கப்படுபவர்கள், பேருந்து நிலையத்தில் இருக்கும் சிறு வியாபாரிகளும் தள்ளுவண்டியில் பொருட்கள் விற்பவர்களும்தான்! 

வியாபாரிகளிடம் பேசினோம். ''அண்டாகுண்டா அடகுவெச்சுப் பொழப்பு நடத்தற ஏழைங்க சார் நாங்க. நகராட்சி மற்றும் போலீஸை வெச்சுக் அவ்வப்போது கடையை அடிச்சு நொறுக்கி, வண்டியில போட்டுக்கிட்டுப் போயிடுறாங்க. பஸ்ஸில் ஏறி, இறங்கி வியாபாரம் செய்பவர் களையும் அடிக்கிறார்கள். எங்க வயித்துல அடிக்கிறதுக்கு ஒரு தீர்வே இல்லீங்களா?'' என்று புலம்பினார்கள்.

''அனுமதி இல்லாமல் கடை வைப்பதால் என்னதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்?'' என்று தெருக் கடை வியாபாரிகள் சங்க சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் தணிகைச்செல்வத்திடம் கேட்டோம்.

அதிகாரம் காட்டும் இடம் பேருந்து நிலையம்தானா?

''நகர்ப்புறச் சாலையோர வியாபாரிகளுக்கான தேசியக் கொள்கை ஒன்றை, மத்திய அரசு 2009-ல்

அதிகாரம் காட்டும் இடம் பேருந்து நிலையம்தானா?

வகுத்து உள்ளது. சிறு வியாபரிகளுக்கு, நகராட்சியாலோ, காவல் துறையாலோ எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம். சாலையோரங்கள் மற்றும் பேருந்து நிலைய வியாபாரிகள், பேருந்தில் விற்பவர்கள், நடைபாதையில் விற்பவர்கள், தள்ளுவண்டி, சைக்கிள் வியாபாரிகள் பலரும் இதில் அடங்குவர். வருடாவருடம் கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு நகராட்சியும் 'வெண்டிங் கமிட்டி’ அமைக்க வேண்டும். அதில் 40 சதவிகிதம் சிறு வியாபாரிகளும், 60 சதவிகிதத்தினர் காவல்துறை, நகராட்சிப் பணியாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கவேண்டும். 'வியாபாரம் செய்யத் தகுதியான இடம், தகுதியற்ற இடம்’ என்பதை இந்த வெண்டிங் கமிட்டி முடிவு செய்ய வேண்டும். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக காவல் துறையும், நகராட்சியும் இவர்களின் வாழ்வை இஷ்டம்போலப் பந்தாடுவது தவறு. சட்டப்படி பார்த்தால், பேருந்து நிலையம் வியாபாரம் செய்யத் தகுதியான இடம்தான். அதனால், சிறுவியாபாரிகளை பலவந்தமாக அகற்றக் கூடாது. அத்தகைய வியாபாரிகளுக்கு அடையாள அட்டையும், உரிமமும் கொடுக்க வேண்டும். இதுபற்றி, பிரதமர் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். அதைப் பின்பற்றாமல், போலீஸை வைத்துக் கொண்டு கடைகளை அடித்து நொறுக்குவது சட்டத்துக்குப் புறம்பானது'' என்றார்

இதுகுறித்து, பண்ருட்டி நகராட்சி கமிஷனர் அருணாசலத்திடம் கேட்டபோது, ''இந்த 'வெண்டிங் கமிட்டி’ என்பது தமிழகத்தில் இன்னும் நடைமுறைப் படுத்தவில்லை. பேருந்து நிலையத்தில் நகராட்சியால் கடைகள் கட்டி விடப்பட்டு உள்ளன. அவற்றுக்கு எதிரில் இடத்தை ஆக்கிரமித்துக் கடை வைத்தவர்களைத்தான் அப்புறப்படுத்தினோம்'' என்றார்.

ஏழைகளின் பிழைப்பில் கை வைத்துத்தான் அதிகாரத்தைக் காட்ட வேண்டுமா?

- க.பூபாலன்

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு