Published:Updated:

விரட்டினார் ரகுபதி... சேர்த்துக் கொண்டார் விஜயபாஸ்கர்!

புதுக்கோட்டை புகைச்சல்

பிரீமியம் ஸ்டோரி
##~##
விரட்டினார் ரகுபதி... சேர்த்துக் கொண்டார் விஜயபாஸ்கர்!

'ரகுபதியின் ஆட்களை விலை கொடுத்து வாங்குகிறார் விஜயபாஸ்கர்’ என்ற ஒரு வரிச் செய்திதான், இப்போது புதுக்கோட்டையைக் கலக்கும் ஹாட் டாபிக்! 

தி.மு.க. முக்கியப் பிரமுகர்களிடம் பேசினோம். ''கடந்த சட்டமன்றத் தேர்தலில், புதுக்கோட்டையைத் தவிர வேறு எங்கும் போட்டியிட விருப்பம் இல்லை எனச் சொன்னார்  ரகுபதி. ஆனால், விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ராமையாவை அறிவித்தவுடன், அந்தத் தொகுதியில் போட்டியிட ஒப்புக்கொண்டார். விராலிமலையில் ரகுபதி நிற்பது தெரிந்த ஜெயலலிதா, திருவெறும்பூர் தொகுதிக்கு அறிவித்த வேட்பாளரான விஜயபாஸ்கரை, விராலிமலையில் போட்டியிடவைத்தார்.  '20,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துவிடுவேன்’ என கடைசி வரை நம்பிக்கையுடன் பேசி வந்த ரகுபதி, எதிர்பாராமல் தோல்வியைத் தழுவினார். அதற்குப் பிறகு, தன்னுடன் இருந்த யாரோதான் இந்தத் தோல்விக்கு

விரட்டினார் ரகுபதி... சேர்த்துக் கொண்டார் விஜயபாஸ்கர்!

காரணம் என நம்பினார். அதனால் அரசியலில் இருந்து ஒதுங்க விரும்பிய ரகுபதி, ஆன்மிகப் பணிகளில் இறங்கிவிட்டார்.

ரகுபதியிடம் 20-க்கும் மேற்பட்டவர்கள் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தனர். அவர் களிடம், 'இனி, இங்கு யாருக் கும் வேலை இல்லை!’ என அனுப்பிவிட்டார். அதில், ரகுபதியின் உதவியாளர்கள் அன்பானந்தம், ஆறுமுகம், முருகேஷ் மற்றும் அவரின் டிரைவர் அலெக்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ரகுபதி எங்கு சென்றாலும் அவருடனே செல்லும் அன்பானந்தம், தற்போது விராலிமலை அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கரிடமும், டிரைவர் அலெக்ஸ், வடகாடு அ.தி.மு.க. பிரமுகரான ரத்தினத்திடமும் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் திடீரென எதிர் முகாமில்  சரண் அடைந்து இருப்பதுதான் ஏரியாவில் புகைச்சலாக இருக்கிறது...'' என்றார்கள்.

ரகுபதியின் ஆதரவாளர்களை சந்தித்தோம். ''ரகுபதி அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த போது, அந்தக் கட்சியில் இருந்து சில முக்கிய நபர் களையும் தன்னுடன் அழைத்து வந்தார். ஆனால், வந்த சில மாதங்களிலேயே பலர், மறுபடியும் அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டார்கள். ஜாஃபர் அலி போன்றவர்கள் மட்டும்தான் ரகுபதியுடன் இருந்தார்கள். ஜாஃபர் அலிக்கும், மாவட்டச் செயலாளரான பெரியண்ணன் அரசுக்கும் ஆகாது. 2006 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில்

விரட்டினார் ரகுபதி... சேர்த்துக் கொண்டார் விஜயபாஸ்கர்!

போட்டியிட்டுத் தோற்ற ஜாஃபர் அலி, 'என் தோல்விக்கு பெரியண்ணன் அரசுதான் காரணம்!’ என்று குற்றம் சாட்டி னார்.

இந்தத் தேர்தலில், புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டி இட்ட பெரியண்ணன் அரசு தோல்வி அடைந்தார். 'நான்தான் பெரியண்ணன் அரசு தோல்விக்குக் காரணம்’ என்று பகிரங்கமாகவே சொன்னார் ஜாஃபர். இப்போது அவர், அ.தி.மு.க. முகாமுக்குப் போகத் தயாராக இருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் விராலிமலைத் தொகுதியில் ரகுபதி நின்றபோதே, 'நம் தேர்தல் வியூகங்களை எதிர்த் தரப்புக்கு யாரோ சொல்கிறார்கள். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்...’ என்று கட்சிக்காரர்கள் சிலர் ரகுபதியிடம் சொன்னார்கள். அப்போது ரகுபதி, 'என்னுடன் இருக்கும் எல்லாருமே சொக்கத் தங்கம்’ என்று சொன்னார். ஆனால், தேர்தலில் தோற்ற பிறகுதான்,  சில உண்மைகளைக் கண்டுபிடித்தார். அதனால்தான் தன்னிடம் வேலை பார்த்தவர்களில் ஐந்து பேரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டார். அதில் மூன்று பி.ஏ-க்களும் அடக்கம். அந்த மூன்று பேரில் முக்கியப் புள்ளியான அன்பானந்தம்தான், இப்போது விஜயபாஸ்கரிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

வாக்கு எண்ணிக்கை நடந்த சமயம், விராலிமலைத் தொகுதி நிலவரம்பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தாராம் ஜெயலலிதா. ரகுபதியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதால்தான் வேட்பாளரை மாற்றினார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு ரகுபதி மேல் வெறுப்பு. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் விஜய்பாஸ்கர், இப்போது ஜாஃபர் அலியை தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு கொண்டுபோகப் போகிறார்.  இன்னும் சில தி.மு.க-வினரையும் அ.தி.மு.க-வுக்குக் கொண்டுபோகும் முயற்சியில் இருக்கிறார். அதுக்காக அவர் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்!'' என்று சொன்னார்கள்.

இது குறித்து ரகுபதியிடம் பேசினோம். ''நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில், புதுக்கோட்டையில் ஆபீஸ் திறந்தேன். அதன் பிறகும் அந்த அலுவலகத்தில் இருந்துதான் கட்சிப் பணிகளைச் செய்தேன். என்னிடம் வேலைக்கு இருந்தவர்களுக்கு, நான் அதிக சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, 'கூடுதல் சம்பளம் கிடைக்கும் இடத்தில் வேலை இருந்தால், செல்லுங்கள்’ என கூறினேன். அவர்களும் சென்றுவிட்டார்கள். மற்றபடி, நான் யாரையும் சந்தேகப்படவில்லை. தற்போது அந்த அலுவலகத்தில் இருந்துதான் கட்சிப் பணியும், மக்கள் பணியும் செய்து வருகிறேன். தி.மு.க-வில் இருந்து யாரும் அ.தி.மு.க-வுக்குப் போக மாட்டார்கள். ஏனெனில், தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க-வினர் அல்ல!'' என்றார்.

விஜயபாஸ்கரிடம் பேசியபோது, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. அதேபோல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. ஜெயிப்பதற்கான முயற்சிகளை அம்மாவின் ஆணைக்கு இணங்க நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை!'' என்றார்.

நல்லாத்தான் பண்றாங்கப்பா அரசியலு!

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்:  பா.காளிமுத்து  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு