Published:Updated:

சூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி

என்ன செய்கிறது சென்னை போலீஸ்?

பிரீமியம் ஸ்டோரி
சூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி

சென்னையின் பரபரப்பு அடங்கத் தொடங்கியிருந்த ராத்திரி நேரம். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அமைதியாக இருந்தது. நோயாளிகளில் சிலர் தூக்கம் வராமல் புரள... டியூட்டி டாக்டர்களும் நர்ஸ்களும் ரவுண்ட்ஸில் இருந்தனர்.

 மூன்றாவது மாடியில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி என்ற பொக்கை ரவி. திடீரென அந்த வார்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் ரவியை அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. துடித்து அடங்கியது ரவியின் உயிர். வந்த கும்பலை தடுத்த ரவியின் சகோதரர் தமிழ்செல்வன், கூட்டாளி சாந்தகுமார் ஆகியோரையும் அரிவாள் பதம் பார்த்தது.

யார் இந்த ரவி? எதற்காக ரவியைக் கொன்றார்கள்?

சூடம் ஏற்றி.. சபதம் போட்டு... வெட்டி சாய்க்கப்பட்ட ரவி

''வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வாயில் பொக்கை விழுந்ததுபோல குழியாக இருக்கும் என்பதால், பொக்கை ரவி என்று அழைப்பார்கள். ஆரம்பத்தில் பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் கூலி வேலை செய்த சமயத்தில், அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டான். அப்போ வியாசர்பாடி நாகேந்திரன் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டது. பிறகு நாகேந்திரனை எதிர்த்து வேலைபார்க்க ஆரம்பித்தான் ரவி. இவர்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி மோதல் வரும். நாகேந்திரனோட இன்னொரு எதிரியான 'காக்காதோப்பு’ பாலாஜியோட சேர்ந்து தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினான் ரவி. நாகேந்திரன் மீது இருந்த பயம் குறைந்து, ரவியைக் கண்டு பயப்படும் நிலை உண்டானது.

ரவியின் வளர்ச்சியைப் பிடிக்காமல் அவனது கூட்டாளிகளைக் கொலை செய்தது நாகேந்திரன் கும்பல். இதற்கு பழிக்குப்பழியாக நாகேந்திரனின் கூட்டாளியான வியாசர்பாடி காமேஷை, ரவி கும்பல் கொன்றது. காமேஷ் கொலை செய்யப்பட்டதும், அவனது நண்பன் பப்லு மற்றும் காமேஷின் தாய், சகோதரி ஆகியோர் ரவியைக் கொலைசெய்ய சபதம் போட்டனர். இந்த சபதம் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

'எந்த வேலையை செஞ்சாலும் அதுல நமக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கணும்’ என்று அடிக்கடி சொல்வது ரவியின் வழக்கம். 'ரவி குறிவைத்தால் அது தப்பாது என்று ரவுடிகள் வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. இதுவரை ரவி செய்த கொலைகள் அத்தனையுமே மிகவும் கொடூரமானது. சென்னையில் நடந்த கொலைகளில் ரவி செய்த கொலை என்றாலே அது தனியாகத் தெரியும். இப்போ அதே மாதிரி அவனை கொலை பண்ணிட்டாங்க...’ என்கிறார் காவல் துறை அதிகாரி ஒருவர்.

இந்த கொலை விவகாரத்தில் எட்டு பேர் சரணடைந்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ''பொக்கை ரவியும் ஒரு கிரிமினல். இதனால் பழிக்குப் பழியாகவே இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் கொலையில் நாகேந்திரனின் கூட்டாளிகளும், கல்வெட்டு ரவி என்பவனின் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது'' என்றார்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ராயப்பேட்டையில், அதுவும் காவல் நிலையத்துக்கு அருகே இருக்கும் மருத்துவமனைக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து, ஏதோ கொத்து பரோட்டோ போடுவதைப்போல கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். என்ன செய்கிறது காவல் துறை?  

- சு.செல்வம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு