Published:Updated:

ரோடும் இல்லை... பஸ்ஸும் இல்லை!

அரியலூர் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
ரோடும் இல்லை... பஸ்ஸும் இல்லை!

மீபத்தில் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில்... திருமானூர், விளாங் குடி, வெற்றியூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திடீரென்று சாலை மறியலில் குதிக்க, ஏரியாவே ஸ்தம்பித்தது! 

தகவல் அறிந்து அங்கே சென்று சேர்வதற்குள், நாக்குத் தள்ளிவிட்டது. காரணம், தொடர்ச்சியாகப் போய் வரும் சிமென்ட் லோடு லாரிகளின் வேகம் மற்றும் தூசு. சிட்டாகப் பறக்கும் இந்த லாரிகளால் சாலையும் கந்தரகோலமாகிக் கிடக்கிறது.

சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேசினோம். ''இந்த ஏரியாவில் சிமென்ட் ஃபேக்டரிகள் எக்கச்சக்கம். சிமென்ட் மூட்டைகள், சுண்ணாம்பு ஏற்றிப் போகும் லாரிகளில் இருந்து சிதறும் பொருட்கள் கண்ணில் பட்டவுடன், அரிக்கும்; உயிரே போகிற மாதிரி வலிக்கும். சமயத்தில் தூசுப் படலத்தால், சாலையே மறைந்துவிடும். அதனால், தொடர்ந்து ஏகப்பட்ட விபத்துகள் நடக்கின்றன. 10 டன் ஏற்ற வேண்டிய லாரிகளில், 20, 30 டன் வரைக்கும் ஏற்றப்படுகிறது. இவ்வளவு கன ரக வாகனங்களின் பளு தாங்காமல், ரோடும் மோசமாகிவிட்டது. ஃபேக்டரி நடத்துபவர்களிடம் ஒரு சிமென்ட் மூடைக்கு 50 பைசா வாங்கினால்கூட போதும்... அரியலூர் மாவட்டம் முழுக்க சிறப்பான ரோடு போட்டுவிடலாம்...'' என்று அங்கலாய்த்தவர்கள் தொடர்ந்து,

ரோடும் இல்லை... பஸ்ஸும் இல்லை!

''தஞ்சாவூரில் இருந்து திருமானூர் வழியாக அரியலூருக்கு கால் மணி நேரத்துக்கு ஒரு முறைதான்

ரோடும் இல்லை... பஸ்ஸும் இல்லை!

பஸ் வரும். இப்போது அதுவே இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு முறையாகிவிட்டது. சாலை மோசமானதுதான் இதுக்குக் காரணம். பஸ் பழுதாகி விடுகிறது என்று டிரிப்களை கட் பண்ணி விட்டார்கள்!'' என்று வருத்தப் பட்டார்கள்.

அரியலூர் - தஞ்சாவூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்தது, கடந்த தி.மு.க. அரசு. ஆனால், பணிகள் மட்டும் ஏனோ இன்னமும் ஆமை வேகத்தில்தான் நடக்கின்றன. இதுவும் போராட்டத்துக்கு ஒரு காரணம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜிடம் இந்த விஷயத்தைக் கொண்டுசென்றோம். ''சாலை போடும் வேலையை நெடுஞ்சாலை துறையிடம் துரிதப்படுத்தி இருக்கி றோம். அதில் 16.8 கி.மீ மட்டும்தான் அரியலூர் மாவட்டத்தில் வருகிறது. அதிலும் ஒரு கிலோ மீட்டர் சாலை முடிந்துவிட்டது. மீதியை விரைவில் முடிக்க உத்தரவிட்டு இருக்கிறேன். அரியலூரில் இருந்து தஞ்சாவூர் வரைக்கும் சாலை போடுவதற்கு எப்படியும் ஒன்றரை வருடம் ஆகிவிடும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூடுதல் பஸ்விட முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

அடுத்த கட்டமாக லாரிகளை சோதனை செய்து, ஹெவி லோடு ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளுக்கும், படுதா போடாத லாரிகளுக்கும் அபராதம் போடுகிறோம். சாலைகள் சேதமாவதைத் தடுப்பதற்கு லாரிகள் தனியாகவும், மற்ற வாகனங்கள் தனியாகவும் போக, சாலை பிளான் ஒன்று தயாராகி வருகிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் உழைக்கிறோம்...'' என்றார் மக்களின் சிரமங்களை உணர்ந்தவராக.

இனியும் காலம் தாழ்த்தாமல், வேலைகள் நடக்கட்டும்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு