Published:Updated:

ஆவணங்களை அழித்தாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

அருப்புக்கோட்டை கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஆவணங்களை அழித்தாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

ருப்புக்கோட்டை ம.தி.மு.க. பிரமுகர் முருகன் கொலை வழக்கு இத்தனை காலமும் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. இதனை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கடந்த ஆட்சியில் ஏகப்பட்ட அரசியல் குறுக்கீடுகள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இந்த கேஸைத் தூசு தட்டி விசாரிக்கத் தொடங்கி இருப்பதால், தி.மு.க. வட்டாரம் கலங்கிக்கிடக்கிறது! 

அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். ம.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இரவு அருப்புக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி யார், என்ன பகை என்று எல்லோரும் குழம்ப, அப்போதைய அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் சின்னக்கண்ணு, எஸ்.ஐ-

ஆவணங்களை அழித்தாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

யான ராமராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப் படை விசாரித்து, தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் யோக வாசுதேவனை நெருங்கினர்.

ஆனால், அவரைப் பிடிக்க முடியாதபடி அன்றைய ஆளும் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு அமைந்தது. இன்ஸ்பெக்டர் சின்னக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் இருவரும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். மேலும், முருகன் கொலை வழக்கு தொடர்பாக, போலீஸ் தனிப் படையினர் சேகரித்த ஆவணங்கள், செல்போன் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை தி.மு.க. முக்கியப் புள்ளி ஒருவர் போலீஸாரை மிரட்டி அழித்துவிட்டதாகவும் பேச்சு எழுந்தது.

கொலையான முருகனின் மனைவி ப்ரியா, 'தி.மு.க. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரின் தலையீட்டால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயங்குகிறது. எனவே, இந்த வழக்கை

ஆவணங்களை அழித்தாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.?

சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்!’ என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு வழக்கை மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட, விசாரணை தொடங்கியது. ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த தனிப் படை போலீஸார், 'ரியல் எஸ்டேட் பிசினஸ் தகராறு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக முருகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற விவரத்தையும், ரியல் எஸ்டேட் பிசினஸில் முருகனுக்குப் போட்டியாக விளங்கிய தி.மு.க. புள்ளி ஒருவர்தான் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கூலிப் படை மூலம் கொலை செய்ததாகவும்’ சொன்னார்கள்.

எனவே, அப்போதைய சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான வேலையில் தீவிரமானார். இதைக் கேள்விப்பட்ட அப்போதைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., இன்ஸ்​பெக்டரைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரிக்கவே, வழக்கின் வேகம் குறைந்தது. ஜெயராமனுக்கு அடுத்து வந்த இன்ஸ்பெக்டர்களுக்கும் இதே நிலைதான். அதனால், முருகன் கொலை வழக்கு தொடர்பாக யாரையும் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை!

கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அ,தி.மு.க-வின் வைகைச் செல்வன், 'முருகன் கொலை வழக்கில் தொடர்பு உள்ளவர் களைக் கைது செய்ய நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்!’ என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்தே வழக்கின் வேகம் சூடு பிடித்து இருக்கிறது.

முருகன் கொலை வழக்குத் தொடர்பாக அவரதுமாமியார் வசந்தாவிடம் பேசினோம். ''அந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு என் மகள் ப்ரியா சென்னையில் என்னுடன் செட்டிலாகி விட்டார். கொலை நடந்து மூன்று ஆண்டுகளாகியும், கொலை யாளிகள் இன்னும் சுதந்திரமாக நாட்டில் உலவுவதை நினைக்கும்போது மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த ஆட்சியிலாவது எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்!'' என்றார் வருத்தத்துடன்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் பேசினோம். ''முதலில் இந்த வழக்கை விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ், கொலை சம்பவம் தொடர்பான சில முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டனர். அதற்குக் கைமாறாக அவர்களில் சிலருக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிளாட்டு களும் பணமும் கொடுத்து உள்ளனர். இந்தக் கொலை வழக்கில் ரியல் எஸ்டேட் புள்ளியைக் காப்பாற்ற கோடிக்கணக்கான ரூபாய் கை மாறியது. இப்போது இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் யோக வாசுதேவன் உட்பட 10 பேரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் ஆவணங்களை அழித்து, இந்த கேஸை நகரவிடாமல் செய்த தி.மு.க. முக்கியப் புள்ளியையும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்வோம்!'' என்றனர் நம்பிக்கையுடன்!

குற்றம் சாட்டப்படும் யோக வாசுதேவனிடம் பேசினோம்.  ''நானும், முருகனும் உறவினர்கள். எங்களுக்குள் எந்த முன் விரோதமும் கிடையாது. என்னிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம், 'உண்மையான ஆதாரங்கள் இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறேன். முருகன் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரிடம் நான் எந்த உதவியும் கேட்கவில்லை. அவரும் போலீஸாரை மிரட்டவில்லை'' என்றார்.

இதுகுறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., ''அருப்புக்கோட்டை முருகன் கொலை வழக்கில் நான் யாருக்கும் ஆதரவாக செயல் படவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் நடவடிக்கையில் நான் தலையிட்டதாக வேண்டும் என்றே எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இப்போதுதான் ஆட்சி மாறி விட்டதே... போலீஸார் வேகமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்யட்டும்!'' என்று சொன்னார்.

- எம்.கார்த்தி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு