Published:Updated:

'ஓட்டு மட்டும் வேணும்... தண்ணி கொடுக்க மாட்டீங்களா?'- இரவு பகலாகப் போராடும் 9 ஊர் மக்கள்!

தண்ணீர்ப் பிரச்னைக்காக, 9 கிராம மக்கள் இரண்டு நாள்களாகத் தேர்தலைப் புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்கள்.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

காவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடிய காலம் போய், உள்ளூர் விவசாயிகளுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ளது, காமராஜர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரும் பாதையில், நரசிங்கபுரம் என்ற இடத்தில் ஒரு தடுப்பணை உள்ளது. காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்துதான் குடகனாறு நீர்வரத்து ஆரம்பமாகிறது.

தடுப்பணை காரணமாக, காமராஜர் அணைக்கும் குடகனாறு ஆற்றுக்கும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. அதிலும், குடகனாறு மூன்று ஆண்டுகளாக வறண்டுவிட்டது. இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் இணைந்து குடகனாறு மீட்பு இயக்கம் தொடங்கி, தொடர்ந்து போராடிவருகிறார்கள். சமீபத்தில் பெய்த மழை நீர், நீர்த்தேக்கத்திற்கு வருவதற்கு ஏற்ப, குடகனாறு விவசாயிகள், வாய்க்காலின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கிவைத்தனர். ஆனால் இரவு நேரங்களில் சிலர், அந்த மணல் மூட்டைகளை எடுத்துவிடுகிறார்கள்.

ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும், வாய்க்கால் சீரமைப்பும் வேண்டும் என அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், அலவாக்குறிச்சி, பொன்னிமாந்துரை கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகிறார்கள். ஆனால், அதிகாரிகள் இவர்களது கோரிக்கையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. கடந்த 28-ம் தேதி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்த மக்கள், அமைதியான முறையில் போராடிவருகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பொது இடத்தில் இரவு பகலாகத் தங்கி இருந்து போராடி வருகிறார்கள். அங்கேயே சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்துசெல்லாமல், மக்கள் போராடிவருகிறார்கள்.

இன்று போராட்டக் குழுவினரைச் சந்தித்த தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டக்காரர்களை வாழ்த்திப் பேசினார். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நியாயத்துக்காகப் போராடும் உங்களுடன் துணை நிற்பேன்.

போராடும் மக்கள் மத்தியில் பேசும் ஐ.பெரியசாமி.
போராடும் மக்கள் மத்தியில் பேசும் ஐ.பெரியசாமி.

மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எங்கள் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என ஷாமியானா பந்தல் போட்டு மக்கள் கூடியிருக்கிறார்கள். கலெக்டர் வந்தால்தான் கலைந்துபோவோம் எனக் கோஷமிட்டு, ஒப்பாரி போராட்டம் நடத்திவருகிறார்கள்.